தேடுதல்

Vatican News
உலக அமைதி நாளில் இளையோர் உலக அமைதி நாளில் இளையோர்  (ANSA)

இரு கொரிய நாடுகளின் எல்லையில் இளையோர் அமைதிப் பயணம்

தென் கொரியாவின் கலாச்சார, விளையாட்டு மற்றும், சுற்றுலா அமைச்சகத்தின் ஆதரவுடன், செயோல் உயர்மறைமாவட்டம், இளையோர் அமைதி திருப்பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலகிலும், கொரிய தீபகற்பத்திலும் அமைதி நிலவ வேண்டுமென விண்ணப்பித்து, 15 நாடுகளைச் சேர்ந்த, 90க்கும் அதிகமான இளையோர், இரு கொரிய நாடுகளுக்கிடையேயுள்ள எல்லையில் (DMZ), இராணுவ இருப்பு இல்லாத பகுதிக்கு, ஆறு நாள்கள் அமைதி திருப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இத்திருப்பயணத்தை ஆரம்பித்து வைத்த, செயோல் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், நம் வாழ்வில் அமைதி எவ்வளவு முக்கியம் என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று தான் நம்புவதாக, இளையோரிடம் தெரிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், நம் பொதுவான இல்லமாகிய இயற்கை அன்னையாம் இப்பூமியில், நல்லிணக்கத்தோடு ஒன்றிணைந்து வாழும் வழிகளைக் கண்டறியுமாறு, எப்போதும் வலியுறுத்தி வருகிறார் என்றும், இளையோர் திருப்பயணிகளிடம் கூறினார், கர்தினால் Andrew Yeom. 

தென் கொரியாவின் கலாச்சார, விளையாட்டு, சுற்றுலா மற்றும், ஒன்றிணைப்பு அமைச்சகத்தின் ஆதரவுடன், செயோல் உயர்மறைமாவட்டத்தின் கொரிய மக்களுக்கிடையே ஒப்புரவு பணிக்குழு ஏற்பாடு செய்த இந்த அமைதி திருப்பயணம், ஆகஸ்ட் 16, இவ்வெள்ளியன்று ஆரம்பிக்கப்பட்டது. எட்டாவது ஆண்டாக தற்போது நடைபெறும் இப்பயணத்தில், சலேசிய மற்றும் பெனடிக்ட் சபைகளின் எட்டு அருள்சகோதரிகளும் கலந்துகொள்கின்றனர்.

வடகொரிய இளம் புலம்பெயர்ந்தோரின் சாட்சியப் பகிர்வுகள், கலந்துரையாடல்கள், தீப செப வழிபாடுகள், திருப்பலி போன்ற பல்வேறு நிகழ்வுகள் இப்பயணத்தில் இடம்பெறும்.  

ஆகஸ்ட் 19, வருகிற திங்களன்று, கர்தினால் Andrew Yeom அவர்களும், கொரியா மற்றும், மங்கோலிய நாடுகளின் திருப்பீட தூதர் பேராயர் Alfred Xuereb அவர்களும், இளையோர் திருப்பயணிகளைச் சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. (AsiaNews)

17 August 2019, 15:16