தேடுதல்

Vatican News
கொலம்பியாவில் கொலைகளை எதிர்த்து பேரணி கொலம்பியாவில் கொலைகளை எதிர்த்து பேரணி 

கொலம்பியாவில் பயங்கரவாத யுக்திகள் தவிர்க்கப்பட...

மனித வாழ்வுக்கு பகைவர்களாகச் செயல்படுபவர்களுக்கு எதிராக நம் கண்டனங்களைத் தெரிவிப்போம். பயங்கரவாதம் மற்றும், அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு மாற்று கலாச்சாரத்தை உருவாக்குவோம் - பேராயர் Rueda

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ‘அமைதிக்காக வாரம்’ என்ற தலைப்பில், அமைதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் கத்தோலிக்கத் திருஅவை ஈடுபட்டுவரும்வேளை, அந்நாட்டில் மிகவும் கவலைதரும் அடையாளங்கள் தொடர்ந்து தெரிகின்றன என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

செப்டம்பர் 3, இச்செவ்வாயன்று, 32வது அமைதிக்காக வாரம் என்ற நிகழ்வு துவங்கப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட, Popayán பேராயர் José Rueda Aparicio அவர்கள், Suárez நகராட்சியின் கிராமப்புறத்தில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி, மிகுந்த கவலை தருகின்றது என்று கூறியுள்ளார்.

கொல்லப்பட்டுள்ள ஆறுபேரில், வருகிற அக்டோபர் மாத இறுதியில் நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிடும் இளம் வேட்பாளர் Karina García Sierra அவர்களும் ஒருவர் என்பதைக் குறிப்பிட்டுள்ள பேராயர் Rueda அவர்கள், இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு, இவர்கள் பயணம் செய்த வாகனமும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

இவ்வாண்டு சனவரி முதல் தேதி கடைப்பிடிக்கப்பட்ட உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியில், போரையும், பயங்கரவாத செயல்திட்டங்களையும் தவிர்ப்போம் என்று கூறியுள்ளதை, Popayán உயர்மறைமாவட்டத்திலுள்ள 92 பங்குத்தள விசுவாசிகளும், தங்களின் வார்த்தைகளாக எடுத்து செயல்படுத்துமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றும், பேராயர் Rueda அவர்கள், செப்டம்பர் 03, இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

Cauca பகுதியில் மனித வாழ்வுக்கு பகைவர்களாகச் செயல்படுபவர்களுக்கு எதிராக நம் கண்டனங்களைத் தெரிவிப்போம், புறக்கணிப்பு, கடுஞ்சினம், பயங்கரவாதம், போதைப்பொருள் வர்த்தகம், ஊழல், நாட்டைக் கைநெகிழ்தல் போன்றவற்றிக்கெதிராய்ச் செயல்பட்டு, பயங்கரவாதம் மற்றும், அச்சுறுத்தலுக்கு மாற்று கலாச்சாரத்தை உருவாக்குவோம் என்றும், பேராயர் Rueda அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

04 September 2019, 16:04