தேடுதல்

Vatican News
பொலிவியா நாட்டில் அப்போஸ்தலிக்க பிரதிநிதியாகப் பணியாற்றும் ஆயர் Eugenio Coter பொலிவியா நாட்டில் அப்போஸ்தலிக்க பிரதிநிதியாகப் பணியாற்றும் ஆயர் Eugenio Coter  

அமேசான் பகுதியில் மனுவுருவெடுத்துள்ள திருஅவை

அமேசான் காடுகளின் ஒரு சில பகுதிகளில் வாழும் கத்தோலிக்கர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே திருப்பலி காண முடிகிறது - ஆயர் Eugenio Coter

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியை மையப்படுத்தி நடைபெறவிக்கும் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள Instrumentum Laboris என்ற வழிகாட்டும் ஏடு, அப்பகுதியில் மனுவுருவெடுத்துள்ள திருஅவை, தன் மேய்ப்புப்பணி அனுபவங்களின் அடிப்படையில் உருவாக்கியுள்ள ஓர் ஏடு என்று, அமேசான் பகுதியில் பணியாற்றும் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

அமேசான் காடுகளின் ஒரு பகுதியை கொண்டுள்ள பொலிவியா நாட்டில் அப்போஸ்தலிக்க பிரதிநிதியாகப் பணியாற்றும் ஆயர் Eugenio Coter அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த பேட்டி ஒன்றில், நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்திற்குரிய தயாரிப்புகள் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

திருஅவை ஓர் ஆசிரியர் என்றும், அதே வேளையில் ஓர் அன்னை என்றும் வலியுறுத்திய இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைத் தொடர்ந்து, நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர்கள் மாமன்றமும், அன்னையாகவும், ஆசிரியராகவும் தன் பணிகளைத் தொடர்கிறது என்று ஆயர் Coter அவர்கள் கூறினார்.

அமேசான் காடுகளின் ஒரு சில பகுதிகளில் வாழும் கத்தோலிக்கர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே திருப்பலி காண முடிகிறது என்பதை தன் பேட்டியில் சுட்டிக்காட்டிய ஆயர் Coter அவர்கள், இச்சூழலில், அருள்பணித்துவத்தைக் குறித்த அர்த்தமுள்ள விவாதங்கள் இந்த மாமன்றத்தில் நிகழ்வது பயனளிக்கும் என்று வலியுறுத்தினார்.

பொலிவியா நாட்டில் உள்ள அமேசான் காடுகள் மிக வேகமாக அழிக்கப்பட்டு வருவதை கவலையுடன் குறிப்பிட்ட ஆயர் Coter அவர்கள், காடுகளின் அழிவு, அங்குள்ள பழங்குடி மக்களின் அழிவுக்கும் காரணமாகிறது என்று கூறினார்.

அமேசான் பகுதியில் உள்ள தலத்திருஅவை, அங்கு வாழும் மக்கள், மற்றும், இயற்கை, இவற்றுடன் இணைத்து செல்லும் ஆன்மீகம், மற்றும், அருளடையாள வாழ்வை, இந்த மாமன்றம் வழியே தெளிவாக்கும் என்று தான் நம்புவதாக, ஆயர் Coter அவர்கள், தன் பேட்டியின் இறுதியில் கூறினார்.

14 August 2019, 14:59