தேடுதல்

புனித பிரான்சிஸ் சவேரியார் புனித பிரான்சிஸ் சவேரியார் 

சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறித்தவமும் சீர்திருத்தமும் பகுதி-15

புனிதர் பிரான்சிஸ் சவேரியார், இந்தியாவில், கிறிஸ்தவம் வளரவும், தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்

மேரி தெரேசா - வத்திக்கான்

பெருங்கடல்கள் வழியாக, ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு, முதன்முதலில் வந்தவர், போர்த்துக்கீசிய நாடுகாண் பயணி வாஸ்கோட காமா (Vasco da Gama). இவரின் இப்பயணமே பெருங்கடல்கள் வழியாக, அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்தியப் பெருங்கடலையும் தொடர்புபடுத்திய, ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைத்த, உலகின் மேற்கையும் கிழக்கையும் இணைத்த முதல் பயணமாகும். வாஸ்கோட காமாவின் இந்த பெருங்கடல் பாதை கண்டுபிடிப்பு, உலகளாவிய பேரரசுக்கும், போர்த்துக்கீசிய பேரரசு, ஆசியாவில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்துவதற்கும் வழிகளைத் திறந்துவிட்டது.  இவர் இந்தியா சென்று, மீண்டும் போர்த்துக்கல் திரும்பிய பெருங்கடல் பயணமே, உலகில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட, அதிக நாள்கள் கொண்ட பெருங்கடல் பயணம் என்று சொல்லப்படுகிறது. வாஸ்கோட காமா அவர்கள், போர்த்துக்கல் அரசரின் உதவியுடன், 1497ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி, நான்கு கப்பல்கள் நிறைய 170 மாலுமிகளுடன், இந்தியாவுக்கும், உலகின் கிழக்குப் பகுதிக்கும் பெருங்கடல் பயணத்தைத் தொடங்கினார். புயலிலும், மழையிலும், வெயிலிலும் பல மாதங்கள் அடிபட்டு, பல கடல்கள் தாண்டி 1498ம் ஆண்டு மே 20ம் தேதி, கேரளாவின் கோழிக்கோடு கடல் பகுதியில் சென்றிறங்கினார்.

அப்பகுதியில் வெளிநாட்டு கப்பல் ஒன்று வந்திறங்கியதை அறிந்த கோழிக்கோடு அரசர் Zamorin அவர்கள், மிகுந்த களைப்போடு இருந்த, வாஸ்கோடகாமா குழுவினருக்கு, குறைந்தது மூவாயிரம் ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் இனிய வரவேற்பளித்தார். அந்தக் குழுவினரிடம், இங்கு வருவதற்கு காரணம் என்னவென அரசர் கேட்க, கிறிஸ்தவர்களையும், விளைபொருள்களையும் தேடி வந்தேன் என்றார் வாஸ்கோட காமா. ஏனெனில் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவராகிய புனித தோமையார், முதல் நூற்றாண்டிலேயே, இந்தியா வந்து நற்செய்தியை அறிவித்து, சென்னையில் மறைசாட்சியாக உயிர்துறந்தார் என்பதை, கத்தோலிக்க நாடாகிய போர்த்துக்கல் அறிந்திருந்தது. ஆனால் கோழிக்கோடில், வாஸ்கோட காமா கண்ட இந்து மதம், அவருக்குப் புதிதாக இருந்தது, கோழிக்கோடு அரசர் இந்துமதத்தைச் சார்ந்தவர். முஸ்லிம்களும் அப்பகுதியில் இருந்தனர். மலயாளக் கரையின் செழிப்பையும், மக்களின் வரவேற்பையும், இந்திய விளைபொருள்களின் மதிப்பையும் கண்டு அக்குழுவினர் மலைத்துப்போயினர். அப்பகுதியில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, தங்கள் கப்பல்களில் இந்திய பொருள்களை நிரப்பிக்கொண்டு, மிகுந்த ஆர்வத்துடன் மீண்டும், தனது குழுவினருடன் தாயகம் திரும்பினார் வாஸ்கோட காமா. இவர் மூன்று கடல்பயணங்களை இந்தியாவுக்கு மேற்கொண்டார். இவரின் இந்தியப் பயணங்களைத் தொடர்ந்து, போர்த்துக்கீசியக் கொடிகளைத் தாங்கிய கப்பல்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கின. 1534ம் ஆண்டுக்குள்ளாக, மேற்குக் கரையில், பசீன், கோவா, கொச்சி, கொல்லம் போன்ற இடங்களிலும், கிழக்குக் கரையில், முத்துக்குளித் துறையாகிய தூத்துக்குடி, தென்கிழக்கு கடற்கரைப் பகுதியான கோரமண்டலக்கரையில் பல இடங்களிலும், போர்த்துக்கீசியர் பல வர்த்தகத் தளங்களை அமைத்தனர்.

