தேடுதல்

இந்தியாவில் வெள்ளத்தால் பாதிப்பு இந்தியாவில் வெள்ளத்தால் பாதிப்பு 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருஅவை உதவி

தலத்திருஅவை, வெள்ள நிவாரணப் பணிகளில் முழுவீச்சுடன் இறங்கியுள்ளது – கேரள காரித்தாஸ் தலைவர் அ.பணி ஜார்ஜ் வெட்டிகட்டில்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கேரளாவில் பெய்த கனத்த பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும், மீட்புப்பணிகளையும் ஆற்றி வருகின்றது, கேரள காரித்தாஸ் அமைப்பு.

கேரள மாநிலத்தின் 32 மறைமாவட்டங்களின் சமுதாயநலப் பணிகளை ஒருங்கிணைக்கும் கேரள காரித்தாஸ் அமைப்பின் தலைவர் அருள்பணி ஜார்ஜ் வெட்டிகட்டில் அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், துயர்துடைப்பு பணிகளில் திருஅவை முழுவீச்சுடன் இறங்கியுள்ளது என்று தெரிவித்தார். 

இந்தியாவின் தெற்கு மற்றும், மேற்குப் பகுதி மாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், அம்மாநிலங்களின் பெரும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அப்பகுதிகளில் இடம்பெறும் பாதுகாப்பு மற்றும், நிவாரணப் பணிகளில் திருஅவை நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுகின்றன எனவும், அருள்பணி வெட்டிகட்டில் அவர்கள் தெரிவித்தார்.

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பெய்த கனமழையால் 12 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 12, இத்திங்கள் நிலவரப்படி, கேரளாவில் கனமழையால் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதே மாநிலத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெய்த கனமழை மற்றும், வெள்ளத்தால், 480 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இம்மக்களுக்கு தனது அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2019, 14:46