தேடுதல்

Vatican News
தீய ஆவி பிடித்த சிறுவனை இயேசு குணப்படுத்தல் தீய ஆவி பிடித்த சிறுவனை இயேசு குணப்படுத்தல் 

விவிலியத்தேடல்: தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல் - 1

வாழ்க்கை எனும் பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் இன்ப துன்ப அலைகளால் அலைக்கழிக்கப்படும்போது நங்கூரமாய் நம்மை நிலை நிறுத்தக்கூடியது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை.

விக்டர் தாஸ் - வத்திக்கான்

விவிலியம்-புதுமைகள் 170919

ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள 12 பொதுவான புதுமைகளில், 11வது புதுமையான  தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதலில் இன்று நம் தேடல் பயணம் துவங்குகிறது.

இது ஒரு முக்கியமான நிகழ்வு, அற்புதங்களைச் செய்வதில் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை விளக்குகின்ற நிகழ்வு.  நம்பிக்கை என்பது மனித வாழ்வின் நங்கூரம் போன்றது. வாழ்க்கை எனும் பயணத்தில் நாம் எதிர்கொள்ளும் இன்ப துன்ப அலைகளால் அலைக்கழிக்கப்படும்போது நங்கூரமாய் நம்மை நிலை நிறுத்தக்கூடியது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை.

இன்று நாம் சிந்திக்கும் தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல்  நிகழ்வில் தன்னுடைய மகன்மேல் ஒரு தந்தை கொண்டிருக்கும் ஆழ்ந்த அன்பும் அக்கறையும் ஒருபுறம் இருந்தாலும், தன்னுடைய மகனை தீய ஆவியின் பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற தீர்க்கமான முயற்சியில் அவர் கொண்டிருந்த தளராத நம்பிக்கையை நாம் காணமுடிகிறது.

மாற்கு நற்செய்தியாளர் அந்த தந்தையின் வார்த்தைகளை இவ்வாறாக பதிவு செய்கிறார். "போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன். அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை". (மாற்கு 9:17,18)

இங்கே இயேசுவை தேடிவந்தவர் இயேசு அங்கு இல்லாத சூழ்நிலையில் அவருடைய சீடர்களிடம் உதவி வேண்டி சென்ற மனநிலை இன்றைய மனிதரின் எதார்த்தமான மனநிலையையும், எப்படியாவது தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிடவேண்டும் என்ற தீராத தாகத்தையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.      

நம்பிக்கை என்பது நமக்காக நாம் கொள்ளும்போதும் அதே நம்பிக்கையை நாம் பிறருக்காக கொள்ளும்போதும் அது பலன் தருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நம்பிக்கையின் மகத்துவம் என்பது நம்பிக்கையாளர் தான் கொண்ட நம்பிக்கையால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பதும்  அதேபோல் நம்பிக்கையாளரால் எல்லாவற்றையும் பெறவும் முடியும் என்பதுமாகும். 

விவிலியத்தில் நாம் பல எடுத்துக்காட்டுகளை கண்ணோக்கலாம். கானானியப் பெண்ணின் நம்பிக்கை, பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கும் தன்னுடைய மகளுடைய வாழ்வில் பலன் தருகின்ற நிகழ்வு (மத்தேயு15:22-28), முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி கொண்டு வந்த சிலரின் நம்பிக்கை முடக்குவாதமுற்றவருக்கு பலன் தருகின்ற நிகழ்வு (மத்தேயு 9:2), தொழுகைக் கூடத் தலைவர் யாயிர்  கொண்ட நம்பிக்கை சாகுந்தறுவாயில் இருந்த அவருடைய மகளுக்கு பலன் தருகின்ற நிகழ்வு  (மாற்கு 5:36).   இவையனைத்தும் ஒருவரின் நம்பிக்கை அடுத்தவரின் நலனில் எப்படி பலன் கொடுக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் தன்னுடைய ஆழமான நம்பிக்கையால் நலம் பெற்ற நிகழ்வு (மத்தேயு 9:22),  பார்வையற்றோர் இருவர் தங்களுடைய நம்பிக்கையால் நலம் பெற்ற நிகழ்வு (மத்தேயு 9:28,29), திமேயுவின் மகன் பார்வையற்ற பர்த்திமேயு தன்னுடைய அசைக்கமுடியாத  நம்பிக்கையால் நலம் பெற்ற நிகழ்வு (மாற்கு 10:52), பாவியான பெண் தன்னுடைய நம்பிக்கையால் மீட்பை பெற்றுக்கொண்ட நிகழ்வு (லூக்கா 7:50), பத்து தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெற்ற நிகழ்வு (லூக்கா 17:19),  இவையனைத்தும் நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையால் தங்கள் வாழ்வில் பலன் பெற்றதை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நம்பிக்கையும், நம்பிக்கையின் விழுமியங்களும் இருக்கின்றன. தன்னிடம் உள்ள நம்பிக்கையைப் பயன்படுத்தும் ஒவ்வொரு மனிதரும் அதன் சக்தியை அதிகரிப்பதோடு மேலும் மேலும் அதிகமாகப் பெற்றுக்கொள்கிறார்.

