தேடுதல்

Vatican News
பொதுக்காலம் 19ம் ஞாயிறு பொதுக்காலம் 19ம் ஞாயிறு  

பொதுக்காலம் 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

இந்தியாவில் இயங்கிவரும் COBRAPOST ("நாகம் பதிவு") என்ற ஓர் இணையத்தளம், மறைந்திருந்து கொத்தும் செயல்பாடுகள் என்று பொருள்படும் undercover sting operations வழியே, அதிகார வட்டங்களில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது.

2013ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இவ்விணையதளம் கூடுதலாகப் புகழ்பெற்றுள்ளது. கறுப்புப் பணத்தைக் குவித்திருப்போர், அதை எவ்விதம் வெள்ளைப் பணமாக்கமுடியும் என்பதை, ஒரு சில முக்கியமான வங்கிகளில் (Bank of India, Bank of Baroda, Canara Bank, Central Bank of India, Indian Overseas Bank போன்றவை) பணிபுரிபவர்கள் சொல்லித்தந்தபோது, அதை, அவர்களுக்குத் தெரியாமல், காணொளி வடிவில் பதிவு செய்து, இவ்விணையத்தளம் வெளியிட்டது.

கறுப்புப் பணத்தைப் பற்றி, ஒவ்வொரு நாளும்தான் செய்திகள் வருகின்றன. புதிதாக இதைப்பற்றி பேச என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். இச்செய்தி வெளியான தேதி, என் கவனத்தை முதலில் ஈர்த்தது. அது, மார்ச் 13, 2013.

வத்திக்கான் பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், ஆவலோடு காத்திருந்த வெள்ளைப் புகை, சிஸ்டீன் சிற்றாலயத்திலிருந்து வெளியேறிய நாள் அது. ஆம், 2013ம் ஆண்டு, மார்ச் 13ம் தேதி, மாலை ஏழு மணியளவில், சிஸ்டீன் சிற்றாலயப் புகைப்போக்கியில், அதுவரை, அவ்வப்போது வெளியான கறுப்புப் புகை மாறி, வெள்ளைப் புகை வெளியேறியது; கத்தோலிக்கத் திருஅவைக்கு ஒரு புதிய திருத்தந்தை கிடைத்துவிட்டார் என்பதை உணர்த்தியது. கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயருடன் தன் தலைமைப்பணியைத் துவக்கினார்.

திருத்தந்தையைத் தேர்தெடுக்க சிஸ்டீன் சிற்றாலயத்தில், கர்தினால்கள் நடத்தும் 'கான்கிளேவ்' கூட்டத்தில், நல்லதொரு தீர்வு கிடைத்தால், அது, வெள்ளைப்புகை வழியே வெளிப்படுத்தப்படும். எனவே, சிஸ்டீன் சிற்றாலயத்திலிருந்து வெளியேறும் கறுப்புப் புகை, வெள்ளைப் புகையாக மாறினால், அது, நல்லதொரு செய்தி. கறுப்புப் பணம் வெள்ளைப் பணமானால், அது, மோசமானச் செய்தி. இவ்விரு செய்திகளும் ஒரே நாளில் வெளியானது, இவ்வுலகில் நன்மைக்கும், தீமைக்குமிடையே நிகழும் தொடர் போராட்டத்தை நமக்கு உணர்த்துகிறது. நல்லவற்றை நிலைநாட்ட, இவ்வுலகம், மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபுறம். தீமையை நிலைநாட்ட, அதுவும், தீமையை நன்மை போல உருமாற்றி, உலகில் நடமாடச் செய்யும் முயற்சிகள், மற்றொரு புறம்.

பணம் பத்தும் செய்யும்; பணம் பாதாளம் வரை பாயும்; பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்ற பழமொழிகளைக் கூறி, பணத்திற்கு, ஏறத்தாழ, ஒரு தெய்வீக நிலையை அளிப்பது, தீமையை நன்மை போல உருமாற்றி, இவ்வுலகில் நடமாடவிடும் ஒரு முயற்சி என்று கூறலாம். தீமையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை, செல்வத்தைக் குவிப்பது. நன்மையின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிப்படையான தேவை, செல்வத்தைப் பகிர்வது.

