ஸ்ரீநகரில் ஊரடங்குச் சட்டம் ஸ்ரீநகரில் ஊரடங்குச் சட்டம் 

காஷ்மீர் விவகாரத்தில் அமைதி, ஒப்புரவு அவசியம்

காஷ்மீர் குறித்த மத்திய அரசின் தீர்மானம், இந்திய அரசுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே, இடைவெளியை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பதட்டம் மற்றும் துன்பநிலையில், மீண்டும் வாழ்கின்ற காஷ்மீர் மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கின்றோம், அதேநேரம், காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான தீர்வு காணப்படுமாறு வலியுறுத்துகின்றோம் என, இந்திய ஆயர் பேரவை சார்பில் வலியுறுத்தியுள்ளார், இராஞ்சி துணை ஆயர் தியோடர் மஸ்கரீனஸ்.

இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர் பணியை தற்போது நிறைவு செய்துள்ள, ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், காஷ்மீரின் தற்போதைய நிலைமை, மிகவும் இக்கட்டானது, மற்றும், அப்பகுதியில் அமைதியும், ஒப்புரவும் நிலவ, அனைவரின் முயற்சி தேவைப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.

காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து, இந்திய கத்தோலிக்க சமுதாயம் மிகுந்த அக்கறையோடும், கவனத்தோடும் நோக்கி வருகின்றது என்று, பீதேஸ் செய்தியிடம் தெரிவித்துள்ள ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், காஷ்மீரின் தன்னாட்சியைப் புறக்கணிக்கும்   இந்திய அரசின் தீர்மானம், அப்பகுதியில் பதட்டத்தையும், போராட்டங்களையும் உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

மேலும், பீதேஸ் செய்தியிடம் பேசிய, ஜம்மு-காஷ்மீர் மறைமாவட்ட பேச்சாளர் அருள்பணி ஷாஜூ சாக்கோ அவர்கள், காஷ்மீர் குறித்த மத்திய அரசின் தீர்மானம், இந்திய அரசுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே, இடைவெளியை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்று தெரிவித்தார்.

தீவிரவாத மற்றும் ஜிகாதி அமைப்புகள், காஷ்மீர் பகுதியில், ஏற்கனவே தாக்குதல்களை திட்டமிட்டுள்ளன, இச்சூழலில், அரசின் இத்தீர்மானம், காஷ்மீர் பகுதியில், நிலையற்றதன்மையை அதிகரித்து, இனவாத வன்முறை, குறிப்பாக, இளையோர் மத்தியில் வன்முறை ஏற்படக்கூடிய ஆபத்தும் உள்ளது என்று, அருள்பணி சாக்கோ அவர்கள் எச்சரித்தார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2019, 15:36