தேடுதல்

ஜப்பானில் கிறித்தவம் ஜப்பானில் கிறித்தவம் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: ஜப்பானில் கிறித்தவம்-பகுதி-4

1614ம் ஆண்டில், வெளிநாட்டு மறைப்பணியாளர்கள், ஜப்பானைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது.

மேரி தெரேசா – வத்திக்கான்

ஜப்பானில், குற்றவாளிகள் சிலுவையில் அறையப்பட்டு கொலைசெய்யப்படும் காலம் அது. அதேமுறை, அந்நாட்டில் முதன்முதலாக மறைசாட்சியத்தை எட்டிய கிறிஸ்தவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. பிரபு Hideyoshiவின் ஆட்கள், 26 கிறிஸ்தவர்களை, 450 மைல் தூரம் நடந்தே கூட்டிச்சென்று, 1597ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, நாகசாகியில், ஒரு குன்றின் உச்சியில், அவர்களை சிலுவையில் அறைந்து கொலை செய்தனர். இதுவே, நாகசாகி நகரம், ஜப்பானில், உறுதியான கிறிஸ்தவ மையங்களில் ஒன்றாக விளங்கக் காரணமானது. Hideyoshi தனது நிலபரப்பில் எடுத்துவந்த நடவடிக்கைகளுடன், 1592ம் ஆண்டு முதல், 1598ம் ஆண்டு வரை, ஆயிரக்கணக்கான படைகளை கொரியாவுக்கு அனுப்பி, அப்பகுதியை ஆக்ரமித்தார். 1598ம் ஆண்டில் Hideyoshi மரணமடைந்தார். அதற்குப்பின், ஜப்பானில் இரு பிரபுக்களிடையே ஏற்பட்ட பூசல்களால் நாடு பிளவுபட்டது.

1623ம் ஆண்டில் ஜப்பானில் ஆட்சிக்குவந்த மூன்றாவது Tokugawa Iemitsu காலத்தில், கிறிஸ்தவர்க்கெதிரான அடக்குமுறைகள் கடுமையாக்கப்பட்டன. shogun இராணுவத் தளபதியின் பரம்பரையைச் சேர்ந்த Tokugawa Iemitsu காலத்தில், ஜப்பானில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. 1612ம் ஆண்டில், ஏறக்குறைய 3 இலட்சம் கிறிஸ்தவர்கள் இருந்தனர். ஆனால், 1625ம் ஆண்டில், அவ்வெண்ணிக்கை, பாதியைவிட குறைவாக இருந்தது. இவரின் காலத்தில், ஜப்பானிய வரலாற்றில், போர்களும், சமுதாயக் கிளர்ச்சிகளும், அரசியலில் மறைவான சூழ்ச்சிகளும் நடந்தன. ஆயினும், ஜப்பான், ஒன்றிணைப்பு மற்றும், அமைதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவேளை, Sengoku Jidai காலத்தில் ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு வாழ்வு ஒருபோதும் எளிதானதாக அமையவில்லை. அவர்கள், உன்னிப்பாக கவனிக்கப்பட்டனர். ஜப்பானில் கத்தோலிக்கர் ஆதிக்கம் செலுத்த, வெளிநாட்டு மறைப்பணியாளர்களே காரணம் என்ற அச்சமும் பரவத் தொடங்கியது. அத்துடன், ஒரு கிறிஸ்தவர் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட சமயத்தில், ஓர் அருள்பணியாளர், அங்கு சூழநின்ற கூட்டத்தினரிடம், திருஅவைக்குப் பணிந்து நடப்பது, அவர்களின் நாட்டுத் தலைவருக்குப் பணிவதைத் தோற்கடிப்பதாய் இருக்க வேண்டும் எனவும் சொல்லியிருந்தார்.

