அமைதி வழியில் எதிர்ப்பை வெளியிடும் ஹாங்காங் மக்கள் அமைதி வழியில் எதிர்ப்பை வெளியிடும் ஹாங்காங் மக்கள் 

ஹாங்காங் ஆயர் - ஒப்புரவுக்காக உழைக்கிறோம்

இளையோருக்கு மிக ஆதரவாக இருந்து வருவதுடன், சமுதாயத்தில் ஒப்புரவுக்காகவும் உழைக்கின்றது ஹாங்காங் திருஅவை

மேரி தெரேசா– வத்திக்கான்

மிக இன்னலான சூழலில் வாழ்கின்ற ஹாங்காங் மக்களுக்கும், குறிப்பாக,  இளையோருக்கும், ஹாங்காங் திருஅவை மிக ஆதரவாக இருந்து வருகின்றது மற்றும், சமுதாயத்தில், ஒப்புரவுக்காக உழைக்கின்றது என்று, ஹாங்காங் துணை ஆயர் Joseph Ha Chi-shing அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறினார்.

ஹாங்காங்கின் தற்போதைய நிலவரம் குறித்து, ஆசியச் செய்திக்குப் பேட்டியளித்த, பிரான்சிஸ்கன் சபையின் ஆயர் Joseph Ha Chi-shing அவர்கள், ஹாங்காங் காவல்துறைக்கும், போராட்டதாரர்களுக்கும் இடையே இடம்பெறும் மோதல்கள் நிறுத்தப்பட உழைத்து வருவதாகவும், இவ்விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் சட்ட வரைவை, இவ்வாண்டு ஏப்ரல் மாதம், ஹாங்காங் அறிமுகப்படுத்தியதையொட்டி, அதற்கு எதிராகவும், சனநாயகத்திற்கு ஆதரவாகவும், பெருமளவில் மக்கள் போராடி வருகின்றனர்.

இதில் பெருமளவிலுள்ள இளையோருக்கு மிக நெருக்கமாக இருந்து, அவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றிவரும் ஆயர் Joseph Ha Chi-shing அவர்கள், திருவிழிப்புச் செபங்கள், தோழமையை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் போன்றவற்றிலும் கலந்துகொண்டு வருகிறார்.

இந்த மோதல்கள் நிறுத்தப்பட அழைப்பு விடுத்துவரும் ஆயர், இந்த சட்ட வரைவு இரத்து செய்யப்பட வேண்டுமென ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், தற்போது, ஹாங்காங்கில் முழுமையான சனநாயக, மற்றும் நீதி நிலவ வலியுறுத்தும் இயக்கமாக மாறியுள்ளது என்றும் கூறினார்.(AsiaNews)  

1842ம் ஆண்டு நடந்த போரில், ஹாங்காங்கின் சில பகுதிகளை பிரிட்டன் கைப்பற்றியது. பின், மேலும் சில பகுதிகளை, 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனா, பிரிட்டனிடம் ஒப்படைத்தது. 1950களில் ஹாங்காங்கின் துறைமுகம் அந்த பகுதியின் முக்கிய வணிக தளமாக மாறியது. அந்த சமயத்தில் ஹாங்காங்கின் பொருளாதாரம் புத்தெழுச்சி பெற்றது.

அதேநேரம், ஏராளமான புலம்பெயர்ந்தோர், வறியோர், மற்றும், சீனாவில் தண்டனைக்கு உள்ளானவர்கள், ஹாங்காங்கிற்குச் சென்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2019, 15:46