தேடுதல்

Vatican News
ஜப்பான் மறைசாட்சிகள் ஜப்பான் மறைசாட்சிகள்  

சாம்பலில் பூத்த சரித்திரம்: ஜப்பானில் கிறித்தவம்-பகுதி-3

1597ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, நாகசாகியில், குன்றின் உச்சியில், 26 பேர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டனர். இதுவே, நாகசாகி, ஜப்பானில், வலுவான கிறிஸ்தவ மையங்களில் ஒன்றாக விளங்க காரணமானது.

மேரி தெரேசா – வத்திக்கான்

புனித பிரான்சிஸ் சவேரியார், இந்திய இயேசு சபை மறைப்பணித்தளத்தின் தலைவராகப் பணியாற்றினார். அதனால், இந்தியாவில் இறைப்பணி ஆற்றப்பட்டுவரும் முறை பற்றி அறிவதற்காக, 1551ம் ஆண்டில், ஜப்பானிலிருந்து கோவாவுக்குப் புறப்பட்டார். அதற்கு முன்னர், Bungo பகுதியின் தலைவரான Otomo Sorin (1530-1587) என்பவரைச் சந்தித்தார். புத்தமத துறவிகள், சவேரியார் பற்றி அளித்திருந்த புகாரினால், சவேரியாரைச் சந்திக்க மறுத்திருந்த சோரின், ஒரு போர்த்துக்கீசிய மாலுமி சவேரியார் பற்றி மிக உயர்வாகச் சொன்ன தகவல்களால், அவரைச் சந்திக்கச் சம்மதித்தார். அதாவது, சவேரியார் நினைத்தால், ஐரோப்பிய கலங்களுக்கு, விரும்பிய நேரத்தில் கட்டளையிடும் உயரிய நிலையில் உள்ளவர் அவர் என சோரினுக்குச் சொல்லப்பட்டது. அதனால், தனது நிலப்பரப்பில் நற்செய்தியை அறிவிப்பதற்கு இயேசு சபையினருக்கு அனுமதியளித்தார் சோரின். அத்துடன், அவர்கள் தங்குவதற்கு ஒரு கட்டடத்தையும் அளித்தார் அவர். இவர், 1562ம் ஆண்டில், பொதுநிலை புத்தமத குருவாகவும் மாறியவர். எனவே, துவக்கத்தில் அவரின் தாராளம், மதம் சார்ந்ததாக இல்லாவிடினும், நாளடைவில் மனதை மாற்றி, 1578ம் ஆண்டில் கிறிஸ்தவத்தை அவர் ஏற்றார். புனித சவேரியார் மீது வைத்திருந்த நன்மதிப்பால், திருநீராட்டில், பிரான்சிஸ் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார், Bungo பகுதியின் தலைவரான Otomo Sorin. இவர், கிறிஸ்தவ மற்றும், ஜப்பானிய வரலாற்றில், மாபெரும் செயல் ஒன்றைச் செய்தார்.

சோரின் மனமாற்றம்

சோரின் அவர்களது மனமாற்றம், கிறிஸ்தவத்தைப் புறக்கணித்த Shimazu பிரபுக்கள் குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை. 1582ம் ஆண்டில், இந்த குடும்பத்தினருடன் போரிட்டுக்கொண்டே, சோரின் அவர்கள், இன்னும் இரு கிறிஸ்தவ பிரபுக்களுடன் சேர்ந்து, ஐரோப்பாவுக்கான முதல் ஜப்பானிய அதிகாரப்பூர்வ தூதரகத்தைத் தொடங்கினார். ஜப்பானில் மூன்று ஆண்டுகளாக மறைப்பணியாற்றிவந்த இத்தாலிய இயேசு சபை அருள்பணியாளர் Allesandro Valignano (1539-1606) அவர்களே, இதற்கு உந்து சக்தியாகச் செயல்பட்டவர். அந்த தூதரகம், மனமாறிய நான்கு ஜப்பானியர்களின் பெயர்களால் அழைக்கப்பட்டது. சோரின் குழுவினர், ஐரோப்பிய பயிற்சியாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இரு பணியாளர்களுடன் மக்காவோ, கொச்சி, மற்றும் கோவா சென்றனர். இவர்களுக்கு உறுதுணையாக, அருள்பணியாளர் Valignano அவர்களும் சென்றதாக வரலாற்று ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஐரோப்பிய பயணத்தில், அந்தக் குழு பல்வேறு அரசர்களையும், இரு திருத்தந்தையரையும் சந்தித்தனர். உரோம் நகரில், அவர்களில் ஒருவருக்கு, கவுரவ குடிமகன் விருதும் வழங்கப்பட்டது. 1590ம் ஆண்டில் அவர்கள் ஜப்பான் திரும்பினர். அதன்பின்னர், அருள்பணியாளர் Valignano அவர்கள், அவர்கள் எல்லாரையும், முதல் ஜப்பானிய இயேசு சபை அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்தார்.     

