Vatican News
தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர், இயேசுவைக் கண்டு அவரது காலில் விழுந்து, வேண்டினார். மாற்கு 5:21-23 தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர், இயேசுவைக் கண்டு அவரது காலில் விழுந்து, வேண்டினார். மாற்கு 5:21-23 

விவிலியத்தேடல்: யாயிர் மகளும், யாருமறியா பெண்ணும் - 2

இயேசுவுக்கும், யூத மதத் தலைவர்களுக்கும் இருந்த உறவு, பொதுவாக, எதிரும், புதிருமானதாகவே இருந்துள்ளது. இத்தகையச் சூழலில், தொழுகைக்கூடத் தலைவர் யாயிர், இயேசுவின் காலில் விழுந்தார் என்ற செய்தி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: யாயிர் மகளும், யாருமறியா பெண்ணும் - 2

"இந்த ஜூன் மாதம், இதுவரை இல்லாத அளவு கிறிஸ்துவர்களின் இரத்தம் ஆறாய்ப் பெருகி ஓடும்"... நைஜீரியாவிலிருந்து செயலாற்றும் Boko Haram என்ற ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு, சில ஆண்டுகளுக்குமுன், விடுத்த எச்சரிக்கை இது. அவர்கள் எச்சரித்தபடியே, குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்தன. இரத்தம் சிந்தப்பட்டது. எப்பாவமும் அறியாத உயிர்கள், கொல்லப்பட்டன.

கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் இவ்வுலகில் சிந்தப்படும் இரத்தத்தைப்போல், வேறு எக்காரணத்திற்காகவும் அவ்வளவு இரத்தம் சிந்தப்பட்டிருக்காது என்பது, நாம் மறுக்கமுடியாத உண்மை. நைஜீரியாவில் இரத்தம் சிந்தப்பட்டதையும், உயிர்கள் கொல்லப்பட்டதையும் நாம் செய்தித்தாள்களில் பார்த்தோம். ஆனால், அதே கொடுமைகளின்போது, நைஜீரியாவில் மனித உயிர்களைக் காப்பாற்ற, பலர், இரத்ததானம் கட்டாயம் செய்திருப்பர். இவை, எந்த ஊடகத்திலும் பெரிதாகச் சொல்லப்படவில்லை.

அதேபோல், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், புஜ் (Bhuj) எனுமிடத்தில் 2001ம் ஆண்டு, சனவரி, 26, இந்திய குடியரசு நாளன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின்போது, இந்துக்களும், இஸ்லாமியரும், வரிசையில் நின்று, இரத்ததானம் செய்தனர். இந்துக்கள் இரத்தம், இஸ்லாமியர் உடலிலும், இஸ்லாமியர் இரத்தம், இந்துக்கள் உடலிலும் செலுத்தப்பட்டது. ஆனால், அதே மாநிலத்தில், அடுத்த ஆண்டு நிகழ்ந்த கலவரங்களில், இந்துக்களும், இஸ்லாமியரும் ஒருவர் ஒருவருடைய இரத்தத்தை வீதிகளில் சிந்தினர். இக்கலவரங்களுக்கு ஊடகங்கள் தந்த கவனம், அங்கு நிகழ்ந்த நல்ல காரியங்களுக்குத் தரப்படவில்லை என்பது கசப்பான உண்மை.

ஊடகங்கள் சொல்லாத, அல்லது சொல்ல மறுக்கும், மறைக்கும் நல்ல செய்திகளை எண்ணிப்பார்க்க, இன்றைய விவிலியத்தேடலில் மீண்டும் ஒரு வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இரத்தம், உயிர் என்ற இரு இணைபிரியா உண்மைகளைச் சிந்திக்க இந்த விவிலியத்தேடல் வழியே முயல்வோம்.

