தேடுதல்

Vatican News
பிலிப்பீன்சில் குற்றங்களுக்கு எதிராகப் போராட்டம் பிலிப்பீன்சில் குற்றங்களுக்கு எதிராகப் போராட்டம்   (AFP or licensors)

அநீதிகளுக்கு எதிராய் குரல் எழுப்புங்கள்– துறவு சபைகள்

பிலிப்பீன்சில், போதைப்பொருளைப் பயன்படுத்தியவர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் என்ற சந்தேகத்தின்பேரில், 20,000த்திற்கு அதிமானோர் கொல்லப்பட்டுள்ளனர் - மனித உரிமை ஆர்வலர்கள்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில், ஆயர்கள் மற்றும் அருள்பணியாளர்க்கெதிராக, தேச துரோகக் குற்றம் சுமத்தப்படுவது, திருஅவைத் தலைவர்களை மிரட்டி அச்சுறுத்தும் முயற்சியாக உள்ளது என்று, அந்நாட்டு துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு (AMRSP) கூறியுள்ளது.

பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிக்கோ துத்தர்தே அவர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என பல்வேறு திருஅவைத் தலைவர்களுக்கு எதிராய், அரசு குற்றம் சாட்டி வருகின்றவேளை, நாட்டை சூழ்ந்துள்ள அச்சம் என்ற புகை மண்டலத்திற்கு எதிராய் கத்தோலிக்கர் செயல்படுமாறு, துறவு சபைகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மனிலாவில், ஆகஸ்ட் 6, இச்செவ்வாயன்று, நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள்  மற்றும் பொதுநிலையினர் கூடியிருந்த கூட்டத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்த துறவு சபைகளின் தலைவர்கள், பிலிப்பீன்ஸ் அரசின் பொய்கள், வன்முறை, வஞ்சகம், ஆகியவற்றுக்கு எதிராய்ச் செயல்படுமாறும் கேட்டுக்கொண்டனர்.

இறையாண்மையை விற்கும் அரசின் செயல்கள் குறித்து விழிப்பாயிருக்கவும், அநீதியை எதிர்க்கவும் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் நேரம் கனிந்துள்ளது என்றுரைத்தார், AMRSP எனப்படும், துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பின் செயலர் அருள்பணி Angel Cortez.

அரசுத்தலைவர் துத்தர்தே அவர்களின் போதைப்பொருளுக்கு எதிரான கடும் நடவடிக்கையை பொதுப்படையாக எதிர்த்து குரல் எழுப்பி வருகின்றவர்களில் இயேசு சபை அருள்பணியாளர் Albert Alejo அவர்களும் ஒருவர். இவர் அரசால் தேச துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  

பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் எடுத்துவரும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில், குறைந்தது ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆயினும், மனித உரிமை ஆர்வலர்களின் கணிப்புப்படி, போதைப்பொருளைப் பயன்படுத்தியவர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் என்ற சந்தேகத்தின்பேரில், இருபதாயிரத்திற்கு அதிமானோர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. (UCAN)

07 August 2019, 16:22