தேடுதல்

Vatican News
ஈராக் முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ ஈராக் முதுபெரும்தந்தை, கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ  (ANSA)

அமெரிக்க, ஈரான் பிரச்சனைகளில், ஈராக் ஈடுபடுவது ஆபத்து

ஈராக் கர்தினால் சாக்கோ - போர் தொடங்கினால், அழிவும், அப்பகுதி முழுவதிலும் பலியாகுவோரின் எண்ணிக்கையும், புலம்பெயர்வுகளும் மேலும் அதிகமாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாடு, தற்போதைய நெருக்கடிகள் மற்றும், பேரிடர்களிலிருந்து மீண்டுவருவதற்கென நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகளில், அனைத்து அரசியல் கட்சிகளும், துணிச்சலான அரசியல் கலந்துரையாடலுக்குத் திறந்த மனதை வெளிப்படுத்துமாறு, அந்நாட்டு முதுபெரும்தந்தை லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் சாக்கோ அவர்களின் இணையதளத்தில், அனைத்து ஈராக் மக்களுக்கும், அரசியல் மற்றும், நிறுவனத் தலைவர்களுக்குமென விடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில், செயல்திட்டம் நிறைந்த ஒப்பந்தங்களை வளர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈராக்கின் வருங்காலத்தை இன்னும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இன்னல்கள், பிரச்சனைகள், மற்றும் ஆபத்துக்கள் மத்தியில், ஒன்றிப்பைக் கொணர முடியும் என்ற தன் திறமைகளில், நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமெனவும், கர்தினாலின் விண்ணப்ப அறிக்கை கூறுகிறது.

அமெரிக்க, ஈரான் பிரச்சனை

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், ஈரானுக்கும் இடையே தற்போது நிலவிவரும் பிரச்சனைகளில், ஈராக்கையும் ஈடுபடுத்துவதுபோல் தெரிகின்றது என்றுரைத்துள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், ஈராக் தற்போது எதிர்கொண்டுவரும் சவால்கள் பற்றியும், அப்பிரச்சனைகளில் ஈராக் ஈடுபட்டால் விளையும் தீமைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாத வன்முறை மற்றும், இஸ்லாமிய அரசின் ஆதிக்கத்தால் அனுபவித்த இருண்ட ஆண்டுகள் போன்ற இக்கட்டான நிலைகளிலிருந்து மீண்டுவர ஈராக் முயற்சித்து வருவது பற்றியும் கூறியுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், போர் தொடங்கினால், அழிவும், அப்பகுதி முழுவதிலும் பலியாகுவோரின் எண்ணிக்கையும், புலம்பெயர்வுகளும் மேலும் அதிகமாகும் எனவும் எச்சரித்துள்ளார். (AsiaNews)  

04 September 2019, 15:54