தேடுதல்

Vatican News
இயேசுவின் அழைப்பு இயேசுவின் அழைப்பு 

பொதுக்காலம் - 23ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

ஞாயிறு சிந்தனை 070919

அந்த ஊருக்குப் புதிதாக மாற்றலாகிவந்த பங்கு அருள்பணியாளர், இளையோரை அதிகம் கவர்ந்தார். அவர் அங்கு வருவதற்குமுன், வேறொரு நாட்டில், வறியோர் நடுவே, பல ஆண்டுகள் பணியாற்றிவர். எனவே, வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம், அவர், அந்நாட்டில் தான் பெற்ற ஆழமான அனுபவங்களை, இளையோரிடம் பகிர்ந்துவந்தார்.

ஒருநாள், ஞாயிறு திருப்பலி முடிந்தபின், ஓர் இளம்பெண்ணின் பெற்றோர் அவரைக் காண வந்தனர். அவர்களிருவரும், அருள் பணியாளர் அறைக்குள் நுழைந்ததும், "சாமி, எங்கள் மகள் எடுத்துள்ள முடிவுக்கு நீங்கள்தான் காரணம்" என்று குற்றம் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் மகள் எடுத்த முடிவு என்ன? நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஓர் ஏழை நாட்டில், ஆறு மாதங்கள் உழைக்கச் செல்வதாக, அந்த இளம்பெண், தன் பெற்றோரிடம் கூறினார். அந்த முடிவு, பெற்றோரை நிலைகுலைய வைத்தது. அப்பெண், கல்லூரிப் படிப்பை முடிக்க, இன்னும் ஓராண்டு இருந்தது. அவ்வேளையில், இதுபோன்ற ஒரு முடிவா? என்று திகைத்த பெற்றோர், தங்கள் மகளை இவ்விதம் மாற்றியது, பங்குத் தந்தை என்று எண்ணி, அவரிடம் முறையிட வந்தனர்.

"எங்கள் மகளிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு நீங்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்" என்று அவர்கள் சொன்னதும், பங்குத்தந்தை ஒரு புன்முறுவலுடன், "இல்லை, நீங்கள்தான் பொறுப்பேற்கவேண்டும்" என்று அவர்களிடமே திரும்பக்கூறினார். ஆச்சரியத்துடன் அவரைப்பார்த்த பெற்றோரிடம், "ஆம், உங்கள் மகளுக்கு முதலில் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தியது யார்? நான் இல்லையே" என்று அருள்பணியாளர் சொன்னார். உடனே, அந்தப் பெற்றோர், "எங்கள் மகள், ஒரு சராசரி கிறிஸ்தவப் பெண்ணாக வளரவேண்டும் என்றுமட்டும்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். அதற்காகத்தான் கிறிஸ்துவை அறிமுகப்படுத்தினோம்" என்று சொன்னார்கள்.

கிறிஸ்துவுக்கு அறிமுகமாவது, ஒரு சடங்குதான்; அவரை, அவ்வப்போது, கோவிலிலும், திருப்பலியிலும் சந்தித்தால் போதும்; அவர் பெயரைச்சொல்லி, ஒரு சில தான தர்மங்கள் செய்தால் போதும்; என்று வாழ்வதுதான், பாதுகாப்பான, சராசரி கிறிஸ்தவ வாழ்வு என்று எண்ணியிருக்கும் நமக்கு, இன்றைய நற்செய்தி, ஒரு பெரும் அதிர்ச்சியைத் தர காத்திருக்கிறது. தனக்கு அறிமுகமானவர்கள், தன்னைப் பின்தொடர விழைபவர்கள், சராசரி கிறிஸ்தவர்களாக வாழ்வது கடினம் என்பதை, இயேசு, அழுத்தந்திருத்தமாக கூறியுள்ளார். இன்றைய நற்செய்தியில் அவர் நமக்குத் தருவது ஓர் அதிர்ச்சி மருத்துவம். இதோ, இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகள்:

லூக்கா நற்செய்தி 14 : 25-27

அக்காலத்தில், பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: “என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது”.   

