NEW HAMPSHIREல் மரண தண்டனைக்கு எதிராக.. NEW HAMPSHIREல் மரண தண்டனைக்கு எதிராக..  

மரண தண்டனை, மனித மாண்பைத் தாக்குகிறது

மரண தண்டனை நிறைவேற்றுவதை, இரத்து செய்யுமாறு, உலக அளவில், கத்தோலிக்கத் திருஅவை முயற்சித்து வருகின்றது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

மரண தண்டனை வழங்குவது, மனிதரின் அடிப்படை மாண்பைத் தாக்குவதாக உள்ளது என்பதால், அதனை, கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் வன்மையாய் எதிர்க்கிறது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில், ஆகஸ்ட் 21, இப்புதனன்று, 48 வயது நிரம்பிய Larry Swearingen என்பவர், நஞ்சு ஊசி ஏற்றி, கொல்லப்பட்டுள்ளார். இது, இவ்வாண்டில் நிறைவேற்றப்பட்ட 12வது மரண தண்டனையாகும்.

Swearingen என்பவர், 1998ம் ஆண்டில், 19 வயது நிரம்பிய Melissa Trotter என்ற இளம்பெண்ணை, பாலியல் வன்முறை செய்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டார். 19 ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவருக்கு, இப்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்ட, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் அமைதி மற்றும் மனித முன்னேற்ற பணிக்குழுவின் தலைவரான, புளோரிடா ஆயர் Frank Dewane அவர்கள், மரண தண்டனை குறித்த, கத்தோலிக்கத் திருஅவையின் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், மரண தண்டனை நிறைவேற்றுவது, இரத்து செய்யப்படுமாறு, உலக அளவில், கத்தோலிக்கத் திருஅவை முயற்சித்து வருவதையும், ஆயர் Dewane அவர்கள், குறிப்பிட்டார்.

மரண தண்டனையை மீண்டும் நாடெங்கும் நடைமுறைப்படுத்துவதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு, 2019ம் ஆண்டு ஜூலையில் அறிவித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2019, 14:00