தேடுதல்

Vatican News
காஷ்மீரில் பதட்டநிலை காஷ்மீரில் பதட்டநிலை  (ANSA)

காஷ்மீருக்காக அனைவரும் செபியுங்கள்

காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா. நிறுவனத்தில் இரகசிய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளவேளை, நாடுகளில் அமைதி நிலவ செபிக்குமாறு எல்லாருக்கும் அழைப்பு - பிரிந்த கிறிஸ்தவ சபை ஆயர் டி சூசா

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

காஷ்மீருக்குரிய சிறப்பு தகுதியை இந்திய நடுவண் அரசு இரத்து செய்ததைத் தொடர்ந்து,  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயுள்ள எல்லையில் பதட்டநிலைகள் உருவாகியுள்ளவேளை, காஷ்மீருக்காகச் செபியுங்கள் என்று, உலகினர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார், காஷ்மீர், பிரிந்த கிறிஸ்தவ சபை ஆயர் ஜோசப் டி சூசா.

காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் இரகசிய ஆலோசனை கூட்டம் நடந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ள ஆயர் டி சூசா அவர்கள், நாடுகளில் அமைதி நிலவ வேண்டுமென்று, அமைதியின் இளவரசராம் கிறிஸ்துவிடம் செபிக்குமாறு, கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய அரசின் காஷ்மீர் குறித்த தீர்மானம், பாகிஸ்தானோடு ஏற்கனவே நிலவும் பதட்டநிலைகளை மேலும் கிளறிவிட்டுள்ளது என்றுரைத்துள்ள, நல்லாயன் பிரிந்த கிறிஸ்தவ சபை ஆயர் டி சூசா அவர்கள், இதனை, பாகிஸ்தான் பிரதமர், உலகளாவிய விவகாரமாக அச்சுறுத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1965ம் ஆண்டுக்குப்பின், தற்போது முதல்முறையாக, ஐ.நா. பாதுகாப்பு அவை, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்துள்ளது. இந்தக் கூட்டமுமே, சீனாவின் ஆதரவில், பாகிஸ்தான் அரசின் விண்ணப்பத்தின்பேரில் நடைபெற்றுள்ளது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள், சீனாவுடன் பெரிய அளவில் வர்த்தகம் செய்வதற்கு, புதிய சில்க் பாதை உள்கட்டமைப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

17 August 2019, 15:13