ஹாங்காங் கிறிஸ்தவர்கள் ஹாங்காங் கிறிஸ்தவர்கள் 

ஹாங்காங் அமைதிக்கென ஆலயமணி ஒலி

ஹாங்காங்கில் காவல்துறையோடு ஏற்பட்ட மோதலில் காயமடைந்தோர் நலம் பெறவும், அப்பகுதியில் அமைதி திரும்பவும், ஆலய மணி ஒலியுடன் கூடிய செபம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹாங்காங்கின் சனநாயக ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும் என, ஹாங்காங் முழுவதும் உள்ள ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன.

செப்டம்பர் முதல் தேதி ஞாயிறன்று பகல் 1 மணிக்கு, அமைதிக்கென ஆலயமணி என்ற கூற்றுடன், அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஆலய மணி ஒலிக்கப்பட்டது.

21 கத்தோலிக்க கோவில்கள் உட்பட, 44 கிறிஸ்தவ கோவில்கள் தங்கள் ஆலய மணிகளை அமைதிக்கென ஒலிக்கவிட்டன.

மக்களின் மனச்சான்றை தட்டியெழுப்பவும், உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு ஊக்கமளிக்கவும் இந்த ஆலய மணி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர், ஹாங்காங் கிறிஸ்தவ நடவடிக்கையாளர்கள்.

ஹாங்காங்கில் காவல்துறையோடு ஏற்பட்ட மோதலில், காயமடைந்தோர் நலம் பெறவும், அப்பகுதியில் அமைதி திரும்பவும், இந்த ஆலய மணி ஒலி எழுப்பப்பட்ட நேரத்தில் விசுவாசிகள் செபித்தனர்.

சீனாவால் நிர்வகிக்கப்படும் இப்பகுதியில் இடம்பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைந்த ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் இந்த ஆலய மணி ஒலித்தல் இருந்தது என, கிறிஸ்தவ ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

அமைதியை எங்கும் பறைசாற்ற வேண்டும் என்ற கிறிஸ்தவ சபைகளின் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக, இது இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2019, 15:47