பணமும், செல்வமும் தம்மிலேயே தீமைகள் அல்ல. அவற்றைத் திரட்டுவதிலும், சேர்த்து வைப்பதிலும், நாம் காட்டும் அரக்கத்தனமான சுயநலமே, செல்வத்தை தீயதாக்கிவிடுகிறது. செல்வத்தைக் குவித்து வைத்த ஓர் அறிவற்ற செல்வனைப்பற்றி சென்ற வாரம் ஞாயிறன்று, ஓர் உவமை வழியாக, இயேசு எச்சரிக்கை விடுத்தார்.

அந்த உவமை, லூக்கா நற்செய்தி 12ம் பிரிவில் 21ம் இறை வாக்கியத்துடன் முடிந்தது. இவ்வாரம் அதே 12ம் பிரிவில் 32ம் இறைச் வாக்கியத்துடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இடைப்பட்ட 10 இறைச் வாக்கியங்களில் இயேசு கூறுவதெல்லாம், வானத்துப் பறவைகளிலிருந்து, வயல்வெளி மலர்களிடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையே. இன்றிருந்து நாளை நெருப்பில் எறியப்படும் காட்டுப் புல்லை அழகுடன் பராமரிக்கும் இறைவன், நம்மைக் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு.

தந்தையாம் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்டோருக்கு, அவரது அரசில் இடம் உண்டு என்ற வாக்குறுதியுடன் இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது:

லூக்கா நற்செய்தி 12: 32

சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.

இதைச் சொன்ன அதே மூச்சில், செல்வத்தைப் பற்றிய சில தெளிவுகளையும் இயேசு நமக்குத் தருகிறார். இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில் அவர் கூறும் அறிவுரைகள் இதோ:

லூக்கா நற்செய்தி 12: 33-34

உங்கள் உடைமைகளை விற்று, தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

திருடன் நெருங்காமல், பூச்சி அரிக்காமல் செல்வம் சேர்க்கும் வழிகள் என்னென்ன இருக்கக்கூடும் என்ற தேடலில் நான் ஈடுபட்டிருந்தபோது, மேலே குறிப்பிட்ட COBRAPOST இணையத்தள செய்தியும், இன்னும் பல செய்திகளும் என் கவனத்தை ஈர்த்தன. திருட்டு, பூச்சி இவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சட்டம், வரி இவற்றிலிருந்தும் தம் செல்வங்களைக் காப்பாற்ற, இந்தியச் செல்வந்தர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், பல செய்திகளாக, நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட நூல், நமது சிந்தனைகளுக்கு மிகவும் துணையாக இருக்கும்.

2009ம் ஆண்டு வெளியான இந்நூலில், தவறான வழிகளில், தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைத்துள்ள இந்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பெரும் செல்வர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகையர் என்ற ஒரு பெரும் படையினர், பல ஆண்டுகளாய் செய்து வந்துள்ள ஓர் அக்கிரமம் அலசப்பட்டுள்ளது. இந்தியாவில் திருடி, அயல்நாட்டில் சேர்க்கப்பட்டுள்ள செல்வங்கள். இவற்றை மீண்டும் கொண்டு வருவது எப்படி? (Stolen Indian Wealth Abroad – How to Bring it back?) என்பது, இந்நூலின் தலைப்பு.  

