தேடுதல்

Vatican News
இந்திய ஆயர் பேரவை ஆண்டு நிறையமர்வு கூட்டம் இந்திய ஆயர் பேரவை ஆண்டு நிறையமர்வு கூட்டம் 

இந்திய ஆயர்களின் அத் லிமினா சந்திப்பு செப்.13-அக்.3,2019

இந்தியாவில் 190 இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் உள்ளனர். தமிழக ஆயர்கள் செப்டம்பர் 17, வருகிற செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான்

உலகெங்குமுள்ள ஆயர்கள், திருப்பீடத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, திருத்தந்தையைச் சந்திக்கும், இந்திய ஆயர்களின் அத் லிமினா நிகழ்வு, செப்டம்பர் 13, வருகிற வெள்ளிக்கிழமையன்று துவங்குகிறது.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள், செப்டம்பர் 13, 17, 26 ஆகிய தேதிகளில் மூன்று குழுக்களாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கின்றனர். வருகிற அக்டோபர் 3ம் தேதி, சீரோ மலபார் வழிபாட்டுமுறை ஆயர்கள், திருத்தந்தையைச் சந்திக்கின்றனர்.

இதில் இரண்டாவது குழுவிலுள்ள, தமிழக ஆயர்கள் செப்டம்பர் 17, வருகிற செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கின்றனர்.

கி.பி. 52ம் ஆண்டில், இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர் புனித தோமையார், இந்தியாவின் கேரளாவில் முதலில் நற்செய்தி அறிவித்து, சென்னை மயிலாப்பூரில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். இவர் இந்தியாவில் விதைத்த நற்செய்தி விதை, 16ம் நூற்றாண்டில், கோவாவில் போர்த்துக்கீசியர்கள் வந்திறங்கியதிலிருந்து வளரத் தொடங்கியது.

2016ம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, ஏறத்தாழ 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், ஏறத்தாழ 2 கோடியே 17 இலட்சத்து 30 ஆயிரம் பேர் கத்தோலிக்கர். அதாவது நாட்டின் மொத்த மக்கள் தொகையில், கத்தோலிக்கர் ஏறத்தாழ 1.6 விழுக்காடாகும். 80 விழுக்காட்டினர் இந்துக்கள். 14 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்.

இந்தியாவில், இலத்தீன் வழிபாட்டுமுறை, சீரோ மலபார் வழிபாட்டுமுறை, சீரோ மலங்கரா வழிபாட்டுமுறை என மூன்று கத்தோலிக்க வழிபாட்டுமுறைகள் உள்ளன. கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடாகம் என, கத்தோலிக்கர் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

11 September 2019, 16:17