தேடுதல்

ஈராக் கிறிஸ்தவ ஆலயம் ஈராக் கிறிஸ்தவ ஆலயம் 

கல்தேய வழிபாட்டுமுறை திருஅவை, மறைசாட்சிகளின் திருஅவை

ஈராக்கில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் துன்புறுவது, நல்லதொரு வருங்காலத்திற்கு, நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது - கர்தினால் சாக்கோ

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை, மறைசாட்சிகளின் திருஅவை என்று, ஈராக் கல்தேய முதுபெரும்தந்தை கர்தினால் இரபேல் லூயிஸ் சாக்கோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

கல்தேய வழிபாட்டுமுறை திருஅவை பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு மடல் அனுப்பியுள்ள, கர்தினால் சாக்கோ அவர்கள், இத்திருஅவை, தொடக்ககால நூற்றாண்டுகளிலிருந்து, ஒரு மறைப்பணி திருஅவையாக, சீனா வரை சென்று நற்செய்தியை அறிவித்து, பல மறைசாட்சிகளை வழங்கியது, இக்காலத்திலும் தொடர்ந்து   மறைசாட்சிகளை வழங்கி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்தேய வழிபாட்டுமுறை திருஅவை, எப்போதும் மறைசாட்சிகளின் திருஅவையாக இருந்து வருகின்றது என்றும், ஈராக்கில் முஸ்லிம் குடிமக்களும் துன்பங்களை அனுபவிக்கின்றனர் மற்றும், தங்கள் வாழ்வை இழக்கின்றனர் என்றும், தன் மடலில் கூறியுள்ளார், கர்தினால் சாக்கோ.

ஈராக்கில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் துன்புறுவது, நல்லதொரு வருங்காலத்திற்கு, நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், இத்திருஅவை, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், உலகளாவிய திருஅவைக்கு, மாபெரும் அடையாளமாக உள்ளது எனவும், தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டிலிருந்து கல்தேய வழிபாட்டுமுறை திருஅவையின் தலைவராகப் பணியாற்றி வருகின்ற, கர்தினால் சாக்கோ அவர்கள், அத்திருஅவையின் ஆண்டுக் கூட்டம் தொடங்கிய ஆகஸ்ட் 4, இஞ்ஞாயிறன்று, இம்மடலை திருத்தந்தைக்கு அனுப்பியுள்ளார்.

ஒரு வாரம் நடைபெறும் இந்த ஆண்டுக் கூட்டத்தில், முதன்முறையாக, பொதுநிலையினர் பங்குபெற்று வருகின்றனர்.(CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2019, 16:07