தேடுதல்

Vatican News
மியான்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்தோர் மியான்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்தோர்  (ANSA)

கர்தினால் போ: சமுதாயத்தின் விளிம்பிலிருந்து சிந்தனைகள்

மியான்மார் இராணுவம், நாட்டை ஆள்வதற்காக அமைக்கப்பட்டது அல்ல, மாறாக, நாட்டைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது என்ற தனது பணியை, புரிந்துகொள்ள வேண்டும் - கர்தினால் போ

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

“ஆசிய நாடுகள் மற்றும், மக்கள் மீது இறைவன் வைத்துள்ள அன்பு: சமுதாயத்தின் விளிம்புநிலையிலிருந்து சிந்தனைகள்” என்ற தலைப்பில், அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், நீண்ட மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மியான்மார் நாடு, 2020ம் ஆண்டில் பொதுத் தேர்தலுக்காகத் தயாரித்துவரும் இவ்வேளையில், அந்நாட்டு மக்கள், எதிர்நோக்கும் சவால்கள் குறித்து திருஅவை கொண்டுள்ள ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்று, இம்மடலில் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் போ.

மியான்மாரில், ஏழு ஆண்டுகளுக்குமுன் மலர்ந்த மக்களாட்சியில் கொண்டிருந்த நம்பிக்கை, இன்னும் உயிரூட்டம்பெறவில்லை, மாறாக, நாடு காயமடைந்துள்ளது மற்றும், இரத்தம் சிந்துகிறது என, கவலை தெரிவித்துள்ளார், கர்தினால் போ.

அரசியல் கைதிகள் விடுதலையடைந்தது, போர்நிறுத்தம் கையெழுத்திடப்பட்டது, பொதுமக்கள் சமுதாயத்திற்கு அதிக இடமளிக்கப்பட்டது, ஊடகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது, அரசியல் தலைவர்களுக்கிடையே உரையாடல் இடம்பெற்றது, கால் நூற்றாண்டுக்குப் பின், நம்பிக்கைக்குரிய முதல் தேர்தல் நடந்தது, 2015ம் ஆண்டில் பொது மக்களால் நடத்தப்பட்ட அரசு ஆட்சிக்கு வந்தது போன்ற நடவடிக்கைகளால், மியான்மாரில் புதிய விடியல் ஆரம்பமாகியுள்ளது என எண்ணியிருந்தோம், ஆனால், அண்மை ஆண்டுகளாக நாட்டில் இருள் மேகங்கள் சூழ்ந்துள்ளன என்று கூறியுள்ளார், கர்தினால் போ.

இந்த தனது செய்திக்கு மியான்மார் மக்கள் அதிகமாகச் செவிசாய்க்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ள, கர்தினால் போ அவர்கள், மிகவும் சோர்வுற்ற நிலையில், மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு வழிகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்கின்ற கச்சின், ஷான் மற்றும், ராக்கெய்ன் மாநில மக்களின் வேதனைகள் கேட்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மியான்மார் நாடு, அமைதி, மக்களாட்சி மற்றும், வளமையை பாதுகாக்க வேண்டுமெனில், நாட்டில் மாற்றம் அவசியம் எனவும், நாட்டை ஆள்வதற்காக அமைக்கப்பட்டது அல்ல, மாறாக, நாட்டைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது என்ற தனது பணியை, இராணுவம் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார், கர்தினால் போ.

துன்பம்நிறைந்த இன்றைய உலகில், தனது தாய் நாடோ அல்லது வேறு பகுதிகளோ எதிர்கொள்ளும் பெரிய சவால்களைத் தட்டிக்கழிப்பதாக இல்லாமல், அமைதியான வழியில் நாடுகள் செல்வதற்குத் தேவையான வழிமுறைகளை, கர்தினால் போ அவர்கள் இம்மடலில் பரிந்துரைத்துள்ளார். 

நீண்ட முன்னுரையுடன், ஆகஸ்ட் 15, இவ்வியாழனன்று, 7,000த்திற்கு அதிகமான வார்த்தைகளுடன் இம்மடலை வெளியிட்டுள்ள யாங்கூன் பேராயரான, கர்தினால் போ அவர்கள், மக்களின் உரிமைகள், கடமைகள், அமைதிக்காக மக்களின் தாகம், மத சுதந்திரத்தின் முக்கியத்துவம், படைப்பைப் பாதுகாத்தல், நாட்டைப் பாதுகாக்கவேண்டிய கடமை போன்ற தலைப்புகளில், தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். (ICN)

16 August 2019, 15:06