இந்த நிகழ்வுகளால், Tokugawa, கிறிஸ்தவர்கள் மீது கொண்டிருந்த அச்சத்தால், அவர்களைச் சித்ரவதைப்படுத்தத் தொடங்கினான். 1614ம் ஆண்டில், வெளிநாட்டு மறைப்பணியாளர்கள், ஜப்பானைவிட்டு உடனடியாக வெளியேறுமாறு கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. ஜப்பானில் மனம் மாறிய கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மறுதலிக்குமாறு ஆணையிடப்பட்டனர். ஆயினும், சில மறைப்பணியாளர்கள் அங்கேயே தங்கி இறைப்பணியாற்றினர். அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டவர்கள், தூக்கிலிடப்பட்டனர். ஜப்பானிய கிறிஸ்தவர்கள் மறைந்து வாழத் தொடங்கினர். Shogun குல பரம்பரையில் தொடர்ந்து வந்த அரசர்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திக்கொண்டே இருந்தனர். மேலும், அந்நாட்டில், விவசாயிகள் பொதுவாகவே மிகவும் கேவலமாக நடத்தப்பட்டனர். ஆயினும், Matsukura Shigemasa என்ற நிலப்பிரபு, விவசாயிகளை மிக அதிகமாகவே கொடுமைப்படுத்தினான். பிறப்புக்கும், இறப்புக்கும்கூட அதிகமாக வரிவிதித்தான். வரிகளைச் செலுத்த இயலாதவர்கள், தண்ணீர் நிரப்பப்பட்ட சிறைகளில் எறியப்பட்டனர். மழைக்காப்பான் (raincoat dance mino odori) நடனம் என்பது, அவரின் பிரபலமான தண்டனையாகும். அதாவது, வரிசெலுத்தாதவர்களை, வைக்கோலாலான தண்ணீர் நுழையாத மழைச்சட்டையை உடுத்தச் செய்து, அவர்களை எண்ணெயில் மூழ்க்கி, தீ வைத்தான். சிலநேரங்களில், அவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பிணையல் கைதிகளாக்கினான் அல்லது அவர்களுக்கும் தண்டனை வழங்கினான். 1637ம் ஆண்டில், Shigemasaவின் ஆள்கள், ஒரு விவசாயியின் கர்ப்பம்தரித்திருந்த  மனைவியைத் தாக்கினர். இதனால் கோப வெறிகொண்ட விவசாயிகள் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இறுதியில், 1637ம் ஆண்டில், Kyushuவில் பெரிய புரட்சி ஒன்று வெடித்தது. இந்த வன்முறை புரட்சி, அந்தக் கிராமத்திலிருந்து Shimabara தீபகற்பத்திற்கும் பரவியது. நசுக்கப்பட்ட மக்கள், Shimabara அரண்மனைக்கு அணிவகுத்தனர். ஆயினும் அது தடைசெய்யப்பட்டது.

அதேநேரம், Amakusa தீவுகளிலும் விவசாயிகள் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். பொதுவாக விவசாயிகள் ஆயுதங்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். ஆயினும், புரட்சியாளர்கள் எப்படியோ ஆயுதங்களைப் பெற்றனர். பலர் கற்களையும் தடிகளையும் கொண்டு போராடினர். Matsukura Shigemasaவின் கொடுமைகளைக் கண்ட கிறிஸ்தவர்களும், புரட்சியில் இணைந்தனர். இத்தீவுகளில் ஒன்றைச் சேர்ந்த Amakusa Shiro (1621-1638) என்ற இளைஞர், நாகசாகியில் இயேசு சபையினரிடம் கல்வி கற்றவர். இவர் Oyano தீவில் ஏழைகளின் மாண்பு மற்றும் சமத்துவத்திற்காக குரல் கொடுத்தார். 25 ஆண்டுகளுக்குப்பின், கடவுளின் குழந்தை ஒன்று தோன்றி அது மக்களை மீட்கும் என, அத்தீவில் பணியாற்றி அங்கிருந்த வெளியேற்றப்பட்ட அருள்பணி Marco Ferraro அவர்கள் இறைவாக்காகச் சொன்ன குழந்தைதான் இந்த இளைஞர் என்று மக்கள் நம்பத் தொடங்கினர். இந்த இளைஞரின் தலைமையில் விவசாயிகள், பண்ணையார்களுக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்போராட்டம் இவர்களுக்கு வெற்றியா? தோல்வியா என்பதை அடுத்த வார நிகழ்ச்சியில் காண்போம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2019, 16:27