Vatican News
"என் நெஞ்சமே, ... நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" (லூக்கா 12:19) என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட செல்வந்தர் "என் நெஞ்சமே, ... நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" (லூக்கா 12:19) என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட செல்வந்தர் 

பொதுக்காலம் - 18ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

'அறிவற்றச் செல்வன்' உவமையில், வேறு எவ்வித மனித உறவும் இல்லாமல், பொருள்களால் மட்டுமே சூழப்பட்ட தனியொரு தீவாக இச்செல்வனை இயேசு சித்திரித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 18ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

ஜெர்மன் நாட்டவரான இரண்டாம் லூட்விக் (Ludwig II) என்ற மன்னரைப் பற்றிய விவரங்கள், இன்றைய நம் சிந்தனைகளைத் துவக்கிவைக்கின்றன. திருமணம் ஆகாமல், தனித்து வாழ்ந்த இவர், தனது 41வது வயதில், மர்மமான முறையில், மரணம் அடைந்தார். 'கற்பனைக் கதை மன்னன்' (Fairy tale king) என்றழைக்கப்படும் இவருக்கு தரப்பட்டுள்ள மற்றொரு பட்டப்பெயர், 'மதியற்ற மன்னன் லூட்விக்' (Mad King Ludwig).

செல்வம் மிகுந்துவிட்டால், மனிதர்கள், மதியற்ற செயல்களில் ஈடுபடத் துணிகின்றனர் என்பதற்கு, மன்னன் இரண்டாம் லூட்விக், ஓர் எடுத்துக்காட்டு. ஜெர்மன் நாட்டில் உள்ள Chiemsee ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறு தீவில், இரண்டாம் லூட்விக் ஒரு பிரம்மாண்டமான அரண்மனையைக் கட்ட ஆணையிட்டார். 70 அறைகள் கொண்ட இந்த அரண்மனையின் ஒரு சில அறைகள் கட்டப்பட்டதும், 1885ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் அங்கு தங்கியிருந்தபோது, யாரையும் சந்திக்கவில்லை. அவருக்கென தயாரிக்கப்பட்ட உணவு, ஓர் இயந்திரத்தின் வழியாக அவரது அறைக்கு அனுப்பப்பட்டது. அவர் அங்கு தங்கியிருந்த அறைகளில் பிரம்மாண்டமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்த ஏற்பாடுகளையெல்லாம் காணும்போது, மனதில் ஓர் எண்ணம் எழுகின்றது. மன்னன் இரண்டாம் லூட்விக், மனிதர்கள் யாரையும் சந்திக்க விரும்பாமல், தன்னை மட்டுமே நாள் முழுவதும் பார்த்தவண்ணம் அந்த அரண்மனையில் வாழ்ந்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட ஒரு வாழ்வு வாழ்வதற்கு, அவர் 70 அறைகள் கொண்ட ஓர் அரண்மனையைக் கட்ட விழைந்தார் என்பதை எண்ணும்போது, அவர் தன் சுய அறிவுடன்தான் செயல்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

மன்னன் லூட்விக் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வினோத மனிதர். நாம் வாழும் 21ம் நூற்றாண்டிலும் இத்தகைய வினோதமான செயல்களில் ஈடுபடும் செல்வந்தர்களைச் சந்திக்கமுடிகிறது. 2010ம் ஆண்டு மும்பை மாநகரில் கட்டி முடிக்கப்பட்ட ஓர் இல்லம், உலகிலேயே மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலக செல்வந்தர்களில் ஒருவரது குடும்பம் வாழும் அந்த இல்லத்தின் பெயர் 'அன்டில்லியா' (Antilia).

கிரேக்கப் புராணத்தில் கூறப்பட்டுள்ள ஒரு கனவுத் தீவு, 'அன்டில்லியா'. மும்பை நகரில் அமைந்துள்ள 'அன்டில்லியா' இல்லமும் ஒரு தீவுதான். வாழ்வதற்குத் தகுதியான ஒரு சதுர அடி இடம் கிடைப்பதற்கும் போராடிவரும் 2 கோடி மக்கள் நிறைந்த ஒரு மனிதக் கடல், மும்பை மாநகரம். இக்கடலின் நடுவே, ஐந்துபேர் வாழ்வதற்கு, 4 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அந்த இல்லம், உண்மையிலேயே ஒரு தீவுதான். ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்கள், அதாவது, அன்றைய நிலவரப்படி, 9,000 கோடி ரூபாய் செலவில் இந்த தற்கால அரண்மனையைக் கட்டியவர், சுய அறிவுடன்தான் செயல்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.

