நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami, திருத்தந்தை பிரான்சிஸ் நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami, திருத்தந்தை பிரான்சிஸ் 

அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட ஜப்பான் ஆயர்கள் அழைப்பு

நீதி வழியாக, அமைதிக்காக கடுமையாக உழைப்போம், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குரிய கருவிகளாக, போர்கள் நோக்கப்படுவதை இனிமேலும் சகித்துக்கொள்ள இயலாது என்பதை எடுத்துரைப்போம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டதன் 74ம் ஆண்டு நிறைவு இந்நாள்களில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், உலகெங்கும் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டு, அமைதி கட்டியெழுப்பப்படுமாறு  ஜப்பான் ஆயர்கள் உலகினரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

1945ம் ஆகஸ்ட் 6ம் தேதி ஹரோசிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும், அணுகுண்டுகள் போடப்பட்டதன் 74ம் ஆண்டு நிறைவு, இச்செவ்வாய், இவ்வெள்ளி ஆகிய இரு நாள்களில், இவ்விரு நகரங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நினைவு நாள்களை முன்னிட்டு, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 6ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை, பத்து நாள்கள், ஜப்பான் கத்தோலிக்கர், அமைதிக்காகச் சிறப்பாக இறைவேண்டல் செய்கின்றனர். 

இந்த நிகழ்வுக்கென, ஜப்பான் ஆயர்கள் சார்பில், செய்தி வெளியிட்ட, அந்நாட்டு ஆயர் பேரவை தலைவர், நாகசாகி பேராயர் Joseph Mitsuaki Takami அவர்கள், உலகளவில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் ஊக்குவிக்கப்படுமாறும், அமைதிக்காக அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

வருகிற நவம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜப்பானுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்கையில், அமைதிக்காக விடுக்கும் அழைப்பு, உலகை அணு ஆயுதமற்ற இடமாக அமைப்பதற்கு, மக்களின் ஆவலை வலுப்படுத்தும் என்ற தனது நம்பிக்கையையும், பேராயர் Takami அவர்கள், தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நீதி வழியாக அமைதிக்காக கடுமையாக உழைப்போம் என்றும், பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குரிய கருவிகளாக, போர்கள் நோக்கப்படுவதையும், அவை இடம்பெறுவதையும் இனிமேலும் சகித்துக்கொள்ள இயலாது என்பதற்கு உறுதியான தீர்மானம் எடுப்போம் என்றும் கூறியுள்ள நாகசாகி பேராயர், ஆயுதக்களைவிற்கும், அணு ஆயுத ஒழிப்பிற்கும் சோர்வின்றி உழைப்போம் என நாடுகள் வாக்குறுதிகள் எடுக்கட்டும் என கூறியுள்ளார். 

திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், 1981ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, ஜப்பானுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார். அதற்குப்பின், 38 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜப்பான் செல்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2019, 15:57