லூத்தரன் சபை பணியாளரும், இறையியலாளருமான Dietrich Bonhoeffer அவர்கள், ஹிட்லர் காலத்தில், ஜெர்மனியில் வாழ்ந்தவர். ஹிட்லரின் அடக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். அதனால், பல துன்பங்களைச் சந்தித்தவர். ஹிட்லரின் இராணுவத்தில் கட்டாயப் பயிற்சியில் சேருவதைத் தவிர்க்க, அவர் அமேரிக்க ஐக்கிய நாட்டுக்குச் சென்றார். ஆனாலும், தன் சொந்த நாட்டைவிட்டு வெளியேறியது, அவர் மனதை உறுத்தியது. மீண்டும் ஜெர்மனிக்குத் திரும்பினார். Bonhoeffer அவர்கள், ஜெர்மனிக்கு வந்தபின், அவரும், அவரது குடும்பத்தினரும், கைது செய்யப்பட்டனர். Flossenberg என்ற சித்ரவதை முகாமில் 1945ம் ஆண்டு, ஏப்ரல் 9ம் தேதி, Bonhoeffer அவர்கள், சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டார்.

Dietrich Bonhoeffer அவர்கள் எழுதிய ஓர் அற்புதமான நூலின் பெயர் 'The Cost of Discipleship'  அதாவது, 'சீடத்துவத்தின் விலை'. Bonhoeffer அவர்கள், இந்நூலை, வெறும் அறிவுப்பூர்வமான விளக்கமாக எழுதவில்லை. அந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள சீடராக, அவரே வாழ்ந்து காட்டினார்.

Bonhoeffer அவர்கள் விரும்பியிருந்தால், ஹிட்லரின் கொள்கைகளுக்கு எதிராக குரலெழுப்பாமல் வாழ்ந்திருக்கலாம். அல்லது, அக்கொள்கைகளை ஏற்றுக்கொண்டதுபோல் நடித்திருக்கலாம். 39 ஆண்டுகளே வாழ்ந்த Bonhoeffer அவர்கள், அமேரிக்கா சென்றபோது, அங்கேயே தங்கியிருந்துவிட்டு, போர் முடிந்தபின், ஜெர்மனிக்குத் திரும்பியிருக்கலாம். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, பல நூல்கள் எழுதி, புகழ் பெற்றிருக்கலாம்.

இதைச் செய்திருக்கலாம், அதைச் செய்திருக்கலாம் என்று, இங்கு கூறப்பட்டுள்ளவை அனைத்துமே, உலக வழியில் எழும் சிந்தனைகள். இச்சிந்தனையின் துவக்கத்தில் கூறப்பட்ட கதையில் வரும் இளம்பெண்ணின் பெற்றோர் விவரித்த 'சராசரி' கிறிஸ்தவராக வாழ்வது எப்படி என்ற கோணத்தில் எழும் எண்ணங்கள். ஆனால், Bonhoeffer அவர்கள், உலகம் சொன்ன வழியைவிட, 'சராசரி' கிறிஸ்தவ வழியைவிட, இயேசு சொன்ன வழியை, இன்றைய நற்செய்தி சொன்ன வழியைத் தேர்ந்தெடுத்தார். இயேசுவின் சீடராய் வாழ்வதற்குத் தேவையான விலையைக் கொடுத்தார். தூக்கிலிடப்பட்டார்.

Dietrich Bonhoeffer அவர்களை இவ்விதம் வாழத்தூண்டிய இயேசுவும், அவர் வாழ்ந்த காலத்தில், உலகத்தோடு ஒத்துப்போயிருந்தால், இளமையிலேயே இறந்திருக்கத் தேவையில்லை. இன்னும் பல ஆண்டுகள் மகிழ்வாய் வாழ்ந்திருந்து, இன்னும் பல்லாயிரம் அற்புதங்களைச் செய்திருக்கலாம்.

ஒவ்வொரு முறையும் அவர் அற்புதம் செய்தபோது, இயேசுவின் புகழ் பெரிதும் பரவியது. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் சொல்வதுபோல், ‘பெருந்திரளான மக்கள்’ இயேசுவை எப்போதும் பின்பற்றிய வண்ணம் இருந்தனர். கூட்டங்கள் சேர்ப்பதும், மக்களை, தன் பக்கம் ஈர்த்து, தன் புகழை வளர்ப்பது மட்டுமே, இயேசுவின் எண்ணங்களாய் இருந்திருந்தால், அந்த மக்கள் கூட்டத்தை எப்போதும் மகிழ்விக்கும் செய்திகளையேச் சொல்லி,  புதுமைகள் செய்து, அவர் சுகமாக வாழ்ந்திருக்கலாம். ஒரு வேளை அவர்களது அரசராகக் கூட மாறியிருக்கலாம்.