இலாபம் ஒன்றையே குறியாகக் கொண்டுள்ள நமது ஊடகங்களுக்கு, இரத்தம் சிந்துதலும், உயிர்கள் கொல்லப்படுவதும், விற்பனைக்கு உகந்த, பரபரப்பான செய்திகள். இவற்றை, மீண்டும், மீண்டும், நாம் கேட்பதால், பார்ப்பதால், இவ்வுலகை ஒரு சுடுகாடாய், கல்லறைத் தோட்டமாய் எண்ணத் தோன்றுகிறது. இந்தக் கல்லறைத் தோட்டத்தில் உயிரூட்டும் சொற்களை, சாலமோனின் ஞானம் நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

சாலமோனின் ஞானம் 1: 13-15

சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை: அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை.

விவிலியத்தில், இரத்தம், பொருள்நிறைந்த ஓர் அடையாளம். இஸ்ரயேல் மக்கள், எகிப்தில் அடிமைகளாய் இருந்தபோது, அவர்களை விடுவிக்க, இறைவன், அந்நாட்டின்மேல் பல துயரங்களை அனுப்பினார். அவற்றில், முதல் துயரம், நைல் நதி இரத்தமாய் மாறியத் துயரம். அந்த இரத்தம், எகிப்து மன்னனுக்கும், மக்களுக்கும், இறைவன் விடுத்த எச்சரிக்கை. எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் கிளம்பிய அந்த இரவில், கதவு நிலைகளில் பூசப்பட்ட செம்மறியின் இரத்தம், ஒரு கேடயமாக, கவசமாக மாறி, அவர்கள் உயிரைக் காத்தது. இவ்விதம் உயிரைப் பறிக்கவும், காக்கவும் இரத்தம் அடையாளமாக இருந்தது.

இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரை, உயிர்களுக்கெல்லாம் ஊற்றான இறைவனுக்கு மட்டுமே இரத்தம் சொந்தமாக வேண்டும். எனவே, அவருக்கு அளிக்கப்படும் பலிகளில் மட்டுமே இரத்தம் சிந்தப்பட வேண்டும். மற்ற வழிகளில் சிந்தப்படும் இரத்தம், நமக்கு எதிராக இறைவனிடம் முறையிடும். தொடக்க நூல் 4ம் பிரிவில், காயின், ஆபேலைக் கொன்றதும், இறைவன் காயினிடம் சொன்ன வார்த்தைகள்:  “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.” (தொ.நூ. 4: 10)  சிந்தப்படும் மிருகங்களின் இரத்தம், இறைவனுக்கு உகந்த பலியாக மாறும். ஆனால், சிந்தப்படும் மனிதர்களின் இரத்தம் நமக்குப் பழியாக மாறும்.

இரத்தத்தைப்பற்றி இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த மற்றொரு முக்கியமான எண்ணம்... இரத்தம் உடலில் இருக்கும்வரை அது உயர்வாக, வாழ்வாகக் கருதப்பட்டது. நோயின் காரணமாக, உடலிலிருந்து இரத்தம் வெளியேறினால், அந்த இரத்தம் களங்கமென்று, தீட்டென்று கருதப்பட்டது. இந்த எண்ணத்தை மையப்படுத்தியப் புதுமையை, நாம் சென்ற விவிலியத் தேடலில் சிந்திக்க ஆரம்பித்தோம்.

கெரசேனர் பகுதியிலிருந்து புறப்பட்ட இயேசுவுக்கு, மறுகரையில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அங்கு கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு, தொழுகைக்கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவை அணுகினார். அந்நிகழ்வை, மாற்கு நற்செய்தியில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்

மாற்கு 5: 21-23

இயேசு கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று அவரை வருந்தி வேண்டினார்.

இயேசுவுக்கும், யூத மதத் தலைவர்களுக்கும் இருந்த உறவு, பொதுவாக, எதிரும், புதிருமானதாகவே இருந்துள்ளது. இத்தகையச் சூழலில், தொழுகைக்கூடத் தலைவர் யாயிர், இயேசுவின் காலில் விழுந்தார் என்ற செய்தி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தான் உயிருக்குயிராய் நேசித்த மகள் சாகும் நிலையில் இருந்ததால், யாயிர்  இயேசுவின் கால்களில் விழுந்தார். இது சாதாரண செய்தி அல்ல, தலைப்புச் செய்தி.