தான் மட்டும் தனித்து வாழ்வதற்கு 70 அறைகள் கொண்ட ஓர் அரண்மனையைக் கட்டிய இரண்டாம் லூட்விக் மன்னரையும், உலகிலேயே மிக விலையுயர்ந்த இல்லத்தில் வாழும் மும்பை செல்வந்தரையும் முன்னிறுத்தி, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் இயேசு நமக்கு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்:

லூக்கா 12: 15

இயேசு அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.

இந்த எச்சரிக்கையை நம் உள்ளங்களில் தெளிவாகப் பதிக்க, இயேசு கூறும் பொருள்நிறைந்த உவமையே, 'அறிவற்ற செல்வன்' உவமை. லூக்கா 12: 16-21

லூக்கா நற்செய்தியில் மட்டுமே பணத்தைப்பற்றி, செல்வத்தைப்பற்றி மூன்று உவமைகளைக் காண்கிறோம். 'அறிவற்ற செல்வன் உவமை' (லூக்கா 12:13-21), 'நேர்மையற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை' (லூக்கா 16:1-8), 'செல்வரும் இலாசரும் உவமை' (லூக்கா 16:19-31) என்று இம்மூன்று உவமைகளும் செல்வத்தின் பல்வேறு விளைவுகளைச் சிந்திக்க நம்மைத் தூண்டுகின்றன.

இம்மூன்று உவமைகளில், இச்செல்வந்தர்களை இயேசு அறிமுகப்படுத்தும் வார்த்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சில எண்ணங்கள் உள்ளத்தில் எழுகின்றன. 16ம் பிரிவில் இயேசு அறிமுகப்படுத்தும் இரு செல்வந்தர்களுடன், வீட்டுப் பொறுப்பாளர், மற்றும், ஏழை இலாசர் என்று, மனித வடிவில் மற்றொரு கதாப்பாத்திரமும் அறிமுகமாகின்றார். ஆனால், நாம் இஞ்ஞாயிறன்று சிந்திக்கும் 'அறிவற்றச் செல்வன்' உவமையிலோ, வேறு மனிதர்களைப்பற்றிய குறிப்பு எதுவும் இடம்பெறவில்லை. இச்செல்வனுடன் சித்திரிக்கப்பட்டுள்ளதெல்லாம் அவரது நிலம், விளைபொருள்கள் மற்றும் களஞ்சியங்கள்.

எதார்த்தமாக சிந்தித்தால், அந்தச் செல்வனைச் சுற்றி ஒரு குடும்பம் இருந்திருக்க வேண்டும். அவரது நிலத்தில் உழைத்த உழைப்பாளிகள் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், வேறு எவ்வித மனித உறவும் இல்லாமல், பொருள்களால் மட்டுமே சூழப்பட்ட தனியொரு தீவாக இச்செல்வனை இயேசு சித்திரித்துள்ளார். இவ்வுவமையை இன்னும் ஆழமாக ஆய்வு செய்யும்போது, அத்தகைய ஒரு தீவை அந்தச்செல்வன் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டார் என்பதை உணரலாம்.

இந்த உவமையின் துவக்கத்தில் இயேசு பயன்படுத்தியுள்ள "செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது" என்ற அறிமுகச் சொற்கள் பொருள் நிறைந்தவை. நல்லதொரு விளைச்சலுக்கு, பல காரணங்கள் உள்ளன. இறைவன் கருணை காட்டியது, இயற்கை பொய்க்காமல் இருந்தது, பல உழைப்பாளிகள் தங்கள் வியர்வை சிந்தி உழைத்தது என்று பல பின்னணி காரணங்கள் உள்ளன. ஆனால், இவை எதுவும் அச்செல்வனின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை. வீட்டை அடைந்த விளைபொருள்கள் மட்டுமே, செல்வனின் கண்களையும் கருத்தையும் நிறைத்தன.