ஒரு காலத்தில் ஒரு நற்பண்புடைய பெண் ஒருவர் இருந்தார்.   அவர்  அவருடைய எளிய நம்பிக்கைக்காகவும், வாழ்க்கையில் பல சோதனைகளுக்கு மத்தியிலும் தெளிந்த மனதுடன்  அமைதியாக இருப்பதற்காகவும் அவர் வாழ்கின்ற பகுதியில் நன்கு அறியப்பட்டவர்.  இதை கேள்விப்பட்ட, தூரத்தில் வசிக்கும் மற்றொரு பெண்,  “நான் போய் அந்தப் பெண்ணைப் பார்த்து, அவளுடைய புனிதமான, மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று எண்ணினாள். ஒரு நாள் அந்த பெண்ணிடம் சென்று அந்தப் பெண்ணைப்பார்த்து, “உன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாக பேசுகிறார்களே, நீ மிகுந்த நம்பிக்கையுள்ள பெண்ணா?” என்று கேட்டாள். அவரோ “இல்லை,” என்று பதிலளித்து தொடர்ந்து “நான் மிகுந்த நம்பிக்கையுள்ள பெண் அல்ல;   நான் சிறிதளவு நம்பிக்கை மட்டுமே கொண்டுள்ள பெண்; ஆனால் அந்த சிறிதளவு நம்பிக்கையை நான் எல்லாம்வல்ல இறைவன் மீது வைத்திருக்கிறேன்” என்றுச்சொன்னார்.

நம்பிக்கையின் பலன் என்பது அதை நாம் யார் மீது வைக்கிறோம் என்பதைப் பொருத்தும் அமைகிறது. நிலையான, அசைக்கமுடியாத நம்பிக்கையை நாம் மனிதரில், இவ்வுலகின் பொருட்கள் மீது வைப்பதும், மேலும் அதற்கான பலனை எதிர்பார்ப்பதும் மூடத்தனமானது. ஏனெனில், அவைகள் நிரந்தரமற்றவை, மாறக்கூடியவை. நிலையான ஒருவரால் மட்டுமே நிரந்தரத்தை கொடுக்கமுடியும்.  நிலையானவர் அல்லது என்றும் மாறாதவர் என்றால் அது இறைவன் மட்டுமே.

திருப்பாடல்கள் 102 : 27 “நீரோ மாறாதவர்! உமது காலமும்; முடிவற்றது”  என்று திருப்பாடல் ஆசிரியர்  இறைவனின் நிலையான தன்மையை தெளிவுபடுத்துகிறார்.

இறைவன் தன்னுடைய மாறாத்தன்மையை மலாக்கி 3 : 6 "யாக்கோபின் பிள்ளைகளே, ஆண்டவராகிய நான் மாறாதவர். அதனால்தான் நீங்கள் இன்னும் அழியாதிருக்கிறீர்கள்” என்று இஸ்ரயேல் மக்களுக்கு இறைவாக்கினர் மலாக்கி வழியாக வெளிப்படுத்துகிறார்.

எச்சூழலிலும் எந்நேரத்திலும் எப்பொழுதும் மாறாதவர் இறைமகன் இயேசு கிறிஸ்து என்று எபிரியேர்க்கு எழுதப்பட்ட மடல் எடுத்தியம்புகிறது.  எபிரேயர் 13 : 8  “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்”.