இந்தியாவில் போர்த்துக்கீசிய வணிகம்  

போர்த்துக்கல் நாடு, அந்நாட்டு அரசருக்கு, இந்தியாவின் செல்வங்களைக், கொணர்வதற்காக, வர்த்தகர்களை அனுப்பியபோதே, இந்திய மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிப்பதற்கு, மறைப்பணியாளர்களையும் அனுப்பியது. ஏனெனில் போர்த்துக்கல் ஒரு கத்தோலிக்க நாடாக இருந்தது. அந்நாட்டு வியாபாரிகள், இந்தியச் செல்வங்களைத் திரட்டுவதில் ஆர்வமாய்ச் செயல்பட்டதைப் போல, மறைப்பணியாளர்களும் மிகுந்த ஆர்வமுடன் கிறிஸ்துவை அறிவித்து வந்தனர். போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்களின் இப்பணி பற்றி அப்போதைய திருத்தந்தை 13ம் சிங்கராயர் அவர்கள், “போர்த்துக்கல்லின் கொடி, எல்லா இடங்களிலும் சிலுவையின் நிழலில் பறக்கிறது, போர்த்துக்கல்லின் வெற்றி, கிறிஸ்தவ சமயத்தின் வெற்றியாகும்” (நன்றி-வாளின் வெற்றிஅ.சகோ.கொரோனா ம.ஊ.ச.) என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முதலில் பிரான்சிஸ்கன் சபையினரும், சுவாமிநாதர் சபையினரும் இந்தியாவுக்கு வந்து நற்செய்தியை அறிவித்தனர். ஆயினும், அவர்களால் மறைப்பணியைத் தொடர முடியவில்லை. இதற்கு, போர்த்துக்கீசியிரின் அறநெறியற்ற வாழ்வும், முஸ்லிம்கள் விதித்த தடைகளுமே காரணம் எனச் சொல்லப்படுகிறது. அச்சபைகளுக்குப்பின், இயேசு சபையினர் இந்தியாவில் தங்களின் மறைப்பணியைத் தொடங்கினர். இச்சபையைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் சவேரியாரே, முதலில் இந்தியாவுக்கு வந்தவர். இவர் 1542ம் ஆண்டு, மே 6ம் தேதி, கோவா வந்திறங்கினார். ஏனெனில், போர்த்துக்கல் நாடு, உலகின் கிழக்குப் பகுதியில், கோவாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.

புனித பிரான்சிஸ் சவேரியார்

புனித பிரான்சிஸ் சவேரியார், 1506ம் ஆண்டு, ஏப்ரல் 7ம் நாள், இஸ்பெயின் நாட்டின் Navarre என்ற ஊரில், புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். அப்பகுதியில் பாஸ்கு மொழியே பேசப்பட்டது. இவரது தந்தை யுவான் தெயாசு அவர்கள், அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார். சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர். பிரான்சிஸ் சவேரியார், தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்து, தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். 1525ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ் பெற்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில், மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ம் ஆண்டு மெய்யியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் 1530ம் ஆண்டு முதல் 1534ம் ஆண்டு வரை, அதே கல்லூரியில் இறையியல் மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார். அச்சமயத்தில், "இனிகோ' எனப்படும், இலொயோலா இஞ்ஞாசியார், தனது 39வது வயதில், அங்கு கல்வி கற்க வந்தார். இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம், "பிரான்சிஸ், ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவருக்கு என்ன பயன்?'' என்ற, இயேசுவின் திருச்சொற்களைச் சொல்லி வந்தார். இந்த வார்த்தைகள் சவேரியாரின் வாழ்வையே திசை திருப்பின. இலொயோலா இஞ்ஞாசியாருடன் இணைந்தார் அவர். 1534ம் ஆண்டு இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கிய புனித இஞ்ஞாசியாருடன் இருந்த முதல் ஆறு தோழர்களில் புனித பிரான்சிஸ் சவேரியாரும் ஒருவர்.

பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஏழு தோழர்களும், கல்வியை முடித்து, புனித பூமிக்குச் செல்லும் நோக்கத்தில், இத்தாலியின் வெனிஸ் நகருக்கு வந்தனர். அந்நகரில், 1537ம் ஆண்டு, ஜூன் மாதம் 24ம் நாள், சவேரியார், அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார். வெனிஸ் நகரில் இவர்கள் தங்கியிருந்த சமயத்தில், இவர்களது போதனைகள் மற்றும் நோயாளிகள் மத்தியில் ஆற்றிய நற்பணிகளால், மத்திய இத்தாலியில் இவர்களது புகழ் பரவியது. பல கத்தோலிக்க அரசர்கள், இவர்களின் பணிகளை நாடினர். புதிதாக பலரும் இவர்களுடன் இணைந்தனர். புனித பூமிக்குச் செல்லும் ஆவல் நிறைவேறாததால், இஞ்ஞாசியார் தலைமையில், இவர்கள் அனைவரும் உரோம் நகர் வந்து, அப்போதைய திருத்தந்தை 3ம் பவுல் அவர்களிடம் தங்களை அர்ப்பணித்தனர். அதேநேரம், போர்த்துக்கல் அரசர் 3ம் ஜான் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், ஆசியாவில் தனது புதிய காலனி நாடுகளில் நற்செய்தியை அறிவிக்கவும், உழைப்பில் ஊக்கமுள்ள அருள்பணியாளர்களைத் தந்து உதவுமாறு திருத்தந்தையிடம் வேண்டினார். திருத்தந்தையின் விருப்பத்தின்பேரில், புனித இஞ்ஞாசியார், தனது தோழர்களில் ஒருவரை, ஆசியாவுக்கென தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர், நோயால் தாக்கப்படவே, அவருக்குப் பதிலாக, சவேரியாரைக் குறித்தார், இஞ்ஞாசியார். தனது தலைவர் குறித்த அடுத்த நாளே, அதாவது, 1540ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் நாள், சவேரியார், இந்தியாவுக்குச் செல்வதற்காக, உரோம் நகரிலிருந்து முதலில் லிஸ்பன் நகருக்குப் பயணமானார். திருத்தந்தை 3ம் பவுல் அவர்களும், 1540ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள், இயேசு சபையை, ஒரு துறவு சபையாக அங்கீகரித்தார்.

புனித சவேரியார், லிஸ்பன் நகரில் ஓராண்டு இறைப்பணி செய்த பின்னர், இந்தியாவிற்கு கப்பல் பயணத்தை மேற்கொண்டார். 1542ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி கோவாவை வந்தடைந்த அவர், முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும், பின்னர் கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார். குறிப்பாக, கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார். இங்கு கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று, அங்கு ஆட்கள் கூடியதும், அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளைக் கூறியும், நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். புனித பிரான்சிஸ் சவேரியார், மணப்பாட்டில் தங்கியிருந்த குகை, அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன, இன்றும் அவரின் புனித வாழ்வுக்குச் சான்றுகளாக உள்ளன. கடற்கரையில் உள்ள அந்தக் கிணற்று நீர், உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருப்பதை, திருப்பயணிகள் சுவைத்து புனிதப் பரவசம் அடைகின்றனர். (உதவி-இணையதளங்கள்)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2019, 11:59