இடுக்கமான வாயில் இடுக்கமான வாயில் 

பொதுக்காலம் 21ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்." (லூக்கா 13 : 24)

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 21ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

நாம் அடிக்கடி கேட்ட ஒரு சிரிப்புத் துணுக்குடன் இன்றைய சிந்தனைகளைத் துவங்குவோம். விண்ணக வாயிலருகே புனித பேதுரு நின்றுகொண்டிருந்தார். வயது முதிர்ந்த ஓர் அருள்பணியாளரும், பேருந்து ஓட்டுனர் ஒருவரும் அங்கு வந்தனர். அருள் பணியாளரை ஆர்வமின்றி வரவேற்ற புனித பேதுரு, ஓட்டுனரை மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்றார். இதைக் கண்ட அருள்பணியாளர், மனம் உடைந்தவராய், பேதுருவிடம் விளக்கம் கேட்டார். புனித பேதுரு அவரிடம், "சாமி, நீங்கள் பிரசங்கம் வைத்தபோது, கோவிலென்றும் பாராமல், மக்கள் தூங்கினார்கள். ஆனால், இந்த ஓட்டுனர் பேருந்தை ஓட்டியபோது, சாலையென்றும் பாராமல், மக்கள் செபித்தார்கள்" என்று விளக்கம் அளித்தார்.

விண்ணகத்தையும், புனித பேதுருவையும் இணைத்து சொல்லப்படும் பல சிரிப்புத் துணுக்குகளை நாம் கேட்டிருக்கிறோம். சிரிப்புத் துணுக்குகள், வெறும் சிரிப்பதற்கு மட்டும்தானா? அல்லது, அவை நம்மைச் சிந்திக்கவும் அழைக்கின்றனவா? தெனாலி இராமன் கதைகள் சிரிப்பதற்கும், அதே நேரம் சிந்திப்பதற்கும் சொல்லப்பட்ட கதைகள் என்பதை நாம் அறிவோம். கசப்பான மருந்துகளை தேனில் குழைத்தோ, அல்லது இனிப்பான ஒரு மேல்பூச்சுடன் செய்யப்பட்ட ஒரு மாத்திரையாகவோ நாம் உட்கொள்வதில்லையா? அதேபோல், கசப்பான உண்மைகளை, சிரிப்பு வடிவில் கேட்கும்போது, அவை நம் மனதில் இன்னும் ஆழமாகப் பதிய வாய்ப்புண்டு.

விண்ணகத்தைப்பற்றி, அங்கு அளிக்கப்படும் வரவேற்பைப்பற்றி நாம் கொண்டுள்ள முடிவுகளை உடைத்து, வேறுபட்ட உண்மைகளைச் சொல்லித்தர, மேலே நாம் கூறிய அருள் பணியாளர், ஓட்டுனர் கதை உதவி செய்யலாம். விண்ணகத்தில் யாருக்கு வரவேற்பு இருக்கும், எத்தகைய வரவேற்பு  இருக்கும் என்ற முடிவுகள் எடுப்பது நம் பணியல்ல. நாம் அங்கு நுழைவதற்கு எவ்வகையில் நம்மையே தயார் செய்வது என்ற முடிவுகள் எடுப்பது மட்டுமே நமது பணி. யார் மீட்படைவார்? யார் அடையமாட்டார்? என்ற கேள்விகளின் முடிவுகளைக் கடவுளிடம் விட்டுவிட்டு, நாம் எவ்விதம் மீட்படைய முடியும் என்பதைச் சிந்திக்க இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

 

விண்ணகத்தையும் புனித பேதுருவையும் இணைத்துச் சொல்லப்படும் சில கதைகள் நம் முற்சார்பு எண்ணங்களைப் புரட்டிப்போடுவதுபோல், இறைவனையும், விண்ணகத்தையும் இணைத்துச் சொல்லப்படும் பல கதைகள் என் எண்ணங்களைப் புரட்டிப்போட்டுள்ளன. அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த கதை இது:

