தேடுதல்

Vatican News
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்  இளையோர் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் இளையோர் 

காலநிலை போராட்டத்தில் இலட்சக்கணக்கான கத்தோலிக்கர்

காலநிலை மாற்றத்தைக் கையாள்வதில் அரசுகளின் அக்கறையற்ற தன்மைக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில், செப்டம்பர் 23, வருகின்ற திங்களன்று நடைபெறவிருக்கும் ஐ.நா.வின் உலக உச்சி மாநாட்டையொட்டி, செப்டம்பர் 20, இவ்வெள்ளியன்று உலகெங்கும் இலட்சக்கணக்கான மக்கள் ‘படைப்பின் காலம்’ பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர்.

காலநிலை மாற்றத்தால் உலகம் எதிர்கொண்டுவரும் நெருக்கடிக்கு எதிராக நாடுகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சுவீடன் நாட்டு வளர்இளம் பருவ கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg) அவர்கள், ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ போராட்டம் என்ற தலைப்பில் துவங்கி வைத்த போராட்டம், இன்று உலகெங்கும் மாணவர் மத்தியில் பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது.

இவ்வெள்ளியன்று நடைபெறும் பேரணிகளில், பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கர், குறிப்பாக, இளையோர் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு, சூழலியல் ஆர்வலரான அருள்பணி எட்வின் காரிகெஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

உலக அளவில் போராடுவதன் வழியாக, காலநிலை நெருக்கடியைக் குறைப்பதற்கு அரசுகளை வலியுறுத்தலாம் என்றும், காரிகெஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இப்புவியின் வெப்பநிலை உயர்வு 1.5 செல்சியுஸ் டிகிரிக்குமேல் எட்டாமல் இருப்பதே உலகினருக்கு நல்லது எனவும் கூறப்பட்டுள்ளது. (UCAN) 

19 September 2019, 15:24