இவ்வழிகளை இயேசு பின்பற்றியிருந்தால், இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அவர் ஓரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்திருப்பார். தலைமைத்துவம் என்றால் என்ன என்று இன்றைய உலகின் மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் ஓர் இலக்கணமாக இயேசு விளங்கியிருப்பார். மேலாண்மை நிறுவனங்களில் "இயேசுவின் வழிகள்" என்பது கட்டாயப் பாடமாகவும் இருந்திருக்கும்.

இயேசுவையும், மேலாண்மைப் பாடங்களையும் இணைத்துப் பேசுவது, கேலியாகப் பேசுவதுபோல் தெரியலாம். ஆனால், மேலாண்மைப் பாடங்களில் சொல்லித்தரப்படும் 'திட்டமிடுதல்' என்ற பாடத்தை, இயேசு, இன்றைய நற்செய்தியில், தெளிவாகக் கூறியுள்ளார். “திட்டமிடத் தவறுகிறவர், தவறுவதற்குத் திட்டமிடுகிறார்.” (He who fails to plan, plans to fail) என்பது மேலாண்மை நிறுவனங்கள் சொல்லித்தரும் ஓர் அடிப்படை பாடம்.

வாழ்வில் திட்டமிடுவது மிகவும் அவசியம் என்பது, எல்லாருக்கும் தெரிந்த ஒரு பாடம். நாம் சர்வ சாதாரணமாகப் பேசும்போதே, “சும்மா எடுத்தோம், கவுத்தோம்னு எதையும் செஞ்சிடக்கூடாது. ஆர அமர யோசிச்சுத்தான் செய்யணும்” என்று கூறுகிறோம். ஆர, அமர சிந்திப்பதைப் பற்றி, இயேசு, இன்றைய நற்செய்தியில், ஒரு முறை அல்ல, இருமுறை கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளவற்றை நற்செய்தியிலிருந்து கேட்போம்:

லூக்கா நற்செய்தி 14: 28-32

உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, ‘இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை’ என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?

ஆர அமர சிந்தித்துச் செயலில் இறங்கவேண்டும் என்று மேலாண்மை நிறுவனங்கள் வலியுறுத்தும் பாடங்களுக்கு ஒத்தக் கருத்துக்களைக் கூறும் இயேசு, திடீரென, சற்றும் எதிர்பாராத ஒரு கருத்தையும் இணைக்கிறார். அதுதான், இன்றைய நற்செய்தியின் இறுதியில், அவர் தரும் ஓர் அதிர்ச்சி. இயேசு கூறும் இறுதி வார்த்தைகள் இவை: "அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது." (லூக்கா 14: 33)

இயேசு பயன்படுத்திய 'அப்படியே' என்ற சொல்தான் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. 'அப்படியே' என்று, இயேசு, எதைக் குறிப்பிடுகிறார்? அதற்கு முன் அவர் கூறிய அந்த இரு எடுத்துக்காட்டுகளை... இயேசு கூறுவது இதுதான்... எப்படி திட்டமிட்டு கோபுரம் எழுப்புவீர்களோ, எப்படி திட்டமிட்டு போருக்குச் செல்வீர்களோ, அப்படியே தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்கமுடியாது.

மேலோட்டமாய் இந்த விவிலியப் பகுதியை வாசித்தால், இயேசு அந்த இரு எடுத்துக்காட்டுகளில் கூறிய கருத்தும், அந்த இறுதி வாக்கியத்தில் சொல்வதும் ஒன்றுக்கொன்று முரணான, தொடர்பில்லாத எண்ணங்களைப் போல் தெரியும். ஆனால், இந்த வாக்கியத்தை ஆழமாகச் சிந்தித்தால், Punch dialogue அல்லது Punch line என்று நாம் சொல்லும் பாணியில், இந்த இறுதிச் சொற்கள், நம் முகத்தில் விடப்படும் ஒரு குத்தைப்போல, நம்மை நிலைதடுமாறச் செய்கின்றன; விழித்தெழச் செய்கின்றன. இதைத் தான் இயேசு தரும் அதிர்ச்சி மருத்துவம் என்று குறிப்பிட்டோம்.