விண்ணகத்தில், மக்களால் நிறைந்து வழிந்த மாமன்றத்திற்கு இறைவன் வந்தார். அலைமோதிய கூட்டத்தைக் கண்ட இறைவன், வானதூதரிடம் பத்துக் கட்டளைகள் அடங்கிய பலகையை எடுத்து வரச்சொன்னார். வானதூதர் கொண்டு வந்தார். அந்தக் கட்டளைகளை ஒவ்வொன்றாக வாசிக்கச் சொன்னார். "நானே உன் கடவுளாகிய ஆண்டவர்... என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது." (விடுதலைப் பயணம் 20 : 2-3) என்ற முதல் கட்டளையை வானதூதர் வாசித்தார். அந்தக் கட்டளையை மீறியவர்கள் விண்ணகத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. பலர் வெளியேற வேண்டியிருந்தது. இப்படி ஒவ்வொரு கட்டளையும் வாசிக்கப்பட, அக்கட்டளைகளை மீறிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். இறுதிக் கட்டளை வருவதற்குள், விண்ணகம் ஏறத்தாழ காலியாகி விட்டது. ஒரு சிலர் மட்டும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.

கடவுள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். அவர் அந்த மாமன்றத்திற்குள் வந்தபோது இருந்த அந்த கட்டுக்கடங்காத கூட்டம், அங்கு ஒலித்த ஆரவாரம் இவற்றிற்கும், இப்போது ஒரு சிலரே நின்று செபித்துக் கொண்டிருந்த இந்த அமைதிக்கும் இருந்த வேறுபாடு அவரை ஆழ்ந்த சிந்தனையில் மூழ்க வைத்தது. பின்னர் ஏதோ ஒரு தீர்மானத்தோடு, கடவுள் வானதூதரிடம் திரும்பி, "வெளியில் அனுப்பப்பட்ட அனைவரையும் உள்ளே வரச்சொல்லுங்கள்" என்றார். மீண்டும் விண்ணகம் நிறைந்தது, மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது. கடவுளும் மகிழ்ந்தார்.

கதையாக, கற்பனையாக இப்படி கடவுளை நினைத்துப் பார்க்கலாம். சிரித்துக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் நம் கடவுள் இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்தால், ம்... வந்து... என்று சிந்திக்கத் துவங்குவோம். உடனடியாகப் பதில் சொல்ல முடியாமல் தயங்குவோம். ஆழ்ந்து சிந்தித்தால், கடவுள் என்ற இலக்கணத்தின் ஒரு முக்கிய அம்சத்தை இக்கதை நமக்குச் சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அனைவரையும் அன்புடன் அழைத்து, அணைத்து விருந்து கொடுக்கும் கடவுள்தான் நம் கடவுள். இஞ்ஞாயிறன்று நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள முதல் வாசகம் தரும் செய்தி இதுதான்:

எசாயா 66 : 18, 20

பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்: அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்... அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.

எருசலேமிலுள்ள தன் திருமலைக்கு அனைவரையும் இறைவன் அழைத்துவருவார் என்று எசாயா கூறும் ஒன்றிப்பையும் தாண்டி, இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதியில் கூறும் வார்த்தைகள் மிக உயர்ந்த சவாலை நம்முன் வைக்கின்றன:

லூக்கா நற்செய்தி 13 : 30

“இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்.

பல திசைகளிலிருந்தும் மக்கள் இறைவனின் திருமலைக்குச் திரண்டு வருவது மட்டுமல்ல, அந்த மலையில் அனைவருக்கும் சமபந்தியும் இருக்கும். அனைவரும், மீண்டும் சொல்கிறேன்... ஒருவர் கூட மீதம் இல்லாமல் அனைவரும் வாழ்வு பெறவேண்டும், மீட்பு பெறவேண்டும் என்பது மட்டுமே இறைவனின் விருப்பம்... இயேசுவின் விருப்பம். நிபந்தனையற்ற அன்பு என்று நாம் நம்பும், நாம் வணங்கும் கடவுளின் முக்கிய அம்சமே, பாகுபாடுகள் அற்ற குடும்பமாக நம்மை ஒன்றிணைப்பதே...

நம்மில் சிலருக்கு, இந்த சமத்துவத்தை ஏற்பதற்கு அதிகத் தயக்கமாய் இருக்கும். பாவிகள், புண்ணியவான்கள் எல்லாருக்கும் மீட்பு உண்டு. இறையரசில் இவர்கள் இருவருக்கும் எவ்வித வேறுபாடும் இருக்காது என்று சொல்வது, உலகில் நாம் பயன்படுத்தும் அளவுகோல்களை உடைத்தெறியும் ஒரு சவாலாக ஒலிக்கிறது.

