திருத்தந்தையுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு திருத்தந்தையுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாள் துவக்கப்பட்டு முப்பதாண்டுகள்

இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்த கிறிஸ்தவ கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி ஊக்கமளிக்கும் செப்டம்பர் முதல் தேதி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் முதல் தேதியை, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு கிறிஸ்தவ சபை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நாளாக அறிவித்து முப்பதாண்டுகள் நிறைவுறுவதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரின் கடமையை வலியுறுத்தியுள்ளார் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு.

சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற அழைப்பு, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, மாறாக, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும், அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், இயற்கை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என, அனைத்து மக்களுக்கும் உரியது என்று, தன் ஞாயிறு மறையுரையில் உரைத்தார், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயு.

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை சுற்றுச்சூழல் மீது கொண்டுள்ள ஆர்வம், இன்றைய சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு வழங்கும் பதில்மொழியல்ல, மாறாக, இயற்கையைப் பாதுகாக்கவேண்டிய முக்கியத்துவம் குறித்த கிறிஸ்தவக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தி ஊக்கமளிப்பதாகும்  என்று கூறினார் முதுபெரும்தந்தை.

சுற்றுச்சூழல் பாதிப்பின் தீய விளைவுகள் குறித்து அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கின்றபோதிலும், இன்றைய சமூகம், அது குறித்து கவலை கொள்ளாமல், தொடர்ந்து சுற்றுச்சூழலை அழித்துக்கொண்டே செல்வது குறித்த ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு கிறிஸ்தவ சபை முதுபெரும்தந்தை பார்த்தலேமேயு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2019, 15:34