புனித பிரான்சிஸ் சவேரியார் புனித பிரான்சிஸ் சவேரியார்  

சாம்பலில் பூத்த சரித்திரம்: ஜப்பானில் கிறித்தவம்-பகுதி-2

Kagoshimaவில் நூறு பேரை கிறிஸ்தவத்திற்கு மனமாற்றினார் சவேரியார். ஆயினும், இந்நிலை ஓராண்டுகூட நீடிக்கவில்லை. எனவே அவர், அங்கிருந்து Hirado சென்றார். அங்கும் மேலும் நூறு பேரை மனமாற்றினார்

மேரி தெரேசா – வத்திக்கான்

புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552), இரு இஸ்பானிய இயேசு சபை அருள்பணியாளர்கள், ஓர் இந்தியர், மற்றும், மூன்று ஜப்பானியருடன், ஜப்பான் நாட்டில் இறைப்பணியாற்றுவதற்கு, மலேசியாவிலிருந்து சீன கப்பல் ஒன்றில் புறப்பட்டார். அக்கப்பல், 1549ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஜப்பான் நாட்டின் Kagoshimaவில் நின்றது. அப்பகுதியிலிருந்த Shimazu அரச குடும்பம் புனித சவேரியார் குழுவை இனிதாக வரவேற்று நற்செய்தி அறிவிக்க அனுமதித்தது. Kagoshimaவில் நூறு பேரை கிறிஸ்தவத்திற்கு மனமாற்றினார் சவேரியார். ஆயினும், இந்நிலை ஓராண்டுகூட நீடிக்கவில்லை. எனவே அவர், அங்கிருந்து Hirado சென்றார். அங்கும் மேலும் நூறு பேரை மனமாற்றிய பின்னர், Kyushu சென்றார். அங்கும் நீண்ட காலம் தங்கியிராமல், கியோட்டோவில் பேரரசரைச் சந்திக்கும் நம்பிக்கையில் புறப்பட்டார். அங்குச் சென்ற வழியில், Yamaguchi மற்றும் Sakai நகரங்களில் குறுகிய காலம் தங்கினார். தலைநகர் கியோட்டோவை அவர் அடைந்தபோது, அங்கு நடந்த உள்நாட்டுப் போர்களின் பாதிப்பால், ஏமாற்றமடைந்தார். பேரரசர் வல்லமையிழந்து, கையில் காசில்லாமல் நாட்டிற்கு வெளியே இருந்தார். மக்களும் அடுத்த தாக்குதல் நடைபெறலாம் என்ற அச்சத்திலும், கவலையிலும் இருந்தனர். இதனால், புனித சவேரியார் வந்த வழியே திரும்பிச் சென்றார்.

புனித சவேரியார் திரும்பிய வழியில், Yamaguchiவில் தங்கினார். அங்கு உள்ளூர் தலைவர்  Ouchi Yoshitaka (1507-1551) அவர்களை, சவேரியாரால் கவர இயலவில்லை. எனினும், மீண்டும் திரும்பும் வழியில் முயற்சி செய்யலாம் என்று நினைத்துச் சென்ற அவர், சிறந்த பட்டு அங்கி அணிந்து, கடிகாரம், திராட்சை இரசம், துணிகள், கண்ணாடி பொருள்கள், மூக்குக் கண்ணாடிகள், தொலைநோக்கு கருவி, மூன்று கைத்துப்பாக்கிகள் ஆகிய அனைத்தையும் எடுத்துச் சென்றார். அந்த உள்ளூர் தலைவர் அப்பொருள்களில் மயங்கி, சவேரியார், அப்பகுதியில் நற்செய்தி அறிவிக்க அனுமதியளித்தார். அத்துடன் Daidojiயில் கைவிடப்பட்ட ஆலயத்தில் தங்குவதற்கும் அனுமதியளித்தார். Yamaguchiவில் நான்கு மாதங்கள் தங்கி நற்செய்தி அறிவித்த பின்னர், Kyushuவின் கிழக்கிலுள்ள Bungo சென்றார். சவேரியார், ஜப்பானில் இறைப்பணியாற்றிய காலம் முழுவதும், அவர் கோவா இயேசு சபை மறைப்பணித்தளத்தின் தலைவராகவே இருந்தார். போர்த்துக்கீசியர்கள், Bungoவில் கப்பலை நிறுத்தியபோது, இந்திய மறைப்பணித்தளத்திலிருந்து ஏதாவது செய்தி வருமென எதிர்பார்த்தார். ஆனால் ஒரு செய்தியும் வரவில்லை. எனவே, இந்தியாவில் தனது பொறுப்புக்களைக் கவனிப்பதற்காக, அதே கப்பலில் கோவா திரும்ப நினைத்தார் சவேரியார். ஜப்பானில், இரண்டரை ஆண்டுகள் நற்செய்தி விதைகளை ஆழமாக வேரூன்றிய பின்னர், அந்நாட்டிற்குப் பிரியாவிடையளித்தார். இந்நாட்டில் கிறிஸ்தவம் நிலைத்து வேரூன்றும் என்ற நம்பிக்கை சவேரியாருக்கு இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டில், சீனாவுக்குச் சொந்தமான Shangchuan தீவில், நோயால் தாக்கப்பட்டு, இறைவனோடு ஐக்கியமானார் புனித பிரான்சிஸ் சவேரியார்.