“யூதர்கள், புற இனத்தார் அனைவருக்கும் மீட்பு உண்டு” என்ற அந்த எண்ணத்தை சாதாரண, எளிய இஸ்ராயலர்கள் ஏற்றுக்கொண்டாலும், அவர்களது மதத் தலைவர்களால் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாங்கள், கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட குலம், பிற இனத்தவரிடையே இருந்து, தனித்து பிரிக்கப்பட்டு, மீட்கப்பட்ட குலம்... அப்படியிருக்க, சமாரியர், வரி வசூலிப்பவர், ஆயக்காரர் என்று பிறரோடு ஒரே மலையில் அமர்ந்து, சமபந்தியில் விருந்து உண்பதா? நடக்கவே நடக்காது. இஸ்ராயலரின் கடவுள் இப்படி செய்யமாட்டார் என்பது மதத்தலைவர்களின் அசைக்கமுடியாத எண்ணம்.

இறைவனின் திருமலையில் அனைவரும் இணைந்துவர முடியுமா? ஏற்றுக் கொள்வதற்குக் கடினமான அந்தக் கேள்வியை ஒருவர் இயேசுவிடம் சிறிது வித்தியாசமாகக் கேட்கிறார். இந்தக் கேள்வியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:

லூக்கா 13 : 22 - 23

இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப்பொழுது ஒருவர் அவரிடம், “ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?” என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கானப் பதிலை இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு கூறியுள்ளார். எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லா மக்களும் இறையரசின் விருந்தில் பங்கு கொள்வர் என்பது இயேசுவின் திண்ணமான பதில். ஆனால், இப்பதிலை இயேசு உடனே சொல்லாமல், மீட்புப் பெறுவது எவ்வாறு என்ற பாடத்தை, ஒரு சவாலாக முதலில் நமக்கு முன் வைக்கிறார்.

"இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்." (லூக்கா 13 : 24)

இயேசு சொல்லும் இக்கூற்றை மேலோட்டமாகப் பார்த்தால், தவறான எண்ணங்கள் எழ வாய்ப்புண்டு. "ஒரு சிலருக்கே, அதுவும், இஸ்ராயலருக்கே மீட்பு உண்டு" என்று மதத்தலைவர்கள் சொல்லித் தந்ததும், இயேசுவின் இந்தக் கூற்றும் ஒன்றுபோல தெரியலாம். ஆனால், மதத் தலைவர்களின் எண்ணங்களுக்கும், இயேசுவின் எண்ணங்களுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.

இறைவனைத் தங்கள் தனியுடைமையாக்கி, மீட்பையும் தங்கள் தனிப்பட்டச் சொத்து என்று உரிமை கொண்டாட மதத் தலைவர்கள் நினைத்தனர், போதித்து வந்தனர். இயேசுவோ, இறைவன் எல்லாருக்கும் பொதுவான தந்தை என்றும், அவர் தரும் மீட்பு எல்லாருக்கும் கொடுக்கப்படும் பரிசு என்றும் கூறினார். இந்தப் பரிசை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் எடுக்கும் முடிவு. விண்ணகத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும், ஆனால், இது குறுகலான, இடுக்கமான வாயில். முயற்சி செய்துதான் உள்ளே நுழையமுடியும். இவை இயேசுவின் எண்ணங்கள்.

இறையரசில் நுழைவது, விண்ணக விருந்தில் பங்கு கொள்வது மிகவும் பெருமைக்குரிய உயர்ந்த நிலைதான். ஆனால், அந்நிலையை அடைய, நாம் வாழ்வில் திரட்டி வைத்திருக்கும் ஏனையப் பெருமைகளையெல்லாம் களையவேண்டும். பெருமைகளைக் களைவது எளிதல்ல என்பதை இயேசு, "பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற் போகும்" என்று சுட்டிக்காட்டினார். அவர் இப்படிச் சொன்னபோது, அவர் மனதில் யூதமதக் குருக்களை அதிகம் எண்ணியிருப்பார். அவர்களை மனதில் வைத்து, தொடர்ந்து ஒரு கதையும் சொன்னார். அந்தக் கதையை நான் கொஞ்சம் விரிவாகக் கற்பனை செய்து பார்க்கிறேன்.

