தேடுதல்

Vatican News
எல் பாசோவில் இறந்தோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் மக்களின் அஞ்சலி எல் பாசோவில் இறந்தோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் மக்களின் அஞ்சலி 

வெள்ளையின மேன்மைத்துவம் அறிவுக்குப் புறம்பானது

அமெரிக்க ஐக்கிய நாடு வெள்ளையினத்தவரால், வெள்ளையினத்தவருக்கென உருவாக்கப்பட்டது என்று பேசுவது, வரலாற்று சான்றுகளுக்கு எதிரானது - பேராயர் கோமஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில், எல் பாசோ நகரில் நடைபெற்ற துப்பாக்கித் தாக்குதலுக்கு, வெள்ளையின மேன்மைத்துவம் ஒரு காரணமாகக் கூறப்படுவது, அந்நாட்டின் அடிப்படை விழுமியத்திற்கு முற்றிலும் எதிரானது என்று லாஸ் ஆஞ்செலஸ் பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள் கூறியுள்ளார்.

எல் பாசோ நகரின் வால்மார்ட் அங்காடியில் நடைபெற்ற துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்ட மனிதர், அமெரிக்க ஐக்கிய நாடு வெள்ளையினத்தவருக்கு மட்டுமே உரியது என்று கூறியுள்ளதை மறுத்து, ஆகஸ்ட் 13, இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்ட பேராயர் கோமஸ் அவர்கள், இது கிறிஸ்தவ கண்ணோட்டத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டை உருவாக்கியவர்களின் எண்ணங்களுக்கும் எதிரானது என்று கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாடு வெள்ளையினத்தவரால், வெள்ளையினத்தவருக்கென உருவாக்கப்பட்டது என்று பேசுவது, வரலாற்று சான்றுகளுக்கு எதிரானது என்றும், அறிவுக்குப் புறம்பானது என்றும், பேராயர் கோமஸ் அவர்கள், தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மண்ணுக்கே உரிய பழங்குடியினரைத் தொடர்ந்து, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்களும், ஆசியாவைச் சேர்ந்தவர்களும் அந்நாட்டிற்கு வருகை தந்தனர் என்றும், அவர்களுக்குப் பின்னரே, ஐரோப்பிய கண்டத்திலிருந்து மக்கள் வந்து சேர்ந்தனர் என்றும், பேராயர் கோமஸ் அவர்கள், தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல் பாசோ நகரில் நிகழ்ந்தது, மனித குடும்பத்திற்கு, குறிப்பாக, கிறிஸ்தவ விழுமியங்களுக்கு எதிரான மடமைச் செயல் என்று கூறியுள்ள பேராயர் கோமஸ் அவர்கள், அன்னை மரியா, தங்கள் நாட்டைக் காக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு தன் அறிக்கையை நிறைவு செய்துள்ளார். (CNA)

14 August 2019, 14:47