தேடுதல்

Vatican News
மலேசிய சுதந்திர தினம் மலேசிய சுதந்திர தினம் 

மலேசிய சுதந்திர தினத்திற்கு ஆயர்களின் செய்தி

அரசியலிலோ, இனங்களுக்கு மத்தியிலோ பிரச்சனைகள் எழும்போது கிறிஸ்தவர்கள், சுவர்களை அல்ல, பாலங்களை அமைப்பவர்களாகச் செயல்பட வேண்டும். மேலும், அவர்கள், செபித்து, நற்செயல்கள் ஆற்ற வேண்டும் – மலேசிய ஆயர்கள்

மேரி தெரேசா- வத்திக்கான் செய்திகள்

மலேசியாவிற்கு விடுதலை அறிவிக்கப்பட்ட நாள் மற்றும், மலேசியா என்ற ஒரு நாடு உருவான நாளை, தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடும் குடிமக்கள், இந்த நாளின் உண்மையான பொருளை உணர்ந்து சிறப்பிக்குமாறு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டுவதற்கு நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை மலேசிய கிறிஸ்தவர்களுக்கு நினைவுபடுத்தியுள்ள ஆயர்கள், சமய நம்பிக்கை, நாட்டை வளப்படுத்த வேண்டும், ஆனால் அது, மக்களை திசை திருப்புகின்றது என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

1957ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி மலேசியா சுதந்திரம் அடைந்தது மற்றும், 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி மலேசியா என்ற நாடு உருவானதை நினைவுகூரும் "தேசிய விடுமுறை நாள் (மலாய் மொழியில் - Hari Merdeka)", ஆகஸ்ட் 31, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, அந்நாட்டின் ஏழு கத்தோலிக்க ஆயர்கள் இணைந்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மலேசியா, பல இன, பல கலாச்சார மற்றும், பல மதங்களைக் கொண்டுள்ள ஒரு நாடு என்பதை, குடிமக்களுக்கு நினைவுபடுத்தியுள்ள ஆயர்கள், சமுதாயத்தின் நல்லிணக்க வாழ்வைச் சீர்குலைக்கும் சக்திகளை எச்சரித்துள்ளனர்.  

அச்சத்தின் அடிப்படையில், கத்தோலிக்கருக்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகள் எழுகையில், கத்தோலிக்கர் எதிர்மறையாகச் செயல்படாமல், நற்செயல்களால், தங்கள் வழியாக மற்றவர் கிறிஸ்துவைக் காண்பதற்கு உதவ வேண்டுமென்று ஆயர்கள், கூறியுள்ளனர்.  

மலேசியாவின் ஏறக்குறைய 3 கோடியே 20 இலட்சம் மக்கள் தொகையில் 4 விழுக்காட்டினர் மட்டுமே கத்தோலிக்கர். 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள். (AsiaNews)

31 August 2019, 15:56