தேடுதல்

Vatican News
தன் சீடர்களுடன் உரையாடும் இயேசு தன் சீடர்களுடன் உரையாடும் இயேசு 

பொதுக்காலம் - 25ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

செல்வமின்றி, வாழ்க்கை நடத்துங்கள் என்றோ, செல்வத்தைத் துறந்துவிட்டு, கடவுளுக்குப் பணிவிடை செய்யுங்கள் என்றோ, இயேசு கூறவில்லை. கடவுளுக்கும், செல்வத்துக்கும், சமமான இடத்தைக் கொடுப்பதில்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

ஞாயிறு சிந்தனை 210919

செப்டம்பர் 15, சென்ற ஞாயிறு, துயருறும் அன்னை மரியாவையும் சிரியா நாட்டில் நிலவிவரும் ஆபத்துக்களையும் இணைத்துச் சிந்தித்தோம். துயருறும் அன்னை மரியா என்றதும், உருக்குலைந்த மகனை மடியில் கிடத்தி அமர்ந்திருக்கும் அந்த உருவம், மனதில் ஆழமாய் பதிகிறது. அதே செப்டம்பர் 15ம் தேதியன்று, அனைத்துலக மக்களாட்சி நாளும் கொண்டாடப்பட்டது. செப்டம்பர் 21, இச்சனிக்கிழமை, அகில உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டது.  மக்களாட்சி, உலக அமைதி என்ற உயர்ந்த இலட்சியங்களை, இனி கொண்டாடமுடியுமா என்ற கேள்வி, நம் மனங்களை வாட்டுகிறது. கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்குக் காயப்பட்டு, உருக்குலைந்து கிடக்கும், மக்களாட்சி என்ற மகனை, மடியில் ஏந்தி அழுதுகொண்டிருக்கும் பல தாய்நாடுகளை எண்ணி வேதனைப்படவேண்டிய நாளாக, அனைத்துலக மக்களாட்சி நாள் மாறிவிட்டது.

‘மக்களாட்சி’ என்ற சொல்லுக்கு அளிக்கப்பட்ட பல இலக்கணங்களில், அமெரிக்க அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அளித்த இலக்கணம், அதிகப் புகழ்பெற்றது. மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு அமைக்கப்படுவதே மக்களாட்சி என்று லிங்கன் சொன்ன அந்த இலக்கணத்தை எண்ணிப்பார்க்கும் இவ்வேளையில், அவர் சொன்ன வேறொரு கூற்றும் உள்ளத்தில் பளிச்சிடுகிறது. நம் கவனத்தை ஈர்க்கும் அவரது கூற்று இதுதான்:              எல்லா மனிதரையும் ஒரு சில நேரங்களில் நீ ஏமாற்றலாம். எல்லா நேரங்களிலும் ஒரு சில மனிதரை ஏமாற்றலாம். ஆனால், எல்லா மனிதரையும், எல்லா நேரங்களிலும் உன்னால் ஏமாற்ற முடியாது.

ஏமாற்றுவதுபற்றி லிங்கன் அவர்கள் இவ்வாறு சொன்னதற்குக் காரணம் இருந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில், வங்கிகள், தனியார் வசம் இருந்தன. 1861ம் ஆண்டு உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது, போர்ச் செலவுக்கு, வங்கி உரிமையாளர்களிடம் பணம் கேட்டார் லிங்கன். வங்கி உரிமையாளர்கள் 24 முதல் 36 விழுக்காடு வட்டிக்குப் பணம் தருவதாகச் சொன்னார்கள். இதை ஒரு பகல் கொள்ளை என்றுணர்ந்த லிங்கன் அவர்கள், பாராளுமன்றத்தின் அனுமதியுடன் அரசே பண நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடும் வண்ணம் சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தார். இப்படி அச்சிடப்பட்ட 40 கோடி டாலர் பணத்தைக் கொண்டு அவர் உள்நாட்டுப் போரின் செலவுகளைச் சமாளித்தார். உள் நாட்டுப் போர் முடிந்ததும், லிங்கன் அவர்கள் கொல்லப்பட்டார். அவர் கொண்டு வந்த சட்டமும் மாற்றப்பட்டது.