அறுவடைப் பொருள்களை தன் வீட்டுக்குச் சுமந்து வந்த ஊழியர்களின் ஊர்வலம் தன் கண்முன் நடந்ததைக் கண்டும், காண மறுத்தச் செல்வன், அவர்கள் கொண்டுவந்து சேர்த்த பொருள்களை - அதாவது, தானியங்களை மட்டுமே பார்க்கிறார். குவிந்துள்ள தானியங்களைப் பகிர்ந்து தருவதற்கு மறுத்து, அவற்றை இன்னும் பதுக்கி வைப்பதற்கு, தன் களஞ்சியங்களை இடித்து, பெரிதாக்கத் திட்டமிடுகிறார்.

மனித உழைப்பால் விளைந்த தானியங்கள், மனிதர்களைவிட அதிக மதிப்பு பெறுகின்றன என்பதை, இந்த உவமை வழியே நாம் உணரும்போது, சில ஆண்டுகளுக்கு முன் இந்திய ஊடகங்களில் வெளிவந்த சில தலைப்புச் செய்திகள் நினைவில் தோன்றி, மனதை முள்ளென கீறுகின்றன. இதோ, அச்செய்திகள்...

ஜூலை 21, 2010 - உத்திரப் பிரதேசத்தில் குழந்தைகளுக்குச் சேர வேண்டிய உணவை நாய்கள் சாப்பிடுகின்றன.

ஜூலை 23, 2010 - உத்திரப்பிரதேசத்தைப் போல, மஹாராஷ்ட்ராவிலும் உணவுத் தானியங்கள் அழுகிக் கிடக்கின்றன.

இச்செய்திகளை வாசிக்கும்போது, இன்றைய நமது நற்செய்தியில் கூறப்பட்டுள்ள அறிவற்ற செல்வன் செய்த அதே தவறை, இந்திய நாடும், நாம் அனைவரும் செய்தோம், இன்றும் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு எழுகிறது. இச்செய்திகளைத் தொடர்ந்து, "உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்துவைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள். உணவு தானியங்களில் ஒன்றுகூட இனி வீணாகக்கூடாது" என்று 2010ம் ஆண்டு, ஜூலை 27ம் தேதி, உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.

யாருக்கு இந்த ஆணை? Food Corporation of India என்றழைக்கப்படும் இந்திய அரசின் உணவு நிறுவனத்திற்கு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏன் இந்த ஆணை? உணவு நிறுவனத்திற்குச் சொந்தமான தானியக் கிடங்குகளில், 30 இலட்சம் டன் தானியங்கள் அழுகிக் கொண்டிருந்தன. சேமிக்கும் வசதிகள் இல்லை என்று கூறி, இந்திய உணவு நிறுவனம், தானிய மூட்டைகளை, மண் தரைகளில், மழையில் அடுக்கிவைத்ததால், அவை அழுகிக்கொண்டிருந்தன.

இச்செய்தியைத் தனித்துப் பார்க்கும்போது, இதன் விபரீதம் நமக்குச் சரியாகப் புரியாது. இதை, இந்தியாவில் நிலவும் இன்னும் சில உண்மைகளோடு சேர்த்துப் பார்க்கும்போது, விபரீதம் புலப்படும். 2009ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில், ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் உணவின்றி, பட்டினியால் இறந்தனர் என்று ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு காரணங்களால் தினமும் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் பல ஆயிரமாய் இருக்கும். ஆனால், உணவு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 6,000. சேர்த்துவைக்க இடமில்லாமல் மழையில் குவிக்கப்பட்டு, அழுகிகொண்டிருக்கும் 30 லட்சம் டன் தானியங்கள் ஒரு புறம். பசியால், உணவில்லாமல் ஒவ்வொரு நாளும் இறக்கும் குழந்தைகள் மட்டும் 6,000 என்ற அதிர்ச்சித் தகவல் மறுபுறம்.