என்னை கவர்ந்த, எனக்கு மிகவும் பிடித்த ஒரு செபம் “இயேசுவின் திரு இருதயமே எனது நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்”.  வாழ்வின் எல்லா வேளைகளிலும் எனக்கு ஆறுதலும் தேறுதலும் தருகின்ற ஒரு செபம். ஒரு குருமானவனாக நான் உச்சரித்த இந்த செபத்தை ஒரு குருவாக நான் உச்சரிக்கும் போது நான்  நிறைய மாற்றங்களை உணர்கிறேன். பணிவாழ்விலும் சரி, என் அன்றாட வாழ்விலும் சரி ஆறுதலையும் அரவணைப்பையும் அதிகமாகவே என்னுள் ஏற்படுத்துகின்ற ஒரு உன்னதமான செபம்.

கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளம் இறைவன் நம்மை அன்புசெய்கிறார் என்பதாகும். எங்கு உண்மையான அன்பு இருக்கிறதோ அங்கே அனைத்தையும் நாம் எதிர்பார்க்கலாம்.  எனக்காக எதையும் செய்ய ஒருவர் இருக்கிறார் என்ற மனநிலைதான் நம்பிக்கையின் பிறப்பிடமாக இருக்க முடியும். இயேசுவின் பணிவாழ்வில் அத்தகைய ஒரு மனநிலையை மக்கள் மத்தியில் அதுவும் ஏழை எளிய மக்களில் ஏற்படுத்தியிருந்தார் என்பது நிதர்சன உண்மை.

நாம் ஏற்கெனவே நம்முடைய தேடுதல் பயணத்தில் சிந்தித்த, பன்னிரு ஆண்டுகளாய் தன்னை வதைத்துவந்த இரத்தப்போக்கு நோயை குணப்படுத்த எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு இறுதியாக இயேசு குணமாக்குவார்; அவரது ஆடையின் ஓரங்கள் போதும் தன்னைக் குணமாக்குவதற்கு, என்ற அபார நம்பிக்கையுடன் இயேசுவை தேடி வந்து நலம் பெற்ற பெண் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஒத்தமை நற்செய்தியான மத்தேயு நற்செய்தியில் தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல்  நிகழ்வில் மத்தேயு நற்செய்தியாளர் இவ்வாறாக பதிவு செய்கிறார் “ …மக்கள் கூட்டத்தினரிடம் வந்தபோது ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள் படியிட்டு, "ஐயா, என் மகனுக்கு இரங்கும்; அவன் வலிப்பு நோயால் பெரிதும் துன்புறுகிறான். அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் விழுகிறான். உம் சீடர்களிடம் அவனைக் கொண்டுவந்தேன்; அவனைக் குணமாக்க அவர்களால் முடியவில்லை" (மத்தேயு 17:14,15) என்று அந்த தந்தை தன்னுடைய இயலாத்தன்மையை வெளிப்படுத்துவது போன்று மத்தேயு குறிப்பிடுகின்றார்.

இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் நற்செய்தியாளர்கள் லூக்கா மற்றும் மாற்கு குறிப்பிடாத ஒன்றை மத்தேயு நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். அந்த தந்தையானவர் இயேசுவின் முன் முழந்தாள் படியிட்டு தன்னுடைய விண்ணப்பத்தை வைக்கின்றார்.  இதிலிருந்து, அந்த தந்தை தன்னுடைய மகனை தீய ஆவியின் பிடியிலிருந்து விடுவிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதையும் தன்னுடைய முயற்சிகள் பலன் கொடுக்காத சூழ்நிலையில் தன்னுடைய இயலாமையை உணர்ந்து இறுதியில் இயேசுவைத்தேடி வந்திருக்க வேண்டும் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது.

அதிகாரம், அந்தஸ்து, செல்வம், ஆள்பலம்  மற்றும் பணபலம் இவைகள் இருந்தால் போதும் என்னால் எதையும் சாதிக்கமுடியும் என்ற மமதையான மனநிலையும், அறிவியலின் அதிநவீன வளர்ச்சியினால் அனைத்தையும் செய்யமுடியும் என்ற ஆணவ மனநிலையும், மேலோங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில், “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என்பதை நாம் அவ்வப்போது நினைவூட்டிக்கொள்ள அழைக்கப்படுகிறோம்.

17 September 2019, 13:24