Lisieux நகரைச் சேர்ந்த குழந்தை இயேசுவின் புனித தெரேசா Lisieux நகரைச் சேர்ந்த குழந்தை இயேசுவின் புனித தெரேசா 

ஸ்காட்லாந்தில் புனித தெரேசாவின் புனிதப் பொருள்கள்

Lisieux நகரின் புனித தெரேசாவின் புனிதப் பொருள்கள், ஆகஸ்ட் 29ம் தேதி முதல், செப்டம்பர் 19ம் தேதி முடிய ஸ்காட்லாந்தின் பல்வேறு மறைமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

Lisieux நகரின் புனித தெரேசாவின் புனிதப் பொருள்கள், ஆகஸ்ட் 29, இவ்வியாழனன்று, ஸ்காட்லாந்து நாட்டில் முதல் முறையாக, பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

இறைவனின் கருணைக்கும், மகிழ்வான கிறிஸ்தவ வாழ்வுக்கும் சாட்சியாக வாழ்ந்த குழந்தை இயேசுவின் புனித தெரேசா, ஸ்காட்லாந்து மக்களுக்கு, கருணை, மகிழ்வு, ஆகிய நற்பண்புகளை விட்டுச்செல்வார் என்று தான் நம்புவதாக, ஆயர் Joseph Toal அவர்கள் கூறியுள்ளார்.

இப்பயணங்களை ஒருங்கிணைக்கும் ஸ்காட்லாந்து ஆயர் பேரவையின் செயலர் அருள்பணி ஜிம் கிரான்ட் அவர்கள், பொதுவாக, திருத்தலங்களை நாடி மக்கள் செல்வது, அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்; தற்போது, புனிதர் ஒருவரே, மக்களைத் தேடி வந்திருப்பது, கூடுதலான நலன்களை வழங்கும் என்று  கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 29ம் தேதி முதல், செப்டம்பர் 19ம் தேதி முடிய ஸ்காட்லாந்தின் பல்வேறு மறைமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் இப்புனிதப் பொருள்கள், செப்டம்பர் 16ம் தேதி, Glasgow உயர் மறைமாவட்டத்தில் உள்ள Barlinnie சிறைச்சாலைக்கும் கொண்டுசெல்லப்படும் என்று ICN செய்தி கூறுகிறது.

திருத்தந்தை 13ம் லியோ அவர்களின் தனிப்பட்ட உத்தரவைப் பெற்று, தன் 15வது வயதில் துறவு வாழ்வை மேற்கொண்ட Marie-Francoise-Therese Martin என்ற இளம்பெண், தன் 24வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

1925ம் ஆண்டு, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், தெரேசாவை புனிதராக உயர்த்தியதோடு, 1927ம் ஆண்டு, அவரை, புனித பிரான்சிஸ் சேவியருடன் இணைத்து, மறைபரப்புப்பணி நாடுகளுக்குப் பாதுகாவலராகவும் அறிவித்தார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2019, 14:46