தேடுதல்

சட்டவிரோத பணப் புழக்க சித்தரிப்பு சட்டவிரோத பணப் புழக்க சித்தரிப்பு 

ஏழை நாடுகளின் வருமானங்கள் திருடப்படுகின்றன

சட்டவிரோதப் பணபுழக்கத்தால், ஏழை நாடுகளின் 416 பில்லியன் டாலர் மதிப்புள்ள வருமானங்கள் திருடப்படுகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

செல்வர்களை மேலும் வளமாக்குவதற்காக, ஏழை நாடுகளின் வருமானத்தைத் திருடும் நடவடிக்கைகளை, ஐ.நா. நிறுவனமும், வளர்ந்த நாடுகளும் சகித்துக்கொள்வது நிறுத்தப்படுமாறு, Christian Aid என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘வளர்ச்சிக்காக பொருளாதாரம்’ என்ற தலைப்பில், நியு யார்க்கில், ஐ.நா. நிறுவன பொது அவையின் உயர்மட்ட அளவிலான கலந்துரையாடலுக்காக உலகத் தலைவர்கள் கூடியுள்ளதையொட்டி, இவ்வாறு, Christian Aid அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

“சட்டவிரோத பணப்புழக்கத்தில் அகப்பட்டுள்ள: முறைகேடான வரி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மனித உரிமைகளுக்கு ஊறுவிளைவிக்கின்றன” என்ற தலைப்பில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Christian Aid அமைப்பு, சட்டத்திற்குப் புறம்பே அல்லது முறைகேடான வழியில் சம்பாதிக்கப்பட்ட பணம், உலகில் எவ்வாறு புழக்கத்தில் உள்ளது, மற்றும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை விளக்கியுள்ளது.

இத்தகைய நடவடிக்கையால், ஆண்டுக்கு, 41 ஆயிரத்து 600 கோடி டாலர் (416 பில்லியன்) மதிப்புள்ள ஏழை நாடுகளின் வருமானங்கள் திருடப்படுகின்றன என்றுரைக்கும் இவ்வறிக்கை,சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் பணப்பரிமாற்றம், மக்களின் மனித உரிமைகளையும், அவர்கள் மாண்புடன் வாழ்வதற்குரிய வாய்ப்புகளையும் பாழடிக்கின்றது என்று குறை கூறியுள்ளது.

ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கு, ஆண்டுக்கு 2.5 டிரில்லியன் டாலர் தேவைப்படுகின்றது என கணக்கிடப்பட்டுள்ளவேளை, இதற்கு, இந்த 416 பில்லியன் டாலர் நிதியைப் பயன்படுத்தலாம் எனவும், Christian Aid அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2019, 14:40