ஒரு கோபுரம் கட்டுபவர், இரவும் பகலும் அதைப்பற்றியே எண்ணிக் கொண்டிருப்பார். ஒரு போருக்குச் செல்பவர், கோபுரம் கட்டுபவரைவிட, இன்னும் தீவிர எண்ணம் கொண்டிருப்பார், அத்துடன் துணிவும் கொண்டிருப்பார். அதேபோல், இயேசுவைப் பின்தொடர்வதிலும், இரவும், பகலும், ஒரே தீவிர எண்ணம் வேண்டும், துணிவு வேண்டும் என்பதைத்தான் அந்த 'அப்படியே' என்ற சொல் வலியுறுத்துகிறது.

ஒரு சீடராக, இயேசுவைப் பின்தொடர்வது, ஓரிரவில் தோன்றி மறையும் அழகான, இரம்மியமான கனவு அல்ல. மாறாக, வாழ்நாள் முழவதும், ஒவ்வொரு நாளும், இரவும், பகலும், நம் சிந்தனை, சொல், செயல் இவற்றை நிறைக்க வேண்டிய ஒரு தாகம் என்பதைத்தான் இயேசு இந்த இறுதி வரிகளில் சொல்லியிருக்கிறார்.

பணத்திற்காக, புகழுக்காக, ஏதோ ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக, தூக்கம் மறந்து, உணவை மறந்து, குடும்பத்தை மறந்து உழைக்கும் பலரைப் பார்த்திருக்கிறோம். தாங்கள் ஆரம்பித்ததை வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று அவர்கள் கொண்டுள்ள அந்தத் தீவிரத்தை, வெறியை, தன் சீடர்கள் கொண்டிருக்கவேண்டும் என்று, இயேசு எதிர்பார்க்கிறார்.

செப்டம்பர் 8ம் தேதி, இந்த ஞாயிறு, அன்னை மரியாவின் பிறந்தநாள். இது, ஆரோக்கிய அன்னை திருநாளாக, குறிப்பாக, தமிழகத்தில், வேளாங்கண்ணி திருத்தலத்தின் பெரு விழாவாகச் சிறப்பிக்கப்படுகிறது. இத்திருநாளையொட்டி, இஞ்ஞாயிறன்று நாம் கேட்ட நற்செய்தி, இயேசுவின் சீடர்களாக வாழ்வதில் உள்ள சவாலைகளை முன்வைத்துள்ளது. இயேசுவின் சீடர்களிலேயே முதன்மை இடம் பெறுபவர், அன்னை மரியா. அந்த அன்னையின் பாதங்களில் அமர்ந்து, இயேசுவின் உண்மைச் சீடராக எவ்வாறு வாழ்வது என்ற பாடங்களைப் பயில்வோம்.

இறுதியாக ஓர் எண்ணம்... இந்த எண்ணம், இன்னும் கூடுதலாக அதிர்ச்சியைத் தரலாம்; சவாலாக அமையலாம். இயேசுவின் சீடர்கள் என்று இன்று நாம் பகிர்ந்த சிந்தனைகள் அனைத்தும், அருள்பணியாளர்கள், மற்றும், துறவறத்தாருக்கு என்று எண்ணி, ஒதுங்கிக்கொள்ள முடியாது. இயேசு, இந்த வார்த்தைகளை, தன் சீடர்களுடன் தனித்து இருந்தபோது சொல்லவில்லை. மாறாக, தன்னைப் பின் தொடர்ந்த ‘பெருந்திரளான மக்களை’ நோக்கி, அதாவது, நம் ஒவ்வொருவரையும் நோக்கிச் சொல்கிறார்.

தியாகங்களுக்குத் தயாராக இல்லாத உள்ளங்கள், தன்னைப் பின்தொடர்வது இயலாது என்று கூறும் இயேசுவுக்கு, நமது பதில் என்ன?

07 September 2019, 16:24