பிரேசிலின் அமேசான் காடுகள் பகுதி பிரேசிலின் அமேசான் காடுகள் பகுதி 

படைப்பைப் பாதுகாக்கும் பணி விசுவாசம் சார்ந்தது

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் அப்போதைய முதுபெரும்தந்தை முதலாம் Demetrios அவர்கள், அச்சபையில், 1989ம் ஆண்டில், படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளை உருவாக்கினார்

மேரி தெரேசா- வத்திக்கான் செய்திகள்

படைப்பைப் பாதுகாக்கும் பணி, திருஅவை வாழ்வின் செயல்பாடுகளில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது அல்ல, மாறாக, அது முற்றிலும் திருஅவையைச் சார்ந்தது மற்றும், அது விசுவாசத்தின் கூறைக் கொண்டிருக்கின்றது என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 01, இஞ்ஞாயிறன்று தொடங்கும், படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள, முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், சூழலியல் பிரச்சனைகளைக் களைவது, கிறிஸ்தவ மானுடவியல் மற்றும் பிரபஞ்சவியல் கோட்பாட்டின் அடிப்படையில் மட்டுமன்றி, கிறிஸ்துவில் படைப்பு அனைத்தும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதன் நோக்கத்திலும் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

செப்டம்பர் 1, இஞ்ஞாயிறு, இந்த உலக செப நாள் ஆரம்பிக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் நிறைவுறுவதையும் குறிப்பிட்டுள்ள, முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், படைப்பைப் பாதுகாப்பதற்கு இளையோர்க்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சூழலியல் பிரச்சனை, உலகளாவிய பிரச்சனை என்றும், இது முன்வைத்திருக்கும் ஆபத்துக்கள், உலகினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கின்றன என்றும், முதுபெரும்தந்தையின் செய்தி கூறுகின்றது.

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள், பசுமை முதுபெரும்தந்தை என அழைக்கப்படுகிறார். இக்கிறிஸ்தவ சபையில், அப்போதைய முதுபெரும்தந்தை முதலாம் Demetrios அவர்கள், 1989ம் ஆண்டில், படைப்பைப் பாதுகாக்கும் உலக செப நாளை உருவாக்கினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு ஆகஸ்டில், கத்தோலிக்கத் திருஅவையில் இச்செப நாளை உருவாக்கினார்.  

அமேசான் பருவமழைக் காடுகள் கடந்த பல வாரங்களாக எரிந்துகொண்டிருக்கும்வேளை, இந்த உலக செப நாள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகளாவிய கத்தோலிக்க சூழலியல் இயக்கம், வருகிற அக்டோபர் 4ம் தேதி முடிய, 500க்கும் அதிகமான நிகழ்வுகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2019, 16:03