தேடுதல்

மும்பையில் வெள்ளம் மும்பையில் வெள்ளம் 

மும்பையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆலயங்களில்...

மும்பையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது, சற்று உயரமான பகுதியிலுள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கும், பள்ளிகளுக்கும் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மும்பை நகரில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு, கத்தோலிக்க மறைமாவட்டங்கள், ஆலயங்களையும் பள்ளிகளையும் திறந்துவிட்டுள்ளன.

மேற்கு இந்தியாவில் தொடர்ந்து கனமழை பெய்துகொண்டிருக்கும்வேளை, வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவுமாறு, மும்பை பேராயர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்களும், கல்யாண் மறைமாவட்ட ஆயர் தாமஸ் எலவானல் அவர்களும், பங்குத்தந்தையரிடம் கேட்டுக்கொண்டதன்பேரில், கத்தோலிக்க ஆலயங்களிலும் பள்ளிகளிலும், அம்மக்களுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டடுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால், மும்பை நகரின் பல்வேறு பகுதிகளிலும், அம்மாநிலத்தின் பல நகரங்களிலும், இரயில் பாதைகள் நீரில் மூழ்கியிருப்பதால், இரயில் போக்குவரத்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான இரயில் பயணிகள் செல்லுமிடமின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது, சற்று உயரமான பகுதியிலுள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கும், பள்ளிகளுக்கும் செல்லுமாறு, மக்களை வலியுறுத்தி வருகின்றோம் என்று, மும்பை உயர்மறைமாவட்ட பேச்சாளர், அருள்பணி Nigel Barett அவர்கள் கூறினார்.

மும்பை நகரிலும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும், பல ஆலயங்களும், நிறுவனங்களும் வெள்ளத்தில் ஓரளவு மூழ்கியுள்ளன என்றும், அருள்பணி Nigel Barett அவர்கள், யூக்கா செய்தியிடம் கூறியுள்ளார்.

அணைகள் திறந்துவிடப்படுமாறு அதிகாரிகள் ஆணையிட்ட பிறகு, கோதாவரி, கிருஷ்ணா, தாப்பி ஆகிய மூன்று முக்கிய நதிகளிலும், அவற்றின் துணை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடுகின்றது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2019, 14:40