ஆயுத வர்த்தகத்தைத் தடைசெய்யக் கோரி பெர்லினில் போராட்டம் ஆயுத வர்த்தகத்தைத் தடைசெய்யக் கோரி பெர்லினில் போராட்டம் 

உலகளாவிய ஆயுத வர்த்தக கண்காட்சிக்கு எதிர்ப்பு

2015ம் ஆண்டிலிருந்து, சவுதி அரேபியாவிற்கு, 470 கோடி பவுண்டு பெறுமான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது பிரிட்டன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இலண்டனில் ExCel பகுதியில் நடைபெறவுள்ள, உலகின் மாபெரும் ஆயுத வர்த்தக கண்காட்சிக்கு, பல்வேறு மதங்களைச் சார்ந்த 500க்கும் அதிகமான விசுவாசிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

ஆயுத வர்த்தக கண்காட்சிகளை நடத்தும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான, DSEI  எனப்படும் உலகளாவிய தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ஆயுதம் என்ற நிறுவனம், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இலண்டனின் Docklandsல் இதனை நடத்தி வருகின்றது.

இவ்வாண்டு செப்டம்பர் 10ம் தேதி முதல், 13ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த ஆயுத கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இச்செவ்வாயன்று, 500க்கும் அதிகமானோர் அவ்விடத்தின் இரு வாயில்களில் அமைதியாக அமர்ந்து, தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னின்று நடத்திய பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பில், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும், பொதுநிலையினர், உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த வர்த்தக கண்காட்சி திறக்கப்படுவதற்கு முந்தைய நாளான செப்டம்பர் 9ம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை அமைதியான செப நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியில், பல உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களின் உற்பத்திகளை காட்சிப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ள அழைப்பு பெற்றுள்ள 50 நாடுகளில், சவுதி அரேபியாவும் ஒன்று. இந்நாட்டிற்கு, பிரிட்டன், 2015ம் ஆண்டிலிருந்து, 470 கோடி பவுண்டு பெறுமான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இந்த ஆயுதங்களில் சில, ஏமனில், அப்பாவி மக்களைக் கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டன என்று செய்திகள் கூறுகின்றன. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2019, 16:00