தேடுதல்

இயற்கையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக  மலரும் குறிஞ்சி மலர்கள் இயற்கையில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக மலரும் குறிஞ்சி மலர்கள் 

படைப்பைப் பாதுகாப்பதற்கு ஐரோப்பாவில் சிறப்பு வழிபாடுகள்

மனித சமுதாயம் இப்பூமிக்கோளத்தை மதித்து பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அதிகம் துன்புறும் மக்களுக்காகவும், இறைவனை மன்றாடுவோம்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு  கிறிஸ்தவர்களுக்கு கடமை உள்ளது என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், வருகிற செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அக்டோபர் 4ம் தேதி வரை, ஐரோப்பாவில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பும், ஐரோப்பிய கிறிஸ்தவ சபைகளின் அவையும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், படைப்பைப் பாதுகாப்பதில், கிறிஸ்தவர்களின் பொறுப்புணர்வு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித சமுதாயம் இப்பூமிக்கோளத்தை மதித்து பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகில் அதிகம் துன்புறும் மக்களுக்காகவும், அனைவரும் உருக்கமாகச் செபிப்போம் எனவும், அவ்வறிக்கை அழைப்பு விடுக்கின்றது.

மனிதரின் தன்னலம், பேராசை மற்றும், புறக்கணிப்பால், சகமனிதரின் வாழ்வு பாதிக்கப்படக் கூடாது என்றும், இயற்கை வளங்கள் நெறிமுறையின்றி பயன்படுத்தப்படக் கூடாது என்றும் அழைப்பு விடுத்துள்ள அவ்வறிக்கை, இதனால், கடவுளின் வேலையின்மீது வேதனையை சுமத்துகின்றோம் என்றும் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவர்களும், நன்மனம் கொண்ட எல்லாரும், படைப்பின்மீது தங்களுக்கு இருக்கும் பொறுப்புணர்வை வெளிப்படுத்தி, அதைப் பாதுகாப்பதற்குத் திட்டவட்டமான செயல்களில் ஈடுபடுமாறு, ஐரோப்பிய கிறிஸ்தவத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2019, 15:26