"உங்களால் இந்தத் தானியங்களைச் சேமித்து வைக்க முடியவில்லை என்றால், ஏழைகளுக்காவது அவற்றைக் கொடுங்கள். உணவு தானியங்களில் ஒன்று கூட வீணாகக் கூடாது" என்று உச்ச நீதி மன்றம் கொடுத்த அந்த உத்தரவை ஆழச் சிந்திக்கும்போது, மனதில் ஆத்திரமும், வேதனையும் அதிகமாகிறது. ஒரு நாட்டின் உச்சநீதி மன்றமே நீதியைத் தலைகீழாகப் புரட்டிப்போடும் ஒரு முயற்சி இது.

சேமித்துவைக்க முடியவில்லை எனில், ஏழைகளுக்காவது கொடுங்கள் என்று ஒரு நாட்டின் நீதிமன்றம் கூறும்போது, அது 'சேமிப்புக்கு' முதலிடம் தருவதைக் காணமுடிகிறது. சேர்த்துவைக்க, குவித்துவைக்க, பதுக்கிவைக்க உங்களுக்குத் திறன் இல்லையெனில், இருக்கவே இருக்கிறார்கள் ஏழை மக்கள். அவர்களுக்காவது அதைத் தூக்கிப்போடுங்கள் என்ற பாணியில் ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம் பேசுவதை, எவ்விதம் நீதி என்று அழைப்பது? இந்தப் பாணியில்தானே அறிவற்ற செல்வனும் குவித்துவைப்பதற்கு முதலிடம் தந்தார்?

உச்சநீதி மன்றங்களை, உணவு நிறுவனங்களை, குற்றம் கூற நீண்டிருக்கும் நமது சுட்டுவிரல்களை நம் பக்கம் திருப்புவோம். நம் ஒவ்வொருவரிடமும் ஆழமாக வேரூன்றி, புரையோடிப் போயிருக்கும் பேராசைகளை, தேவைக்கும் அதிகமாகச் சேர்த்துவைக்கும் போக்கைப்பற்றி சிந்திக்க, இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் அந்த செல்வன், வாய்ப்பைத் தந்திருக்கிறார். அச்செல்வனை ஒரு முட்டாள் என்று நாம் தீர்மானம் செய்வதற்கு முன், நம்மைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

Ernest Hemingway என்பவர், நொபெல் பரிசு பெற்ற ஒரு பெரும் எழுத்தாளர். அவரிடம்,  தனித்துவமிக்கதொரு பழக்கம் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளன்று, அவரிடம் உள்ள மிக விலையுயர்ந்த, அரிய பொருட்களை அவர் பிறருக்குப் பரிசாகத் தருவாராம். இதைப்பற்றி அவரிடம் நண்பர்கள் கேட்டபோது அவர், "இவற்றை என்னால் பிறருக்குக் கொடுக்கமுடியும் என்றால், இவற்றுக்கு நான் சொந்தக்காரன். இவற்றை என்னால் கொடுக்கமுடியாமல் சேர்த்துவைத்தால், இவற்றுக்கு நான் அடிமை." என்று பதில் சொன்னாராம்.

தன் சொத்துக்கு அடிமையாகி, அறிவற்றுப் போன செல்வன் உவமையைச் சொன்ன இயேசு தரும் எச்சரிக்கை, அன்றுமட்டுமல்ல, இன்றும் ஒலிக்கிறது.

“எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.” (லூக்கா 12: 15)

இயேசு கூறிய அத்தனை அழகான உவமைகளிலும், லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் நாம் காணும் 'அறிவற்ற செல்வன்' உவமையில் மட்டுமே கடவுள் பேசுவதாகக் கூறப்பட்டுள்ளது. கடவுள் பேசும் வார்த்தைகள் ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கின்றன: கடவுள் அவனிடம், "அறிவிலியே இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?" என்று கேட்டார் (லூக்கா 12: 20) என்று இவ்வுவமையின் இறுதியில் வாசிக்கிறோம்.

இறைவன் இக்கேள்வியை நம் ஒவ்வொருவரையும் நோக்கி கேட்கிறார். நாம் இவ்வுலகில் எதைச் சேர்த்துவைத்துள்ளோம்? எதை விட்டுச்செல்லப்போகிறோம்? இவ்வுலகை நிம்மதியுடன், மகிழ்வுடன் விட்டுச்செல்ல நாம் தயாராக இருக்கிறோமா? நம் பதில்களை எதிர்பார்த்து கடவுள் காத்திருக்கிறார்.

 

03 August 2019, 14:53