தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் கர்தினால் Joseph Tobin திருத்தந்தையுடன் கர்தினால் Joseph Tobin  

அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தை எழுதிய மடலுக்கு நன்றி

ஆண்டவரின் பணிக்கு அவரால் அழைக்கப்பட்டுள்ள நாம், ஒருபோதும் நம்பிக்கை இழக்கக் கூடாது - உலக அருள்பணியாளர்களிடம் திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

புனித ஜான் மரிய வியான்னி இறைபதம் எய்தியதன் 160ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் அனைத்து அருள்பணியாளர்களுக்கும் எழுதிய மடலுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குருக்கள், துறவறத்தார் மற்றும் இறையழைப்பு பணிக்குழுத் தலைவரும், நெவார்க் பேராயருமான, கர்தினால் Joseph Tobin அவர்கள், திருஅவை மிகவும் இன்னலைச் சந்தித்துவரும் இக்காலத்தில், திருத்தந்தையின் இம்மடல் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய கொடை என்று குறிப்பிட்டுள்ளார்.

பங்குத்தந்தையரின் பாதுகாவலரான புனித ஜான் மரிய வியான்னி விழாவான ஆகஸ்ட் நான்காம் தேதி, உலகிலுள்ள, எல்லா அருள்பணியாளர்களுக்குமென மடல் ஒன்றை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வேதனை, அவமானம், மற்றும் கோபம் ஆகியவற்றுக்கு மத்தியில், திருஅவை, குறிப்பாக, அருள்பணியாளர்கள், நம்பிக்கை இழந்த நிலையில் விழக்கூடும், அதற்கு மாறாக, ஆண்டவரின் பணிக்கு அவரால் அழைக்கப்பட்டுள்ள நாம், ஒருபோதும் நம்பிக்கை இழக்கக் கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மடலில் நினைவுபடுத்தியுள்ளார்.

ஆண்டவரிடமிருந்தும், மற்றவரிடமிருந்தும், நன்றியும், ஊக்கமும்தரும் பல தருணங்கள் வழங்கப்படுகின்றன என்பதை நினைவுபடுத்தியுள்ள திருத்தந்தை, கடவுளின் மக்கள் அனைவரையும், குறிப்பாக, அப்பாவிகளை, அதிகார அத்துமீறலின் தீமையினின்று பாதுகாப்பதற்குப் பணியாற்றும்வேளை, கிறிஸ்துவின் மகிழ்வும் நம்பிக்கையும் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றது என்பதை உணராமல் செயலாற்றக் கூடாது என தெரிவித்துள்ளார்.

08 August 2019, 15:49