தேடுதல்

சீடர்களுடன் உரையாடும் இயேசு சீடர்களுடன் உரையாடும் இயேசு 

விவிலியத்தேடல்: தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல் - பகுதி 2

எதைச் செய்தாலும் இறைத்துணையோடு செய்தலும், எதைத் தொடங்கும்போதும் இறைஉதவியோடு தொடங்குதலும், எதைத் தேடினாலும் இறைவிருப்பம் அறிந்து தொடர்தலும் என, இறைவனை மையப்படுத்தி வாழ வேண்டும்

விக்டர் தாஸ் - வத்திக்கான்

தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல் - பகுதி 2

தன்னுடைய மகனை தீய ஆவியின் பிடியிலிருந்து விடுவிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட  அந்த தந்தை தன்னுடைய முயற்சிகள் பலன் கொடுக்காத சூழ்நிலையில் தன்னுடைய இயலாமையை உணர்ந்து இறுதியில் இயேசுவைத்தேடி வந்திருக்க வேண்டும் என்ற கோணத்தில்  சிந்தித்த நாம், அதன் தொடர்ச்சியாக அதே இயலாமை என்ற சூழ்நிலையை, அல்லது, இயலாத்தன்மையை அனுபவித்த இயேசுவின் சீடர்களையும் கருத்தில்  கொண்டு நம் தேடுதல் பயணத்தை தொடருவோம்.

ஒத்தமை நற்செய்திகள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள, தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல்  நிகழ்வானது, இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்விற்க்கு அடுத்ததாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறிய போது, அதாவது இயேசு மற்ற சீடர்களுடன் இல்லாதபோது, அந்த தந்தை, சீடர்களிடம் உதவிக் கோரியிருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த தீய ஆவியை ஓட்டிவிட, சீடர்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்திருக்க வேண்டும். அதுவும், எப்பொழுதும் குறைக்காணும் நோக்குடன் தங்களை பின்தொடரும் மறைநூல் அறிஞர்கள் மத்தியில் எப்படியாவது அந்த தீய ஆவியை ஓட்டிவிட வேண்டும் என்று எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், சீடர்களால் அதை செய்யமுடியவில்லை.

இச்சூழ்நிலையை சிந்திக்கும்போது ஓர் ஆங்கில சொல்லாடலை நினைத்துப்பார்க்க தோன்றுகிறது. “With God I am a Hero; Without God I am a Zero”. உச்சரிப்பதற்கு சாதாரணமான ஒரு சொல்லாடல் இது, ஆனால், உள்ளுணர்ந்து அனுபவித்தவர்களுக்கு  மட்டும்தான் தெரியும், இந்த சொல்லாடலின் உண்மையான அர்த்தம் என்னவென்று. இறைவனும், இறைபிரசன்னமும், இறைச்சித்தமும், இறை உதவியும்  இல்லையென்றால், நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இயேசு இல்லாத நேரத்தில் சீடர்கள் எதிர்கொண்ட தோல்வி, சீடர்களின் இயலாத்தன்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், நம்முடைய வாழ்விற்கு ஒரு மிகச்சிறந்த பாடமாகவும்  அமைகிறது. எதைச் செய்தாலும் இறைத்துணையோடு செய்தலும், எதைத் தொடங்கும்போதும் இறைஉதவியோடு தொடங்குதலும், எதைத் தேடினாலும் இறைவிருப்பம் அறிந்து தொடர்தலும், இப்படியாக, இறைவனை மையப்படுத்தி வாழ வேண்டும் என்பதே அந்த பாடம். இறைவனை அடித்தளமாக, மையமாகக்கொண்டு நம் வாழ்வு அமையும்போது, எல்லா வெற்றிகளையும் நமதாக்கிக்கொள்ள முடியும் என்பது மாறாத உண்மை.

தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல்  நிகழ்வில், சீடர்கள் தங்களது இயலாமையை எண்ணி நாணி, வெட்கி தலை குனிந்திருக்க வேண்டும்.  எப்பொழுது, எப்படிக் குறைக் காணலாம் என்ற நோக்கத்துடன் இருந்த மறைநூல் அறிஞர்கள்,  கண்டிப்பாக சீடர்களை எள்ளி நகையாடியிருக்க வேண்டும்.  இந்த அவலமான சூழ்நிலையில், நெருக்கடியான வேளையில், இயேசுவின் வருகை, இயேசுவின் பிரசன்னம், சீடர்களுக்கு உற்சாகத்தையும் ஆறுதலையும் கொடுத்திருக்க வேண்டும்.

ஒத்தமை நற்செய்தியாளர்கள் லூக்கா மற்றும் மத்தேயு, தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமடைதல்  நிகழ்வை பதிவு செய்யும்போது, தீய ஆவி பிடித்த சிறுவனின் தந்தை தாமாகவே இயேசுவிடம் உதவி வேண்டுவதுபோன்று குறிப்பிட்டுள்ளனர்.  ஆனால், ஒத்தமை நற்செய்தியாளர்கள் லூக்கா மற்றும் மத்தேயு குறிப்பிடாத ஒன்றை மாற்கு நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார்.  “அவர்கள் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர். மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர். அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று கேட்டார்” என்று மாற்கு நற்செய்தியாளர்  பதிவு செய்கிறார். 

 இங்கே இரண்டு விதமான பார்வைகளில் நம் சிந்தனையை செலுத்தலாம். முதலாவது, மாட்சிமை பொருந்திய நிகழ்வான இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வில், தான் இறைவன் என்பதையும், எல்லாம் வல்லவர் என்பதையும், தன்னுடைய சீடர்களுக்கு வெளிப்படுத்தி ஓர் உன்னதமான தருணத்தை அனுபவித்த போதும்;  பின்பு மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்துகின்றபோதும் இயேசுவின் மனநிலை மற்றும் செயல்பாடு  எப்படிப்பட்டதாக  இருக்கிறது  என்பது முதலாவது சிந்தனை.

இயேசு தோற்றமாற்ற நிகழ்விற்கு பிறகு, உடனடியாக தன்னுடைய இறப்பை குறித்து சீடர்களுடன் உரையாடுவதை நாம் நற்செய்தில் காண்கிறோம். மத்தேயு 17:9 - அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, "மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது" என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

இது எதை சுட்டிக்காட்டுகிறது என்றால் இயேசு எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய இலக்கு மாறாதவராக இருக்கிறார் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது. தான் இறையாற்றல் பெற்றவர்  என்றாலும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யக்கூடிய வல்லமை பெற்றவர் என்றாலும், தன் விருப்பம் நாடாமல் தந்தையின் விருப்பம் எது என்பதையும், அதை நிறைவேற்றுவதில் தனக்கிருக்கும் தாகத்தையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

ஆகவே, இந்த முதல் சிந்தனை நமக்கு விடுக்கும் அழைப்பு, இவ்வுலக வாழ்வில் நம் ஒவொருவரின் இலக்கு அறிந்து, நெறி தவறாது பயணிக்க வேண்டும் என்பதும்; இயேசுவை போல இலக்கு நோக்கிய பயணத்தில் எதிர்வரும் இன்பத்துன்பங்களை எதார்த்தமுடன் அணுகி, இலக்கை முன்னிறுத்தி முனைப்போடு செயல்படவேண்டும் என்பதுமாகும்.

இரண்டாவதாக, இயேசு தன்னுடைய சீடர்கள் மேல் கொண்டிருந்த கரிசனையும் அக்கறையும், நம்முடைய பார்வையை அதன் மேல் பதிக்க அழைக்கிறது.

