தேடுதல்

Vatican News
மறைப்பணியாளர்கள் Krick, Bourry மறைப்பணியாளர்கள் Krick, Bourry  

19ம் நூற்றாண்டு மறைசாட்சிகளைப் புனிதர்களாக்கும்...

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருள்பணியாளர்கள் Nicolas Michael Krick, Augustin-Etienne Bourry ஆகிய இருவரும், 165 ஆண்டுகளுக்குமுன், திபெத்திற்குச் சென்ற வழியில், தற்போதைய அருணாச்சல பிரதேசத்தில் கொல்லப்பட்டனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் மியாவ் மறைமாவட்டத்தில் 165 ஆண்டுகளுக்குமுன் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட இரண்டு பிரெஞ்ச் மறைப்பணியாளர்களைப் புனிதர்களாக உயர்த்தும் நடைமுறைகளைத் துவங்கியுள்ளது, அம்மறைமாவட்டம்.

இவ்விருவரையும் அருளாளர்கள், அதைத் தொடர்ந்து புனிதர்கள் என அறிவிக்கும் மறைமாவட்ட அளவிலான நடைமுறைகள், செப்டம்பர் 14, கடந்த சனிக்கிழமையன்று, அம்மாநிலத்தின் புனித பேதுரு ஆலயத்தில் துவக்கி வைக்கப்பட்டன. 

பாரிஸ் வெளிநாட்டு மறைப்பணி (MEP) கழகத்தைச் சேர்ந்த இவ்விரு அருள்பணியாளர்களும், அருணாச்சல பிரதேசத்தில், முதன்முதலில் கிறிஸ்தவத்தை விதைத்தவர்கள். அடுத்து, இவர்கள், திபெத்தில் கிறிஸ்தவத்தைப் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தனர்.

இவர்கள் திபெத்திற்குச் சென்ற வழியில், சீனாவின் எல்லையிலுள்ள Mishmi பழங்குடியினர் கிராமத்தில், Kaisha எனப்படும் அவ்வினத் தலைவரால், 1854ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி கொல்லப்பட்டனர்.

இந்த மறைப்பணியாளர்கள், சென்னை முதல் கொல்கத்தா வரையிலும் சென்று நற்செய்தி அறிவித்தனர். பின்னர் குவாஹாத்தியில் நற்செய்தியை அறிவித்து, அருணாச்சல பிரதேசம் சென்றனர். இவர்கள் கொலைசெய்யப்படும்போது அருள்பணி Krick அவர்களின் வயது 35 ஆகவும், அருள்பணி Bourry அவர்களின் வயது 28 ஆகவும் இருந்தது.(UCAN)

17 September 2019, 15:51