நமது ஊடகங்கள் அன்று இருந்திருந்தால், தொழுகைக் கூடத் தலைவர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்ற செய்தியைப் பெரிதுபடுத்தி, அதை முதல்பக்கப் படமாக வெளியிட்டு, யார் பெரியவர் என்ற விவாதத்தைக் கிளறியிருக்கும்.

இயேசுவின் காலத்திலும் இந்தக் கேள்வி எழுந்திருக்கும்... யாருக்கு? இயேசுவுக்கா? யாயிருக்கா? இல்லை. குழந்தையின் நலனில் அக்கறை கொண்ட யாயிருக்கும், இயேசுவுக்கும் இந்த எண்ணமே எழுந்திருக்காது. இவ்விருவரையும் சுற்றி இருந்தவர்களுக்கு அக்கேள்வி எழுந்திருக்கும். தொழுகைக் கூடத்தின் தலைவர் இயேசுவின் கால்களில் விழுந்தார் என்ற செய்தி, காட்டுத் தீபோல் எருசலேம்வரை பரவி, மதத்தலைவர்களை ஆத்திரப்பட வைத்திருக்கும்.

யாயிர், அழைத்ததும், இயேசு புறப்பட்டார். 'பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்' - மாற்கு 5:24 என்று மாற்கு நற்செய்தியில் காண்கிறோம். இந்த ஊர்வலமும் முக்கியச் செய்திதான். ஆனால், இதுவரை தலைப்புச் செய்திகள் என்று நாம் சிந்தித்தது எதுவும், இந்த இரட்டைப்புதுமைகளின் முக்கியச் செய்தியாகவில்லை. பார்ப்பதற்கு மையமாகத் தெரியும் இவை அனைத்தும் ஓரங்களாகிவிட்டன. ஓர் ஓரத்தில் ஆரம்பித்த கதை, மையமாக மாறியது. அதுதான்... பன்னிரு ஆண்டுகளாய், இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண் குணமடையும் அந்தப் புதுமை. அந்தப் பெண்ணை, நற்செய்தியாளர் மாற்கு இவ்வாறு அறிமுகம் செய்துள்ளார்:

மாற்கு 5: 25-26

பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.

உடலளவில் அடைந்த துன்பங்களைவிட, குடும்பத்தாலும், சமுதாயத்தாலும் ஒதுக்கிவைக்கப்பட்ட துன்பம், அப்பெண்ணை மிகவும் வேதனைப்படுத்தியிருக்கும். குடும்பத்திலும், சமுதாயத்திலும் நிகழும் வைபவங்களில் அவர் கலந்துகொள்ளக்கூடாது; கோவிலுக்குப் போகக்கூடாது; சமைக்கக்கூடாது, வீட்டு வேலைகள் செய்யக்கூடாது, தன் குழந்தைகளைத் தூக்கக்கூடாது... இவ்வாறு, அவர் மீது சுமத்தப்பட்ட தடைகள், ஏறத்தாழ அந்தப் பெண்ணை, உயிரோடு, சமாதியில் வைத்தன. ஒரு நடைப்பிணமாக அவர் வாழ்ந்தார்.

இந்தக் கொடுமை, ஒரு சில நாட்கள் நீடித்தத் துன்பம் அல்ல. 12 ஆண்டுகள், அதாவது, 144 மாதங்கள், 4383 நாட்களாக நீடித்தக் கொடுமை இது. இக்கொடுமையிலிருந்து விடுதலைபெற, அவர், தன்னிடம் இருந்த செல்வத்தையெல்லாம், மருத்துவர்களுக்கு கொடுத்தும், விடுதலை கிடைக்கவில்லை. அவர் இயேசுவைத் தேடி வந்தார். ஒரு பெண், நோயுள்ள பெண், அதுவும் இரத்தப்போக்கு நோயுள்ள பெண், கூட்டத்தில் இருந்தார் என்பது தெரிந்தால், அவருக்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அவர் கல்லால் எறிந்து கொல்லப்படவேண்டும்.

இரத்தப்போக்கு நோயுள்ள அப்பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

17 August 2019, 15:20