பேதுரு, யோவான், மற்றும், யாக்கோபுடன் இயேசு, மற்ற சீடர்களிடம் வந்தபோது, பெருந்திரளான மக்கள் மற்ற சீடர்களை சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர்கள் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.  இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று கேட்கிறார். இங்கே, இந்த நிகழ்வில், சீடர்கள் மேல் இயேசு கொண்டிருந்த உண்மையான அக்கறை வெளிப்படுவதை  நாம் கண்டுகொள்ள முடிகிறது.

சட்ட வல்லுநர்கள், மறைநூல்  அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் இயேசுவோடு தர்க்கம் செய்வதையும் வாதம் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர் என்பது இயல்பான ஒன்று.  இந்த சூழ்நிலையில் இயேசு தான் இல்லாத வேளையில் தன்னுடைய சீடர்களுடன் மறைநூல் அறிஞர்கள் வாதாடுவதைக் கண்டு தாமாகவே முன்வந்து அதைப்பற்றி கேட்கிறார். சீடர்களுக்கு சார்பாக, அவர்களுடைய வாக்குவாதங்களுக்கு காரணம் கண்டு, பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் நோக்கத்துடன் இயேசு "நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று கேட்டிருக்க வேண்டும் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். இயேசு தன்னுடைய உடனிருப்பை,  நெருக்கத்தை இங்கே சீடர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்கள் மேல் தன்னுடைய கரிசனையை வெளிப்படுத்துகிறார்.

இயேசு எழுப்பிய கேள்வியை  சற்று உற்றுநோக்கும்போது,  யாரைப்பார்த்து அந்த கேள்வியை இயேசு கேட்டிருக்கவேண்டும் என்பதில் சிறு குழப்பம் இருப்பதாக  நம்மால் உணரமுடிகிறது. விவிலிய அறிஞர்கள் மத்தியிலும் இந்த கேள்வி குறித்து சில குழப்பமான புரிதல்கள் இருந்திருக்கிறது. வல்கேட் லத்தீன் பதிப்பு, அதை "அவர் அவர்களிடம் கேட்டார்" என்றும்;  எத்தியோபிக் பதிப்பு, “அவர் அவர்களை நோக்கி” என்று சொல்லும்போது அவர் சீடர்களிடம் வரும்போது அவர் கேட்டார் என்றும், இல்லையென்றால் அவருக்கு வணக்கம் செலுத்த ஓடிய மக்களிடம் அவர் கேட்டார் என்றும் பொருள்கொள்ளலாம் என்று குறிப்பிடப்படுகிறது.  ஆனால், சிரியாக், அரபு மற்றும் பெர்சிக் பதிப்புகள், சீடர்கள் சார்பாக அவர்களுடன் நெருக்கமான விவாதத்தில் ஈடுபட்டிருந்த மறைநூல் அறிஞர்களை பார்த்து இயேசு கேட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  எது எப்படி இருந்தாலும், இயேசு ஒரு நல்ல தலைவனாக, தன்னால் தேர்தெடுக்கப்பட்ட, தன்னையே நம்பிவந்த சீடர்கள் மேல் நெருக்கத்தையும், சீடர்களின் இக்கட்டான நேரத்தில் உடனிருப்பையும், திக்கற்ற தருணத்தில் தீர்வுத்தந்து சீடர்களை விடுவிக்கவும் அந்த கேள்வியை கேட்டிருக்கவேண்டும் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது.

ஆகவே, இந்த  இரண்டாவது சிந்தனை நமக்கு விடுக்கும் அழைப்பு, வாழ்வில் எதாவது ஒரு விதத்தில் தலைமை பண்பை வகிக்கும் நாம், நம் அன்றாட வாழ்வில் சகமனிதரின் நலனில் அக்கறையும், உறவில் நெருக்கமும் கொண்டு வாழவேண்டும் என்பதும்; பிறர் துன்பம் அறிந்து நம் உடனிருப்பை கொடுப்பதும், தேவை அறிந்து துணைநிற்பதும் ஆகும்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2019, 14:53