தேடுதல்

Vatican News
அலெப்போவில் கிறிஸ்தவர்கள் அலெப்போவில் கிறிஸ்தவர்கள் 

சிரியாவிற்கெதிரான பொருளாதாரத் தடைகள், ஒரு குற்றம்

போருக்குமுன், ஏறத்தாழ 50 சிரியா நாட்டு பவுண்டுகளுக்கு இணையாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு டாலர் 48 ஆக இருந்தது, ஆனால் அது கடந்த வாரத்தில் 700 டாலராக மாறியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிரியாவிற்கெதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள், ஒரு குற்றம், இது,  அந்நாட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக இடம்பெற்ற போருக்குப்பின், மீள்கட்டமைப்பிற்காகப் போராடிவருகின்ற  அந்நாட்டின் அனைத்து மக்களையும் முதலில் பாதிக்கின்றது என்று, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் ஒருவர் குறை கூறினார்.

சிரியாவிற்கெதிரான பொருளாதாரத் தடைகள் பற்றி ஆசியச் செய்தியிடம் கருத் தெரிவித்த, அலெப்போவின் இலத்தீன் வழிபாட்டுமுறை அப்போஸ்தலிக்க பிரதிநிதி ஆயர் Georges Abou Khazen அவர்கள், இவ்வாறு கூறினார்.

சிரியாவில் இடம்பெற்ற போர், பொருளாதார மற்றும், வர்த்தகப் போருக்குப் பாதை அமைத்துள்ளது என்றும், இது எப்போதும், அப்பாவி மக்களைப் பாதிக்கின்றது என்றும் கூறிய ஆயர் Georges Khazen அவர்கள், நாட்டின் நிலைமை மேலும் மோசமடைவதற்குமுன், பொருளாதாரத் தடைகள் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.

சிரியாவின் மீது மேற்கத்திய ஆதிக்கத்தின் முதல் காணக்கூடிய எதிர்மறை தாக்கம், சிரியாவின் உள்நாட்டு பண மதிப்பு குறைந்துள்ளதே என்றும், போருக்குமுன், ஏறத்தாழ 50 சிரியா நாட்டு பவுண்டுகளுக்கு இணையாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு டாலர் 48 ஆக இருந்தது, ஆனால் அது கடந்த வாரத்தில் 700 டாலராக மாறியுள்ளது என்றும், கவலை தெரிவித்தார், ஆயர் Georges Khazen.

சிரியாவில் தற்போதுள்ள பணவீக்கம், பொருளாதாரத்தின் கழுத்தை நெரிக்கின்றது எனவும், இந்நிலையால் ஏற்பட்டுள்ள, பொருள்களின் விலையுயர்வால், சாதாரண மக்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அலெப்போ அப்போஸ்தலிக்க நிர்வாகி கூறினார்.

சிரியாவில், இட்லிப் போன்ற சில பகுதிகளில் போர் தொடர்கின்றது, குர்த் இனத்தவர், துருக்கியர், அமெரிக்கர் மற்றும், அப்பகுதி கூட்டமைப்பினர் வாழ்கின்ற பகுதிகளில் புதிய தாக்குதல்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. (AsiaNews)

21 September 2019, 16:33