தேடுதல்

இந்திய கிறிஸ்தவர்கள் இந்திய கிறிஸ்தவர்கள்  

23 இந்திய மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள்

இந்தியாவில், 2014ம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. 2019ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 26 என, வன்முறைகள் நடத்தப்பட்டு வருகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியாவின் 23 மாநிலங்களில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக, 158 வன்முறைகள் இடம்பெற்றுள்ளன, இவற்றில், 110 பெண்களும், 89 சிறாரும் காயமடைந்துள்ளனர் என்று, UCF எனப்படும், ஒன்றிணைந்த கிறிஸ்தவ கழகம் அறிவித்துள்ளது.

வன்முறை நிகழ்வுகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்கென ஒரு சிறப்பு உதவி அமைப்பை நடத்திவரும் UCF கழகம், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் இடம்பெற்றுள்ள வன்முறைகளில் 130, வன்முறைக் கும்பல்களால் அச்சுறுத்தப்பட்ட, தாக்கப்பட்ட அல்லது மிரட்டப்பட்ட நிகழ்வுகளாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆலயத்தில் அல்லது செபக்கூடங்களில் அமைதியாக இறைவேண்டல் எழுப்பிக்கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும், இந்த 158 வன்முறைகளில் 24 நிகழ்வுகளுக்கு மட்டுமே, FIR அதாவது, முதல் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், UCF கழகம் கூறியுள்ளது.

11 மாநிலங்களில் காவல்துறை மந்தமாகச் செயல்பட்டது என்றுரைக்கும் இக்கழகம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள், உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து அதிகமாக இடம்பெறுகின்றது என்றும், இதற்கு அடுத்த நிலையில் தமிழ்நாடு உள்ளது என்றும் கூறியுள்ளது.      

இந்தியாவில், 2014ம் ஆண்டிலிருந்து கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்றும், 2019ம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 26 என, வன்முறைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும், UCF கழகம், பீதேஸ் செய்திக்கு தகவல் அனுப்பியுள்ளது (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2019, 15:59