தேடுதல்

Vatican News
ஐக்கிய அரபு அமீரகத்தில் திருத்தந்தையின் திருப்பலிக்குச் சென்ற இளையோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் திருத்தந்தையின் திருப்பலிக்குச் சென்ற இளையோர்  (AFP or licensors)

மத்தியக் கிழக்குப் பகுதியில் மாற்றம் கொணரும் இளையோர்

"மத்தியக் கிழக்குப் பகுதியில் தங்கி மாற்றத்தை உருவாக்குங்கள், நாட்டின் அமைதி, உங்கள் அமைதியைப் பொருத்தது" – இளையோரிடம் இயேசு சபையினரின் விண்ணப்பம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"மத்தியக் கிழக்குப் பகுதியில் தங்கி மாற்றத்தை உருவாக்குங்கள், நாட்டின் அமைதி, உங்கள் அமைதியைப் பொருத்தது" என்ற கருத்தை இளையோரிடம் வலியுறுத்தும் ஒரு கருத்தரங்கு, லெபனான் நாட்டின் Jamhour நகரில் அண்மையில் ஆரம்பமானது.

மத்தியக் கிழக்குப் பகுதியில் பணியாற்றும் இயேசு சபையினர், Jamhour நகரில் இயங்கிவரும் நொத்ரு தாம் கல்லூரியில், ஜூலை 27 முதல், ஆகஸ்ட் 4ம் தேதி வருகிற ஞாயிறு முடிய நடத்தும் ஒரு கருத்தரங்கில், சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 350 இளையோர் பங்கேற்று வருகின்றனர்.

'பெறுவதைவிட தருவதே மேல்' என்ற விருதுவாக்கை அடித்தளமாகக் கொண்டு நடத்தப்படும் இக்கருத்தரங்கில், மத்தியக் கிழக்குப் பகுதியில் மாற்றத்தைக் கொணர, இளையோர், இன்னும் அதிகமாக, தாராளமாக, தங்களையே வழங்கவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மத்தியக் கிழக்குப் பகுதியில் நிலவும் அமைதியற்ற நிலையால், அப்பகுதியைவிட்டு வெளியேற விரும்பும் இளையோரே அதிகமாய் இருக்கும் சூழலில், அப்பகுதியில் தங்கி மாற்றங்களைக் கொணர இளையோர் இன்னும் அதிகமாக முன்வர வேண்டும் என்பதை, இக்கருத்தரங்கின் வழியே, இயேசு சபையினர் வலியுறுத்தி வருகின்றனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

கிழக்கு கலாச்சாரத்திலிருந்து வெளியேறி, மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் இளையோர், விரைவில், மேற்கத்திய நாடுகளில் நிலவும் சூழல் ஒரு மாயை என்பதை உணர்கின்றனர் என்பதும், இக்கருத்தரங்கில் பேசப்பட்டது என்று ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)

01 August 2019, 15:13