செல்வங்களைத் தவறான வழிகளில் சேர்ப்பதும், குவிப்பதும் இந்தியாவில் மட்டும் நிலவும் குற்றம் என்று தவறாகக் கணக்கு போடவேண்டாம். இத்தகையக் குற்றவாளிகள் உலகின் அனைத்து நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றனர். இப்படி தவறான வழிகளில் தவறான இடங்களில் குவிக்கப்பட்ட செல்வங்களால், உலகம் 2007ம் ஆண்டு பொருளாதாரத்தில் ஒரு பெரும் அழிவைச் சந்திக்க வேண்டியிருந்தது. இந்தச் சீரழிவு உலகை உலுக்கி எடுத்தபோதுதான், அரசுத் தலைவர்கள் இந்தக் கறுப்புப் பணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தனர். உலகத் தலைவர்கள் பலரும் இக்குற்றத்தைத் தடுக்கும் வழிமுறைகளைத் தீவிரமாகச் சிந்தித்தபோது, இந்தியத் தலைவர்கள் அதைப்பற்றி அதிக அக்கறை காட்டவில்லை.

இந்தியத் தலைவர்களுக்கோ, உலகத் தலைவர்களுக்கோ கறுப்புப் பணம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. 2005ம் ஆண்டு கறுப்பு, அழுக்குப் பணத்தைப் பற்றி Raymond W. Baker என்பவர் ஒரு நூலை வெளியிட்டார் (Capitalism’s Achilles Heel: Dirty Money and How to Renew the Free Market System). தனியுடைமை, முதலாளித்துவம் இவைகளால் சேகரிக்கப்பட்ட அழுக்குச் செல்வங்களைப் பற்றி இந்நூலில் அவர் அலசியிருக்கிறார். Baker அவர்களின் கணிப்புப்படி, 2001ம் ஆண்டில் உலகில் பதுக்கப்பட்டிருந்த கறுப்புப் பணத்தின் மதிப்பு 11.5 Trillion Dollars. இந்தத் தொகை ஒவ்வோர் ஆண்டும் ஒரு Trillion Dollar அதிகமாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு Trillion Dollar என்பது எவ்வளவு பெரியத் தொகை? விளையாட்டாக சிந்திக்க வேண்டுமெனில், இந்தப் பணத்தில் நீங்கள் ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் டாலர்கள் ஒவ்வொரு  நாளும் செலவு செய்தால், இந்தப் பணத்தைச் செலவு செய்து முடிக்க பத்து லட்சம் நாட்கள், அதாவது 2740 ஆண்டுகள் ஆகும்.

விளையாட்டுச் சிந்தனையை ஒதுக்கிவிட்டு, சமுதாய அக்கறையோடு சிந்திக்க வேண்டுமென்றால், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் என்ற வளரும் நாடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும், கோடானக் கோடி மக்களுக்கு, ஒரு ட்ரில்லியன் டாலர்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால், அவர்கள் ஓராண்டுக்கு மற்றவரிடம் கையேந்தாமல், சுய மரியாதையோடு வாழ முடியும். அந்த அளவுக்குப் பணம் இது.

பணத்தின் மதிப்பை வெறும் எண்ணிக்கையாக, அதாவது, ஒரு ட்ரில்லியனுக்கு எத்தனை பூஜ்யங்கள் என்று பார்ப்பதற்குப் பதிலாக, இவ்விதம் மக்கள் வாழ்வோடு, அதுவும் ஏழை மக்கள் வாழ்வோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் அந்தப் பணத்தின் மதிப்பு தெரியும். அதற்குப் பதில், இந்தப் பணம், வங்கிகளில் குவிந்திருந்தால், வெறும் பூஜ்யங்களாய்தான் இருக்கும்.

பணம் என்பது உரம் போன்றது. உரமானது குவித்து வைக்கப்பட்டிருக்கும்போது, அது நாற்றம் எடுக்கும். அதிக நாட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் உரம், தன் சக்தியையும், பயனையும் இழக்கும். ஆனால், அது நிலங்களில் பரப்பப்படும்போது, வளம் தரும் உயிராக மாறும். பயனற்று, நாற்றம் எடுக்கும் அளவுக்கு, ஒரு ட்ரில்லியன் டாலர்கள், ஒவ்வோர் ஆண்டும், பற்பல அயல்நாட்டு வங்கிகளில், கறுப்புப் பணமாய் குவிக்கப்படுகிறது.

