AICU அமைப்பின் நூறாம் ஆண்டு நிகழ்வு AICU அமைப்பின் நூறாம் ஆண்டு நிகழ்வு  

AICU அமைப்புக்கு வயது நூறு

1919ம் ஆண்டில் நடைபெற்ற அனைத்திந்திய கத்தோலிக்க கருத்தரங்கின் பலனாக, 1930ம் ஆண்டில், AICU அமைப்பு உருவாக்கப்பட்டது. இது, இந்தியாவின் ஏறத்தாழ 1 கோடியே 60 இலட்சம் கத்தோலிக்கரைக் குறிக்கும் அமைப்பாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

AICU எனப்படும், மிகப் பழமையான அனைத்திந்திய கத்தோலிக்க பொதுநிலையினர் அமைப்பு உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவு நிகழ்வில், அரசியல் மற்றும், சமுதாயநலத் தலைவர்கள் கலந்துகொண்டு, இந்தியாவின் சமய மற்றும், கலாச்சார பன்மைத்தன்மையை பாராட்டிப் பேசினர்.

இந்நிகழ்வில் டெல்லி பேராயர் அனில் கூட்டோ, ஆக்ரா பேராயர் ஆல்பர்ட் டி சூசா, பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ, லக்னௌ ஆயர் ஜெரால்டு மத்தியாஸ் ஆகிய நால்வர் உட்பட, பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.    

ஆகஸ்ட் 24, கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய, புது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், அனைத்திந்திய கத்தோலிக்க அமைப்பின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி, சமுதாயத்தின் பல்சமயத்தன்மை காக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

இந்திய உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள் உரையாற்றுகையில், இந்தியா, கலாச்சார மற்றும், மத அளவில், பல்வகை மக்களைக் கொண்டதும், மாநிலங்களைக் கொண்டதுமான ஒரு நாடு என்று கூறினார்.

இந்திய கத்தோலிக்கர், சனநாயக மற்றும் சமயச்சார்பற்ற விழுமியங்கள் கொண்ட அரசியலமைப்புக்கு எப்போதும் ஆதரவாகச் செயல்பட வேண்டுமென்று, இந்நிகழ்வில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

2019ம் ஆண்டில், சமயத்தை அடிப்படையாகக் கொண்ட 160 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று, சுதந்திரப் பாதுகாப்பு கூட்டமைப்பின் இயக்குனர் தெஹ்மினா அரோரா அவர்கள் குறிப்பிட்டார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2019, 15:36