இதேபோல், ஜான் கென்னடி அவர்கள், அரசுத் தலைவராக இருந்தபோது, 1963ம் ஆண்டு, ஜூன் 4ம் தேதி, வங்கிகளுக்குச் சாதகமில்லாத ஓர் அரசாணையைப் பிறப்பித்தார். அதே ஆண்டு, நவம்பர் 22ம் தேதி, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். லிங்கன், கென்னடி ஆகிய இருவரின் கொலைகளுக்கும் தெளிவான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களது கொலைகளுக்கும், பணம் படைத்த வங்கியாளர்களுக்கும், தொடர்பு இருக்கலாம் என்பது, வரலாற்றில், அவ்வப்போது, அதிக சப்தமில்லாமல் பரிமாறப்படும் கருத்துக்கள்.

இவ்விரு எடுத்துக்காட்டுகளும், Tip of the iceberg என்று சொல்லப்படும் பனிப் பாறையின் மேல் நுனிதான். பணம் அல்லது செல்வம் என்ற பனிப்பாறையில், தெரிந்தும், தெரியாமலும் மோதி, பல நாடுகள் கடன் என்ற கடலில் மூழ்கி வருவது, இன்றைய அவலநிலை.

இன்று உலகின் பல நாடுகளிலும் நடக்கும் மக்களாட்சியை, அந்த ஆட்சியை ஆட்டிப்படைக்கும் பணத்தின் சக்தியைப்பற்றி இந்த ஞாயிறன்று நாம் தீவிரமாகச் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியின் இறுதியில், இயேசு கூறும் சொற்கள், நம்மைத் விழித்தெழச் செய்யும் எச்சரிக்கை: "நீங்கள் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது" (லூக்கா 16: 13)

இயேசுவின் இந்தக் கூற்று, நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராததுபோல் தெரிகிறது. செல்வம் இன்றி, பணம் இன்றி வாழமுடியுமா என்ற அடிப்படை கேள்வி எழுகிறது. கடவுளையும், செல்வத்தையும், எதிரும் புதிருமாக அமைத்து, இயேசு சொன்னதைப் புரிந்துகொள்ள, லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 13ம் இறை வாக்கியம் முழுவதையும் சிந்திப்பது உதவியாக இருக்கும்.

"எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது." (லூக்கா 16: 13) என்று இயேசு கூறியுள்ளார்.

பணமின்றி, செல்வமின்றி, வாழ்க்கை நடத்துங்கள் என்றோ, செல்வத்தைத் துறந்துவிட்டு, கடவுளுக்குப் பணிவிடை செய்யுங்கள் என்றோ, இயேசு கூறவில்லை. கடவுளுக்கும், செல்வத்துக்கும், சமமான இடத்தைக் கொடுப்பதில்தான் பிரச்சனை ஆரம்பமாகிறது. ஒருவருடைய வாழ்வில், எப்போது, அவர் சேர்த்துவைத்துள்ள செல்வம், இறைவனுக்குப் போட்டியாக எழுகிறதோ, அப்போது போராட்டம் துவங்குகிறது. இறைவனா, செல்வமா என்ற இந்தப் போட்டியில், கண்ணால் காணமுடியாத இறைவனைவிட, கண்ணால் காணக்கூடியச் செல்வத்தை நாம் எளிதில் பீடமேற்றிவிடுகிறோம்.

