தேடுதல்

Vatican News
2008ம் ஆண்டு கந்தமாலில், இந்து தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளின் விளைவுகள் 2008ம் ஆண்டு கந்தமாலில், இந்து தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளின் விளைவுகள் 

கந்தமால் கிறிஸ்தவர்கள் ஒப்புரவுக்காக செபித்தனர்

கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிராக வன்முறை கட்டவிழ்க்கப்பட்ட நினைவு நாளான ஆகஸ்ட் 25ம் தேதி, கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை கட்டவிழ்க்கப்பட்ட பத்தாவது ஆண்டு நினைவு நாளில், கத்தோலிக்கர், அமைதி மற்றும், ஒப்புரவுக்காக, கடவுளிடம் மன்றாடினர். 

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, கந்தமாலில், இந்து தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக, இஞ்ஞாயிறன்று, புவனேஷ்வர் நகரின் புனித வளனார் பள்ளி வளாகத்தில், கட்டக்-புவனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா தலைமையில், 13 ஆயர்கள் மற்றும், 90க்கும் அதிகமான அருள்பணியாளர்கள் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினர்.

கடவுள் நம்மிலும், திருஅவையின் வாழ்விலும், அற்புதமான வழிகளில் செயல்படுகிறார் என்றும், கந்தமால் மறைசாட்சிகளின் இரத்தம், ஒடிசா திருஅவைக்கும், நாட்டிற்கும், பல்வேறு ஆசீர்வாதங்களைக் கொணர்ந்துள்ளது என்று, பேராயர் பார்வா அவர்கள், இத்திருப்பலியில் கூறினார்.

மேலும், Phulbani பங்குத்தந்தை அருள்பணி Udayanath Bishoyi அவர்கள் கூறுகையில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மதவெறி தாக்குதல்களில் பலியானவர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க இயலாது என்று தெரிவித்தார்.

இத்திருப்பலியின் இறுதியில், அருள்பணி Udayanath Bishoyi அவர்கள் எழுதிய, “Flames of Faith in Kandhamal” என்ற நூல் வெளியிடப்பட்டது.

மேலும், இந்தியாவில் மறைப்பணியாற்றிய போலந்து நாட்டைச் சேர்ந்த இறைவார்த்தை சபையின் அருள்பணி Marian Zelazek அவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்தும் பணி, இத்திருப்பலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவர், 2006ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி, கட்டக்-புவனேஷ்வரில் இறைபதம் அடைந்தார்.  

கந்தமாலில் கொல்லப்பட்ட மறைசாட்சிகளான அக்கிறிஸ்தவர்களின் ஆழ்ந்த விசுவாசம், இயேசு கிறிஸ்துவில் ஆழமான பற்றுறுதியில் தொடர்ந்து வாழ்வதற்கு உதவி வருகின்றது என்றும், இத்தகைய துன்பத்தில் ஆண்டவரின் இரக்கம் வெளிப்படுகின்றது என்றும், கந்தமால் பகுதி பங்குத்தந்தையர் கூறினர்.

2008ம் ஆண்டில், கந்தமாலில் இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதல்கள், இந்தியாவில், 300 ஆண்டுகள் வரலாற்றில் மிகக் கடுமையாக நடைபெற்ற வன்முறை என்று கூறப்படுகின்றது. இவற்றில், நூறு பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் மற்றும், 64 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்தனர். குறைந்தது 6,500 வீடுகளும், 395 ஆலயங்களும் அழிக்கப்பட்டன. பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாயினர். இன்றும், ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இன்னும் கந்தமால் திரும்பவில்லை.

27 August 2019, 15:29