புனித பிரான்சிஸ் சவேரியார், Bungoலிருந்து கோவாவிற்குத் திரும்புவதற்கு முன், உள்ளூர் தலைவர் Otomo Sorin (1530-1587) அவர்களைச் சந்திப்பதற்கு வாய்ப்பு கிட்டியது. அத்தலைவர், இயேசு சபையினருக்கு அளித்த கட்டடம், அச்சபையின் தலைமை இல்லமானது. பல ஆண்டுகள் சென்று, அத்தலைவரும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறினார். Kyushu பகுதியில், உள்ளூர் தலைவர்கள் அதிகமாக மதம் மாறினர். Omura Sumitada (1533-1587) என்ற தலைவரே முதலில் மதம் மாறியவர். 1561ம் ஆண்டில், இயேசு சபையினர், Sumitada என்வரை அணுகி, அவரது நிலப்பரப்பில் கடவுளின் வார்த்தைகள் அறிவிக்கப்பட அனுமதியளித்தால், அந்த நிலம் மாபெரும் ஆன்மீக மற்றும் உலகப் பொருள்களால் ஆசீர்வதிக்கப்படும் என்று தெரிவித்தனர். அத்தலைவரும் Yokose-ura துறைமுகத்தை இயேசு சபையினருக்கு அளித்தார். 1563ம் ஆண்டில் அவரும் கிறிஸ்தவத்தைத் தழுவினார். Sumitada அவர்கள், தான் தழுவிய புதிய மதத்தில் பற்றார்வம் கொண்டு, பிறமதக் கோவில்களை எரித்தார். இச்செயல், அவரது எதிரி குடும்பத்தினரின் கோபத்தைக் கிளறியது. புரட்சியும் வெடித்தது. Yokose-ura, புரட்சியாளர்களால் எரிக்கப்பட்டது. இதனால், 1570ம் ஆண்டில், Sumitada, இயேசு சபையினருக்கு, நாகசாகி துறைமுகத்தை அளித்தார். அச்சமயத்தில், நாகசாகி, ஒரு சிறிய மீனவக் கிராமமாக இருந்தது. ஆயினும், அன்றிலிருந்து, நாகசாகி, வெளிநாட்டவரின் மையமாக வளர்ந்தது.

அக்காலக் கட்டத்தில், இயேசு சபையினர், Oda Nobunaga (1534-1582) என்ற தலைவருடன் மிகவும் நெருங்கிய உறவு வைத்திருந்தனர். 1568ம் ஆண்டில், ஜப்பானில் கிறிஸ்தவர்களை மிகவும் ஆதரித்தவர் அவரே. இது, போர்த்துக்கீசியரோடு வர்த்தகம் செய்வதற்கும், துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் பெறுவதற்கும் உதவியது. தலைவர் Nobunaga அவர்களுக்கு, இயேசு சபையினரின் எளிமையான வாழ்வு பிடித்திருந்தது. ஆடம்பரத்தில் வாழ்ந்துகொண்டு துன்பங்கள் பற்றிப் போதிக்கும் புத்தமத துறவிகளில் வெளிவேடம் இருப்பதாக அவர் உணர்ந்தார். புத்தமத நிறுவனங்கள் மிது நம்பிக்கையிழந்தார். Hiei மலையிலிருந்த பெரிய புத்தமத ஆலயத்தை எரித்து, ஏறத்தாழ 25 ஆயிரம் பேரைக் கொன்றார்.  ikko-ikki எனப்படும், ஒருவித புத்தமத தீவிரவாத அமைப்புடன் 11 ஆண்டுகள் போரிட்டார். ஆயினும் Nobunaga கிறிஸ்தவத்திற்கு மாறவில்லை. இவரின் அரண்மனை இருந்த Azuchiவில், இயேசு சபையினர், அப்பகுதி பணக்காரச் சிறாருக்கு பள்ளி ஒன்றை அமைத்தனர். அங்கு இலத்தீன், கிறிஸ்தவ வரலாறு, இசை, ஜப்பானிய இலக்கியம் ஆகியவற்றைக் கற்றுக்கொடுத்தனர். எனினும், இந்நிலை மூன்று ஆண்டுகளுக்கு நீடித்தது.   1582ம் ஆண்டில், Nobunaga, அவரது தளபதி ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டார். கைதாகிச் செல்வதை விரும்பாத அவர், தற்கொலை செய்துகொண்டார். Azuchi அரண்மனை, இயேசு சபையினரின் கல்விக்கூடத்துடன் சேர்த்து எரிக்கப்பட்டது. Nobunagaவின் இறப்பினால், கிறிஸ்தவ மறைப்பணியும் கடினமான காலத்தை எதிர்நோக்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2019, 15:59