தேடுதல்

இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர் அவை மாநாடு இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர் அவை மாநாடு 

இந்தியத் திருஅவையின் சவால்களுக்குத் தீர்வுகள் தேவை

இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவரும் சூழலில், தலத்திருஅவையின் கண்ணோட்டத்தில் மாற்றம் தேவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் வானொலி

இந்தியாவிலுள்ள திருஅவை, தனது வசதியான வாழ்விலிருந்து வெளியேறவும், தனது தொடக்ககால மறைப்பணி மீது, மீண்டும் கவனம் செலுத்தவும் விரும்பினால், அதன் அணுகுமுறையில் அடிப்படை மாற்றம் அவசியம் என்று, இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர் அவை (CPCI) கூறியுள்ளது.  

இந்தியாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவரும் சூழலில், தலத்திருஅவையின் கண்ணோட்டத்தில் மாற்றம் தேவை என்று, இதில் கலந்துகொண்ட அருள்பணியாளர்கள் கூறினர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் இன்டோரில், செப்டம்பர் 17ம் தேதி முதல்,19ம் தேதி வரை மாநாடு நடத்திய, CPCI எனப்படும், இந்திய கத்தோலிக்க அருள்பணியாளர் அவையில், 18 மறைமாவட்டங்களிலிருந்து 40 அருள்பணியாளர்கள் பங்குபெற்றனர்.

இம்மாநாட்டின் இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தொழில்நுட்ப தகவல், நுகர்வு கலாச்சாரம் மற்றும், தன்னல உலகில், ஒன்றிணைந்து வாழவும், பிறரோடு தொடர்பு கொண்டு வாழவும், ஒருவர் ஒருவருக்கு ஆதரவாக வாழவும், அருள்பணியாளர்கள் சவால் விடுக்கப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை அதிகம் எதிர்கொள்ளும், உத்தர பிரதேசம், தமிழ் நாடு, சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவில் அருள்பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ள 218 வன்முறைகளில் பாதிக்கும்மேல், நான்கு மாநிலங்களில், அதாவது உத்தர பிரதேசத்தில் 51, தமிழ் நாட்டில் 41, சட்டீஸ்கரில் 24, ஜார்க்கண்ட்டில் 17 என  இடம்பெற்றுள்ளன. 2014ம் ஆண்டில் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க முயற்சிக்கும் கருத்தியலின் அடிப்படையிலே இந்த வன்முறைகள் இடம்பெறுகின்றன என்று கிறிஸ்தவ தலைவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில், 174 மறைமாவட்டங்களில், ஏறத்தாழ பத்தாயிரம் மறைமாவட்ட அருள்பணியாளர்கள் இறைப்பணியாற்றுகின்றனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2019, 15:03