Raymond W Baker அவர்கள், மற்றொரு வேதனை தரும் உண்மையையும், தன் நூலில் கூறியுள்ளார். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகும் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் கறுப்புப் பணத்தில், பாதிக்குப் பாதி, அதாவது, 500 பில்லியன் டாலர்கள், வளரும் நாடுகளிலிருந்து கொள்ளையடிக்கப்படுகின்றன என்றும், Baker அவர்கள் கூறியுள்ளார். ஏழைகளின் உழைப்பை அநீதமான வழிகளில் உறிஞ்சி, உலகெங்கும் குவிக்கப்பட்டு நாற்றமெடுத்திருக்கும் கறுப்புப் பணம், உலகில் உள்ள எல்லா ஏழைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டால், எல்லா ஏழைகளும் குறைந்தது பத்து ஆண்டுகளாவது யாரிடமும் கையேந்தி தர்மம் கேட்காமல், உடல், உள்ள நலனோடு வாழமுடியும். எவ்வளவு அழகான கற்பனை இது! வெறும் கற்பனை அல்ல, முயன்றால் நடைமுறையாகக்கூடிய ஓர் உண்மை! உலகில் எந்த ஒரு மனிதரும் அடுத்தவரிடம் கையேந்தாமல் சுய மரியாதையோடு பத்து ஆண்டுகள் வாழமுடிந்தால், இவ்வுலகம் விண்ணுலகம்தானே. இதைத்தானே இயேசுவும், ‘விண்ணுலகில் குறையாத செல்வத்தைத் தேடிக் கொள்ளுங்கள்’ என்று இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

சாதாரணமாகவே நாம் சேர்த்துவைக்கும் செல்வங்களைப் பற்றி இயேசு பேசும்போது, நேரிய வழிகளில் நீங்கள் சேர்க்கும் பணத்தையும், அளவுக்கு மீறி சேர்த்தால், அவை செல்லரித்துப் போகலாம், அல்லது, திருடப்படலாம் என்று எச்சரிக்கிறார். அதற்குப் பதில், அழியாத செல்வங்களான பகிர்தல், தர்மம் இவற்றைச் சேர்த்து வையுங்கள் என்று  சொல்கிறார்.

பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை, அதுவும் ஏழை நாடுகளிலிருந்து, ஏழைகளிடமிருந்து திருடப்பட்டக் கறுப்புப் பணத்தைப்பற்றி இயேசுவிடம் சொன்னால், அவர் என்ன சொல்லக்கூடும்? ஒருவேளை, ஒன்றும் சொல்லாமல் சாட்டையைக் கையில் எடுப்பார். அன்று, எருசலேம் கோவிலைச் சுத்தம் செய்ததுபோல், கறுப்புப் பணத்திற்குத் தஞ்சம் தரும் வங்கிகளில் நுழைந்து, அவற்றைச் சுத்தம் செய்வார். அல்லது, அன்று எருசலேம் நகரைப் பார்த்து, கண்ணீர் விட்டதைப்போல், இவர்களையும் நினைத்து அழுவார்.

இறுதியாக, நம்மைப் பார்த்து இன்றைய நற்செய்தியில் இயேசு தெளிவாகச் சொல்லியுள்ளவற்றை நாம் எவ்வளவு தூரம் கேட்கப் போகிறோம்? செயலாக்கப் போகிறோம்? என்ற கேள்விகளுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

லூக்கா 12: 32-34, 48ஆ

“உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்… மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”

கணக்கு காட்டாமல் செல்வம் சேர்ப்பவர்களைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள செல்வங்களுக்கு நம்மிடம் தகுந்த கணக்கை, இறைவன் எதிர்பார்ப்பார். கடவுளுக்குக் கணக்கு தர நாம் தயாராக இருக்கிறோமா?

10 August 2019, 15:19