Hideyoshi என்ற ஜப்பானிய பிரபு, ஜப்பான் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார். இவருக்குமுன் ஆட்சி செய்தவரைப் போல, இவரும், ஐரோப்பியர்கள் தனக்கு வழங்கும் பொருள்களிலே ஆர்வமாய் இருந்தார். ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய சோரின் குழுவினர்களை, ஒசாகா அரண்மனையில் வரவேற்ற அவர், அவர்களிடமிருந்து ஐரோப்பாவைப் பற்றிக் கேட்டறிய மிகவும் ஆவலாய் இருந்தார். அதேநேரம், கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள் மீது சந்தேகமும் அவருக்கு எழுந்தது. 1587ம் ஆண்டில், மறைப்பணியாளர்கள் வெளியேற வேண்டுமென்று அரச ஆணையிட்டார் Hideyoshi. ஆனால் அவர், எல்லா ஐரோப்பியர்களையும் வெளியேற்றவில்லை. ஜப்பானில் பிரபுக்கள் பெருமளவில் மதம் மாறியதுடன், அவர்களது உறவுகளையும், பணியாளர்களையும் மனமாற்றுவதில் கவனம் செலுத்தினர். மேலும், கிறிஸ்தவ பிரபுக்கள், தங்களின் குலங்களுக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள் என்ற கவலையும் இருந்தது. இதனால், இயேசு சபையினர் ஜப்பானில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாலும், சிலகாலம் அவர்கள் அமைதி காத்தனர். ஆனால், ஜப்பானுக்கு, அச்சமயத்தில் வந்திருந்த பிரான்சிஸ்கன் மற்றும் ஏனைய துறவற சபையினர், தொடர்ந்து துணிச்சலுடன் நற்செய்தி அறிவிக்கத் தொடங்கினர். இதுவே ஜப்பானில் முதல் மறைசாட்சியம் இடம்பெறக் காரணமானது.

ஜப்பானில் முதல் மறைசாட்சியம்

1596ம் ஆண்டில், Shikoku கடலில் சான் பெஃலிப்பே என்ற இஸ்பானிய கப்பல் சேதமடைந்தது. அதிலிருந்து பட்டாடைகளும், தங்கமும் கொட்டின. உடனே, அப்பகுதி அதிகாரிகள், அந்த பொருள்களை அபகரிப்பதற்கு முயற்சித்தபோது, அந்த கப்பலின் மாலுமி அச்சுறுத்தினார். ஜப்பான், தென் அமெரிக்கா போன்று, இஸ்பானிய காலனியாக மாறிவிடும், மறைப்பணியாளர்கள், இஸ்பெயின் அரசரின் பாதுகாவலர்களாக வந்துள்ளனர். இந்தச் செய்தி, பிரபு Hideyoshi அவர்களுக்கு, சகப்பாய் இருந்தது. ஆதலால், Kansai பகுதியிலிருந்த நான்காயிரம் கிறிஸ்தவர்கள் பற்றி பட்டியல் தயாரித்து, அவர்களில் 24 முக்கிய கிறிஸ்தவர்களைக் கைது செய்தார். படை வீரர்கள், அவர்களைத் தூக்கிலிடுவதற்காக, 450 மைல் தூரம் நாகசாகிக்கு அணிவகுத்துக் கூட்டிச்சென்றனர். வழியில் 12 வயது சிறுவன் உட்பட மேலும் இருவரையும் கைதிகளாக கூட்டிச் சென்றனர். அவர்கள் நாகசாகி நகரம் சென்றதும், கிறிஸ்தவத்தை மறுதலிக்க இறுதியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் உறுதியாய் இருந்தனர். இதனால், 1597ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, நாகசாகியில், குன்றின் உச்சியில், 26 பேர் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டனர். இதுவே, நாகசாகி, ஜப்பானில், வலுவான கிறிஸ்தவ மையங்களில் ஒன்றாக விளங்க காரணமானது.  

18 September 2019, 15:25