இன்றைய உலகில், செல்வம், எந்தெந்த வழிகளில் பீடமேற்றப்பட்டு வணங்கப்படுகிறது என்பதை சிந்திக்கும்போது, அதிர்ச்சியாக உள்ளது. செல்வர்கள் ஒருசிலர், இவ்வுலகை, எவ்விதம் ஆட்டிப்படைக்கின்றனர் என்பதை, ஜான் பெர்கின்ஸ் (John Perkins) என்பவர் ஒரு நூலில் எழுதியுள்ளார். 2004ம் ஆண்டு வெளியான இந்நூலின் தலைப்பு நம் கவனத்தை முதலில் ஈர்க்கிறது: Confessions of an Economic Hit Man - அதாவது, 'பொருளாதாரக் கொலைசெய்யும் ஒரு மனிதரின் பாவ அறிக்கை' என்பது இந்நூலின் தலைப்பு.

அமெரிக்க செல்வர்களைப் பற்றி பெர்கின்ஸ் அவர்கள் சொல்வது இதுதான்... அமெரிக்காவை எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, ஆட்சியில் இருப்போரை ஆட்டிப் படைப்பதெல்லாம் செல்வம் படைத்த ஒரு சிலரே. இந்த செல்வர்கள், தங்கள் நாட்டில் வளர்த்துக்கொண்ட வர்த்தகம் போதாதென்று, அடுத்த நாடுகளுக்குச் செல்ல முடிவெடுத்தால், அதற்கு, அமெரிக்க அரசும் துணைபோக வேண்டும். அமெரிக்க அரசுத் தலைவருக்கே இந்நிலை என்றால், ஏனைய நாடுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

செல்வர்கள் அடுத்த நாட்டுக்குள் காலடி வைக்க எடுக்கும் முயற்சிகளை, பெர்கின்ஸ் அவர்கள், படிப்படியாக விவரித்துள்ளார். பணத்தைக் காட்டி அடுத்த நாட்டுத் தலைவர்களை விலைபேசும் முயற்சிகள் முதலில் நடைபெறும். இந்த முயற்சி தோற்றுப்போனால், மக்களின் போராட்டம் என்ற பெயரில், அந்நாட்டில், குழப்பங்களை உருவாக்கி, அங்கு அமெரிக்க அரசின் இராணுவத் தலையீடு இருக்கும்படி செய்வது அடுத்தக் கட்டம் என்று பெர்கின்ஸ் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாணியில், தற்போது, இரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி என்று பல நாடுகள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருவது வேதனையான உண்மை.

இவ்விதம் செல்வர்கள், பல நாடுகளில் உருவாக்கியுள்ள, இன்னும் உருவாக்கிவரும் அழிவுகளைப் பற்றி ஜான் பெர்கின்ஸ் அவர்கள் பேசுவதைக் கேட்கும்போது, மனம் அதிர்ச்சியுறுகிறது. செல்வம் மிகுந்த நாடுகளில் வாழும் செல்வர்கள் தங்கள் பணபலத்தைக் கொண்டு, இலத்தீன் அமெரிக்க நாடுகளில், அரபு நாடுகளில், ஆசிய நாடுகளில் புகுந்துள்ளதை நாம் உணரமுடிகிறது. இவ்விதம், வெளிநாட்டிலிருந்து வந்துதான் ஒரு நாட்டின் மக்களாட்சியையோ, அல்லது, அந்நாட்டின் இயற்கை வளங்களையோ அழிக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. நாட்டுக்குள் வாழும் செல்வர்களே, இந்த அழிவை உருவாக்குவதை, ஒவ்வொரு நாட்டிலும் நாம் காணலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், செல்வர்கள் மட்டுமே ஆட்சி நடத்துகின்றனர் எனபதற்கு அனைத்து நாடுகளும் எடுத்துக்காட்டுகள். நாடுகளை ஆட்டிப்படைக்கும் செல்வர்களை, நாளெல்லாம் ஆட்டிப்படைப்பது, அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வம்.

