தேடுதல்

Vatican News
மொராந்தி பாலம்  விபத்தில் பலியானவர்களுக்கு முதலாண்டு நினைவு மொராந்தி பாலம் விபத்தில் பலியானவர்களுக்கு முதலாண்டு நினைவு  (ANSA)

ஜெனோவா விபத்தில் பலியானவர்களுக்கு முதலாண்டு நினைவு

ஜெனோவாவின் மொராந்தி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள், இறைவனின் கரங்களில், வாழ்கின்றனர் என்பதை, நம் விசுவாசக் கண்கள் கொண்டு காண்போம் - கர்தினால் பஞ்ஞாஸ்கோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, ஜெனோவாவின் மொராந்தி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்கள், இறைவனின் கரங்களில், நித்திய ஒளியில் வாழ்கின்றனர் என்பதை, நம் விசுவாசக் கண்கள் கொண்டு காண்போம் என்று, ஜெனோவா பேராயர், கர்தினால் ஆஞ்செலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள், இப்புதனன்று வழங்கிய மறையுரையில் கூறினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காலை 11.36 மணிக்கு மொராந்தி பாலம் இடிந்து விழுந்ததில், இறந்த 43 பேரின் முதல் ஆண்டு நினைவாக, ஆகஸ்ட் 14, இப்புதனன்று, அப்பாலத்தின் அருகிலேயே நிறைவேற்றப்பட்ட திருப்பலியை, கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 14ம் தேதி, ஜெனோவா நகரைச் சூழ்ந்த கொடிய துயரம் என்ற இருளை வெல்வதற்கு, நாம் ஒருவர் ஒருவர் மீது காட்டிய பரிவும், கடமை உணர்வைத் தாண்டி, இந்நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளியிலிருந்தும் நம்மை வந்தடைந்த உதவிகளும் பெரும் உதவியாய் இருந்தன என்று கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

"இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று இன்றைய நற்செய்தியில் இயேசு வழங்கும் உறுதி, நமக்கு இன்று சிறப்பாக எதிரொலிக்கிறது என்று கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆகஸ்ட் 14, இப்புதனன்று, ஜெனோவா உயர் மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும், இவ்விபத்தில் இறந்தோருக்கு சிறப்பு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன என்றும், பாலம் இடிந்து விழுந்த 11.36 மணிக்கு, இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் அனைத்து ஆலயங்களிலும், மணிகள் ஒலிக்கப்பட்டன என்றும், ஜெனோவா உயர் மறைமாவட்டம் அறிவித்தது.

14 August 2019, 14:46