மீட்பின் வாயில்வரை வந்துவிட்ட யூதமதக் குருக்கள், அந்தக் குறுகிய வாயிலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வாழ்வில் திரட்டி வைத்திருந்த பெரும் ஆடைகள், மகுடம் இவற்றுடன் அக்குறுகிய வாயில் வழியே அவர்களால் நிச்சயம் செல்லமுடியாது என்பதை உணர்ந்தனர். எனவே, அவர்கள் என்ன செய்தனர்? மீட்பின் வாயிலில் நின்றுகொண்டு, வீட்டு உரிமையாளரை வெளியில் வரச்சொல்லி அழைத்தனர்.

வீட்டு உரிமையாளர் வெளியில் வருவார்; வேறு பெரியதொரு வாயில் வழியாகவோ, அல்லது, குறுகிய வாயிலை இடித்து பெரிதாக்கியோ, தங்களை உள்ளே அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர், அந்த மதத்தலைவர்கள். வீட்டு உரிமையாளர் வெளியில் வரவில்லை. உள்ளிருந்து அவர் தந்த பதில் வந்தது. "நீங்கள் யார்? உங்களை எனக்குத் தெரியாதே" என்ற குரல் மட்டும் ஒலித்தது.

அதிர்ச்சியில் வாயடைத்துப்போன மதத் தலைவர்கள் சுதாரித்துக்கொண்டு, தங்கள் அருமை, பெருமைகளை எல்லாம் பட்டியலிட்டு முழங்கினர். அந்த வீட்டுத் தலைவனுடன் தாங்கள் உண்டது, குடித்தது, அவருடன் பழகிய நாட்கள், அவர் தங்களுக்குச் சொன்ன போதனைகள் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னார்கள். வீட்டுத் தலைவரின் பொறுமை அதிகம் சோதிக்கப்பட்டுவிட்டதால், "உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்றும் தெரியாது" என்று கடூரமாகச் சொல்லி, அவர் அவர்களை அவ்விடத்தைவிட்டுப் போகச்சொன்னார்.

இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த அதே வேளையில் அங்கு வந்த பல்லாயிரம் எளிய மக்கள், தங்கள் அருமை, பெருமை என்று எதையும் சுமந்து வராத எளிய மக்கள் அந்த மீட்பின் வாயில் வழியே எளிதாக, மகிழ்வாக உள்ளே சென்ற வண்ணம் இருந்தனர். மீட்பைப்பற்றி எடுத்துரைத்த தங்கள் தலைவர்கள் அந்த வாயில் வழியே வரமுடியாமல் தவித்ததை வேடிக்கை பார்த்தபடி, அந்த எளிய மக்கள் சென்றது, வெந்துப் போயிருந்த அத்தலைவர்களின் நெஞ்சில் அம்புகளாய்த் தைத்தன. புலம்பலிலும், கோபத்திலும் மதத்தலைவர்கள் பற்களைக் கடித்துக்கொண்டு அங்கு நின்றுகொண்டிருந்தனர். இக்கதையை இயேசு இவ்விதம் முடிக்கிறார்.

லூக்கா நற்செய்தி 13 : 28ஆ-30

“இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.”

 

எல்லாரையும் அழைத்து, அணைத்து, எல்லாருக்கும் சமபந்தி விருந்து படைக்கும் அன்புத் தந்தையாக இறைவனைக் காணவும், அவ்விருந்தில் கலந்துகொள்ள, நம் தற்பெருமைகளை எல்லாம் களைந்துவிட்டு, அனைவரோடும் அந்தக் குறுகலான வாயில் வழியே நுழைந்து செல்லவும், எவ்விதப் பாகுபாடும் வேறுபாடும் இல்லாமல் அவ்விருந்தில் அ-னை-வ-ரு-ம் கலந்து கொள்வதைக் கண்டு மனநிறைவு அடையவும், இறைவன் நம் குறுகிய மனக்கதவுகளை திறப்பாராக. நம் மனதில் குறுகிய வாயில்களை அமைத்திருந்தால், அந்த வாயில்களை இடித்து, பெரிதாக்குவராக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2019, 13:27