பேராசையில் வாழும் செல்வர்கள், அனைத்தையும், அனைவரையும் தாங்கள் வழிபடும் செல்வத்திற்குப் பலியாக்குவது தொன்றுதொட்டு மனித வரலாற்றில் நிகழ்ந்துவரும் ஒரு சாபம்தான். இறைவாக்கினர் ஆமோஸ் காலத்தில் வாழ்ந்த செல்வர்களும் இறைவனைவிட செல்வத்திற்கு மதிப்பு அளித்ததால், அவர்களுக்கு ஒய்வு நாளும் ஒரு பெரும் சுமையாக மாறியது. இதோ, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் ஆமோஸ் செல்வர்களைப் பார்த்து விடுக்கும் எச்சரிக்கை:

ஆமோஸ் 8: 4-7

வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்: வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்: கோதுமைப் பதர்களையும் விற்கலாம் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

உலகின் அனைத்து நாடுகளிலும் வாழும் ஒரு சில செல்வர்களின் சக்தியால், அவர்கள் வழிபடும் செல்வத்தின் சக்தியால், இன்று உலக அரசுகளும், அகில உலக அமைப்புக்களும் சக்தி இழந்து வருகின்றன.

இதற்கு மாறாக, ஒரு சில செல்வர்கள், வறியோருக்கு சக்தி வழங்கும் வண்ணம் தங்கள் செல்வத்தை பயன்படுத்தி வருகின்றனர். உலக மகா செல்வர்கள் பட்டியலில் பல ஆண்டுகள் முதலிடம் வகித்து வரும் பில் கேட்ஸ் (Bill Gates) அவர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தன் செல்வத்தைக் கொண்டு பல கோடி வறியோரின் துயரங்களைத் துடைத்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். அவரைப்போலவே, வாரன் பப்பெட் (Warren Buffet) என்ற செல்வரும், பில் கேட்ஸ் அவர்களின் அறக்கட்டளையுடன் இணைந்து, தன் செல்வங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்தி வருகிறார். இவர்கள் இருவரும் தங்கள் சொத்துக்களில் பெரும் பகுதி, தர்மச் செயல்களுக்குச் செல்லும் என்றும், தங்கள் பிள்ளைகளுக்கு அல்ல என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர். செல்வத்துக்கு நாம் பணிவிடை செய்கிறோமா அல்லது, செல்வம் நமக்குப் பணிவிடை செய்கிறதா என்ற கேள்விக்கு, இவர்களது வாழ்க்கையிலிருந்து சில பாடங்களைப் பயில முடியும்.

பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, 2008ம் ஆண்டு வரை, 28 பில்லியன் டாலர்களைச் சமூகப் பணியில் செலவழித்திருக்கிறது. வாரன் பப்பெட் அவர்கள், 2006ம் ஆண்டு, உலக வரலாற்றில் அதுவரை எந்தத் தனி மனிதனும் செய்யாத ஒன்றைச் செய்தார். தன் சொத்திலிருந்து 37 பில்லியன் டாலர்களை பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குக் கொடுத்தார். பில் கேட்ஸ், வாரன் பப்பெட்  இருவரையும் புனிதராக்கும் முயற்சி அல்ல இது. ஆனால் உலகின் முதன்மையான செல்வந்தர்கள் தங்கள் செல்வங்களை பகிர்ந்து கொண்டது, அதுவும் ஏழைகளோடு பகிர்ந்து கொண்டது, நம்பிக்கை தரும் செய்திதானே!

இதுபோன்ற நம்பிக்கை தரும் செய்திகள் தொடரவேண்டுமெனில், பீடமேற்றி வணங்கப்படும் செல்வம் பீடத்தை விட்டு நீக்கப்படவேண்டும். நாம் உருவாக்கிய செல்வங்கள் நம்மை ஆட்டிப்படைக்கும் கடவுளாக மாறியுள்ள அந்த மயக்கத்திலிருந்து இவ்வுலகம் மீளவேண்டும். இத்தகைய வேண்டுதல்களை இறைவனிடம் இன்று நம்பிக்கையோடு ஏந்திச் செல்வோம்.

21 September 2019, 13:48