தேடுதல்

Vatican News
கும்பலாக அடித்துக் கொல்பவர்களுக்கு எதிராகப் பேரணி கும்பலாக அடித்துக் கொல்பவர்களுக்கு எதிராகப் பேரணி 

கும்பலாக அடித்துக் கொல்பவர்களுக்கு கடும் தண்டனை

கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடுவது, அடித்து கொலை செய்வது ஆகியவற்றை தடை செய்வதற்கு சட்டம் மட்டும் போதாது, இத்தகைய குற்றங்கள் தவிர்க்கப்பட, மதிப்பீட்டு கல்வி வழங்கப்படல் அவசியம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

எவ்வித விசாரணையுமின்றி கும்பலாகச் சேர்ந்து கொலை செய்தலையும், வன்முறையையும் தடை செய்யும் நோக்கத்தில், இராஜஸ்தான் அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை வரவேற்றுள்ளனர், திருஅவை அதிகாரிகள்.

பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஆகஸ்ட் 5, இத்திங்களன்று, இராஜஸ்தான் மாநில அரசு, இச்சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

இந்து மதத்தில் போற்றப்படும் பசுக்களைக் காப்பாற்றுவதோடு தொடர்புடைய கொலைகளே பெரும்பாலும் அதிகரித்துவரும் சூழலில், இத்தகைய புதிய சட்டம் இன்றியமையாதது என்று, ஜெய்ப்பூர் ஆயர் ஆசுவால்டு லேவிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம், மொழி, உணவு பழக்கவழக்கம், பாலியல் தொடர்பு, அரசியல் பிணைப்பு போன்றவைகளின் அடிப்படையில், கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடுவது, அடித்து கொலை செய்வது ஆகியவற்றை தடை செய்வதற்கு சட்டம் மட்டும் போதாது, அத்துடன், இத்தகைய குற்றங்கள் தவிர்க்கப்பட, மதிப்பீட்டு கல்வி வழங்கப்படல் அவசியம் என்றும், ஆயர் லேவிஸ் அவர்கள், யூக்கா செய்தியிடம் தெரிவித்தார்.

வெறுப்பு செய்தியை பரப்பும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், அரசியல் தலைவர்கள், வெறுப்பையும், காழ்ப்புணர்வையும் ஊக்குவிக்கும் அறிக்கைகளைத் தவிரக்க வேண்டும் என்றும், ஜெய்ப்பூர் ஆயர் கூறினார்.

இப்புதிய ட்டத்தின்கீழ், கும்பலாகச் சேர்ந்து அடித்துக் கொலைசெய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ஐந்து இலட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகின்றது. வன்முறையால் காயப்படுத்துகின்றவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு இலட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகின்றது. (UCAN)

பசுக்களைக் கொல்தல் அல்லது விற்பனை செய்தல் உட்பட பசுவதை தொடர்புடைய   பல்வேறு தடை சட்டங்கள், இந்தியாவின் 29 மாநிலங்களில், 20ல் அமலில் உள்ளன.

07 August 2019, 16:17