தேடுதல்

Vatican News
ஓமனில் புதிய கத்தோலிக்க ஆலயத் திறப்பு நிகழ்வு ஓமனில் புதிய கத்தோலிக்க ஆலயத் திறப்பு நிகழ்வு 

ஓமனில் புதிய கத்தோலிக்க ஆலயம்

ஓமனில், புனித பிரான்சிஸ் சவேரியார் புதிய ஆலயத்தை, அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் ஹின்டர் அவர்களும், திருப்பீட தூதர் பேராயர் Francisco Montecillo Padilla அவர்களும், அந்நாட்டின் சமய விவகார அமைச்சகத்தின் இயக்குனர், டாக்டர் Ahmed Khamis Masood Al Bahri அவர்களும், திறந்து வைத்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஓமன் நாட்டில் பதினெட்டே மாதங்களில் ஒரு புதிய கத்தோலிக்க ஆலயம் எழுப்பப்பட்டு, செப்டம்பர் 8 இஞ்ஞாயிறு மாலை ஏழு மணிக்கு அர்ச்சிக்கப்பட்டது. இவ்விழாவில் முஸ்லிம் அதிகாரிகள் உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான கத்தோலிக்கர் கலந்துகொண்டனர். ஓமன் இஸ்லாமிய நாட்டின் Salalahவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய அர்ச்சிப்பு விழாத் திருப்பலியை, அரேபியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் பால் ஹின்டர் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றினார். மறைப்பணி நாடுகளின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் சவேரியாருக்கு  அர்ப்பணிக்கப்பட்டுள்ள, இந்த புதிய ஆலயத்திற்கு, 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, அது 18 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

Salalah நகரிலிருந்து ஏறத்தாழ பத்து நிமிடங்களில் காரில் செல்லும் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. 

ஏமன், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் கத்தார் நாடுகளின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் பால் ஹின்டர் அவர்களும், இந்நாடுகளின் திருப்பீட தூதர் பேராயர் Francisco Montecillo Padilla அவர்களும், ஓமன் நாட்டின் சமய விவகார அமைச்சகத்தின் இயக்குனர், டாக்டர் Ahmed Khamis Masood Al Bahri அவர்களும், இப்புதிய ஆலயத்தைத் திறந்து வைத்தனர். 600 பேர் அமரக்கூடிய இருக்கைகளைக் கொண்டுள்ள இவ்வாலயத்தின் அருகில், 400 பேர் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நன்றியுரையாற்றிய ஆயர் பால் ஹின்டர் அவர்கள், இவ்வாலயத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து திருப்பலிகளும், செபங்களும், இந்நாட்டு அதிகாரிகளின் நலனுக்காகவும், நாட்டு மக்களின் நன்மைக்காகவும் அர்ப்பணிக்கப்படும் என்று உறுதி கூறினார். 1979ம் ஆண்டில், Sultan Qaboos bin Said அவர்கள், Salalahவில் முதல் ஆலயம் கட்டுவதற்கு நிலத்தை தானமாக வழங்கினார் என்றும் ஆயர் பால் ஹின்டர் அவர்கள் அறிவித்தார்.  ஓமனில் ஏறத்தாழ அறுபதாயிரம் கத்தோலிக்கர் உள்ளனர். தற்போது 5 பங்குத்தளங்களும் உள்ளன. (Fides)

10 September 2019, 14:53