அருணாச்சல மாநிலத்தில் புதிய ஆலயம் 07122018 அருணாச்சல மாநிலத்தில் புதிய ஆலயம் 07122018  

இளையோர் பள்ளிக்குச் செல்வது வருங்காலத்தை சிறப்பாக்கும்

தலத்திருஅவை, கல்வியில் மட்டுமல்ல, நலவாழ்வு, உள்ளூர் கலாச்சாரத்தையும், மொழிகளையும் காத்து வளர்த்தல் போன்றவற்றிலும் மிகப்பெரும் கடமையைக் கொண்டுள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நல்லதோர் வருங்காலத்திற்கு, பள்ளிக்கூடம் மிகவும் இன்றியமையாதது என்றும், தங்களின் வருங்காலத்தை சிறப்பாக அமைப்பதற்கு, இளையோர் கல்வி கற்க வேண்டும் என்றும், அருணாச்சல மாநில திருஅவை கூறியுள்ளது.

இந்தியாவில் தேசிய இளையோர் நாள் கடைப்பிடிக்கப்பட்ட கடந்த ஞாயிறன்று, (ஆகஸ்ட் 11) பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்ட எழுபது இளையோரை ஒன்றிணைத்து, கல்வியின் சிறப்பை எடுத்துரைத்தது, அம்மாநிலத் திருஅவை.

வடகிழக்கு இந்தியாவிலுள்ள இம்மாநிலத்தின் மியாவ் மறைமாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு குறித்து, ஆசியச் செய்தியிடம் பேசிய, அம்மறைமாவட்ட பேச்சாளர், அருள்பணி பெலிக்ஸ் அந்தோனி அவர்கள், தலத்திருஅவை, கல்வியில் மட்டுமல்ல, நலவாழ்வு, உள்ளூர் கலாச்சாரத்தையும், மொழிகளையும் காத்து வளர்த்தல் போன்றவற்றிலும், மிகப்பெரும் கடமையைக் கொண்டுள்ளது என்று கூறினார். 

மியாவ் மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் பள்ளிப்பரம்பில் அவர்கள் எடுத்துள்ள இம்முயற்சி, அருணாச்சல மாநிலத்தில் எழுத்தறிவின்மையை அகற்றும் என்ற, நம்பிக்கையை தெரிவித்துள்ள அருள்பணி பெலிக்ஸ் அந்தோனி அவர்கள், இளையோர் பள்ளிகளுக்குச் செல்வது, அவர்களின் வருங்காலத்திற்கு நல்லது என்றும் கூறினார்.

அருணாச்சல மாநிலத்தில், 66 விழுக்காட்டு இளையோர் பள்ளிக்குச் செல்கின்றனர். அம்மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில், ஏறத்தாழ 50 விழுக்காட்டினர், பள்ளி செல்வதை இடையிலே நிறுத்தி விடுகின்றனர். (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2019, 14:59