தேடுதல்

Vatican News
லாஸ் ஆஞ்சலெசில் அருள்சகோதரிகள் லாஸ் ஆஞ்சலெசில் அருள்சகோதரிகள்  (2017 Getty Images)

பிரிவினைகளை ஏற்படுத்தும் சொல்லாடல்கள் நிறுத்தப்பட அழைப்பு

எமது அரசுத்தலைவர், தனது அறநெறி சார்ந்த அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் செயல்களில், ஒவ்வொரு நாளும் ஆன்ம பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்துகிறோம் - அமெரிக்க பெண் துறவு சபைகள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிரிவினைகளை ஏற்படுத்தும் எல்லா வகையான சொல்லாடல்கள் நிறுத்தப்படுவதற்கு ஆவன செய்யுமாறு, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களை கேட்டுக்கொண்டுள்ளனர், அந்நாட்டு துறவு சபை அருள்சகோதரிகள்.

அரிசோனா மாநிலத்தின் Scottsdaleவில் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை நடத்தி, ஆகஸ்ட் 14, இப்புதனன்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க பெண் துறவு சபைகள் பேரவை, மற்றவரை அவமதிக்கின்ற, மனிதமற்ற மற்றும், அச்சுறுத்துகின்ற சொல்லாடல்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாமென வலியுறுத்தியுள்ளது.

எங்களின் அரசுத்தலைவரும், தலைவர்களாக நாட்டிற்குப் பணியாற்றுகின்றவர்களும், பொதுநலனையும், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும் எப்போதும் மனதில் இருத்துவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ள பெண் துறவு சபைகள், நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் மிகச் சிறப்பாக கவரும் ஆற்றல்கொண்ட ஒரு பதவியை அரசுத்தலைவர் வகித்துள்ளார் எனவும் நினைவுபடுத்தியுள்ளன.

இந்த தனித்துவமிக்க பதவியை வைத்து, நாட்டைக் குணப்படுத்தும் முயற்சியில் இறங்கவும், பிரிவினைகளை உருவாக்கும் வழிகளை ஒருபோதும் தேடாதிருக்கவும் வேண்டுமென்று, டிரம்ப் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர், அமெரிக்க அருள்சகோதரிகள்.

கத்தோலிக்க அருள்சகோதரிகளாகிய நாங்கள், எம் விசுவாசத்தின் ஒளியில், எங்களின் சொற்களையும், செயல்களையும் ஒவ்வொரு நாளும் ஆன்ம ஆய்வு செய்கிறோம், எமது அரசுத்தலைவரும், தனது அறநெறி சார்ந்த அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் செயல்களில், இதேபோல் ஆய்வு செய்யுமாறு வலியுறுத்துகிறோம் என்று, அமெரிக்க பெண் துறவு சபைகள், தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. (ICN/LCWR)

16 August 2019, 14:51